‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது
‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை:
சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக்கவி’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காப்பியத்தை 1937ஆம் ஆண்டில் இயற்றினார். ‘பில்கணியம்’ என்னும் வடமொழி நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது என அவரே குறிப்பிட்டுள்ளார்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவர் ‘சீவகசிந்தாமணி காப்பியத்தைப் படைத்துத் தழுவல் இலக்கியம் என்ற புதிய போக்கைத் தமிழ் இலக்கியத்தில் தொடக்கி வைத்தார். பிறமொழிக் காப்பியங்களைத் தமிழ் இலக்கிய – இலக்கண மரபுகளுக்கேற்ப வடிவமைக்க வழிகாட்டினார்.
சிந்தாமணியைப் பின்பற்றி குண்டலகேசி, நாககுமாரகாவியம், உதயணகுமாரகாவியம், நீலகேசி, கம்பராமாயணம், மகாபாரதம், நளவெண்பா போன்ற தழுவல் இலக்கியங்கள் இடைக்காலத்தில் எழுந்தன.
திருத்தக்கத்தேவர், கம்பர் முதலான பெருங்கவிஞர்களின் வழியைப் பின்பற்றி பாவேந்தர் அவர்கள் வடமொழியில் இயற்றப்பட்ட பில்கணியம் என்னும் காப்பியத்தைத் தழுவி புரட்சிக்கவி என்னு
ம் குறுங்காவியத்தைப் படைத்தார். தமிழ் பரபிற்கேற்பவும், நளசுவைச் சொட்டச் சொட்டவும் அவர் எழுதியுள்ள பாங்கு அது ஒரு தனித்தமிழ் காப்பியமாகவே திகழ்ந்து இன்றும் நமது உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறது.
பாவேந்தரின் அந்தக் காப்பியத்தை நாடக வடிவில் புலவர். சா. பன்னீர்செல்வம் அழகுற வடித்துள்ளார். சுவையினுக்குச் சுவை கூட்டியதைப் போல, இந்நாடகக்காப்பியம் அமைந்துள்ளது.
பொன்தகட்டில் வைரமணிகளைப் பொறித்தால்போல பாவேந்தரின் புரட்சிக்கவி காப்பியத்திலுள்ள வரிகளை தனது நாடகக் காப்பியத்தில் ஆங்காங்கே இணைத்திருப்பது சிறப்பினுக்குச் சிறப்புச் சேர்க்கின்றது.
மூலநூலின் கருத்தும், அமைப்பும், சுவையும் கொஞ்சமும் கெடாதவாறு வழிநூல் அமைவது அருமையிலும் அருமையாகும். அதிலும் பாவேந்தர் அவர்களின் குறுங்காப்பியத்தை. விரிவுபடுத்தி நாடகக் காப்பிய வடிவத்தில் ஆக்குவது என்பது அரிய செயலாகும். இம்முயற்சியில் துணிவுடன் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார் புலவர் பன்னீர் செல்வம்.
கதையின் அமைப்பிலோ கருத்தின் அமைப்பிலோ எவ்வித மாற்றம் செய்யாத வண்ணமும், அதே வேளையில் நாடக வடிவத்திற்கேற்ற வகையில் விரிவுபடுத்தியும், புதிய பாத்திரங்களைப் புகுத்தியும் இலக்கியச்சுவையுடன் கூடிய அற்புதமானதொரு நாடகக் காப்பியத்தைப் படைத்து அன்னைத் தமிழுக்குப் பெருமை சேர்ந்துள்ளார்.
பாவேந்தர் பாடல்களிலும், சங்கப்பாடல்களிலும் தோய்ந்த நூலாசிரியரின் புலமைத் திறன் நூல் நெடுகிலும் பளிச்சிடுகிறது. படிப்போரை இன்புறவைக்கும் இலக்கிய நயத்துடனும், நடிப்போருக்கு ஏற்ற நாடக நயத்துடனும் இந்நூல் அமைந்துள்ளதைப் பாராட்டுகிறேன். தமிழர்கள் இந்த முயற்சியைத் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.
சென்னை பழ.நெடுமாறன்
15.10.2004
Comments
Post a Comment