Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13

 அகரமுதல



(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12தொடர்ச்சி)

பழந்தமிழ்

4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி

சொல்              பழம்பொருள்            புதுப்பொருள்

 அகம்                     உள்,மனம்                கருவம்

 அகலம்                மார்பு                        இடத்தின் பரப்பு

 அவல்                    பள்ளம்                        தின்னும் அவல்

 இயம்புதல்        ஒலித்தல்                  சொல்லுதல்

 கண்ணி        அடையாள மாலை      வலை

 கருவி                  தொகுதி                   ஆயுதம்

 கிழவன்       உரியவன்              முதியவன்

 கோடை      மேல்காற்று                 வெயிற்காலம்

 சாறு                  திருவிழா                இரசம்

 செத்தல்     கருதல்                            சாதல்

 தஞ்சம்              எளிமை                        அடைக்கலம்

 நன்று                பெரிது                          நல்லது

 நம்பு                 விருப்பம்                நம்புதல் (hope)

 விருந்தினர்      புதியவர்                 உறவினர்

 வம்பு                    நிலையின்மை         சிறு சண்டை

 வாங்குதல்          வளைத்தல்               பெறுதல்

  இவ்வாறு சொற்கள் பொருள் தரும் முறையில் மாற்றம் உறுவது விரைவில் நிகழக் கூடியது அன்று. பல நூற்றாண்டுகள் இடையிட்டு நிகழும். பல்லாயிரக்கணக்கான சொற்கள் நிறைந்த மொழியில் இவ்வாறு மாற்றத்திற்காளாகும் சொற்கள் மிக மிகக் குறைவு. ஆதலின் இம் மாற்றங் கருதிப் பழந்தமிழ் மறைந்துவிட்டது என்று சொல்லுதல் தவறாகும். உயிருள்ள மொழிகளில் இம் மாற்றம் தவிர்க்க முடியாதது. இம் மாற்றம் விரைந்து நிகழுமேல், அனைத்துச் சொற்களும் மாற்றத்திற்கு ஆளாகுமேல், நூற்றாண்டுதோறும் மொழியும் வேறுபடும். ஆனால் தமிழ் அவ்வாறு மாறுதலுக்கியலாத வகையில் பண்பட்ட இலக்கணமும் வளமுற்ற இலக்கியமும் பெற்றுள்ளது. இலக்கணம், இலக்கியம் இல்லாத மொழிகள் விரைந்து மாறுதல் உற்று நூற்றாண்டுதோறும் மாண்டு பிறக்கின்றன.

 சொல் வடிவ மாற்றம்

  சொற்பொருள் மாறுதல் உறுவது போன்றே சொல்லின் வடிவமும் மாறுதல் அடையும். பேசுவோர் திருத்தமாகப் பேச வேண்டுமென்ற உறுதிப்பாடு பூண்டிருப்பரேல் சொல் வடிவம் சிதையாது. கற்றவர்களினும் கல்லாதாரே  சொல் வடிவத்தைச் சிதைக்கின்றனர். போய் வருகின்றேன் என்பதைப்  ‘போயிட்டு வாரேன்’ என்கின்றனர். அவர்கள் என்பதை ‘அவுங்க, அவுக’ என்கின்றனர். வாழைப்பழம் என்பதை ‘வாயப்பயம்’ என்கின்றனர். இழுத்துக்கொண்டு என்பதை ‘ஈஸ்துக்கினு’ என்கின்றனர். மொழியாராய்ச்சியாளர் சிலர் இவற்றைப் பொருட்படுத்தி இவைதான் உயிருள்ள மொழி; இவ்வாறுதான் எழுதவேண்டும் என்று பறைசாற்றுகின்றனர்.

  இவ்வாறு வரையறையின்றிச் சொற்களைச் சிதைத்து வழங்குதலை ஏற்றுக்கொள்வதானால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழியைப் பேசுபவராவார். ஒருவர் கருத்து ஒருவர்க்குப் புலப்படாமல் மொழியின் பலன் கிட்டாதாகிவிடும். அதனாலேயே நம் முன்னோர் வழக்கு மொழிக்கும் வரையறை ஏற்படுத்தினர். வழக்கு மொழி என்பது சிதைந்த கொச்சை மொழியன்று. மொழித்திறன் அற்றோர் பேசுவதை வழக்கு மொழிக்கு உரியதாகக் கொள்ளலும் கூடாது.

            வழக்குஎனப் படுவது உயர்ந்தோர் மேற்றே

            நிகழ்ச்சி அவர்கட்டாக லான

            (தொல்  பொருள்  647)

என்பர் ஆசிரியர் தொல்காப்பியர். கற்றோர் வழங்கும் மொழிகளுள் சொற்கள் உருமாறுதல் உண்டு.  அம் மாற்றங்களை இலக்கணப் போலி, மரூஉ என்று அழைப்பர்.

  இல் முன் என்பது  முன்றில் எனவும், நகர்ப்புறம் என்பதுப் புறநகர் எனவும் வழங்குதல் இலக்கணப் போலியாகும்.

  அருமருந்தன்ன பிள்ளை என்பது ‘அருமந்தபிள்ளை’ என்றும், சோழநாடு என்பது ‘சோணாடு’ என்றும் வழங்குதல் மரூஉ மொழிகளாகும். தாமரை என்பது ‘மரை’ எனவும், ஆகாயம் என்பது ‘காயம்’ எனவும், ஓந்தி என்பது ‘ஓதி’ எனவும், போழ்து என்பது ‘போது’ எனவும், நீலம் என்பது ‘நீல்’ எனவும், வாழிய என்பது ‘வாழி’ எனவும், ஆய்தல் என்பது ‘ஆராய்தல்’ எனவும், யாது என்பது ‘யாவது’ எனவும் வழங்கும். இவையெல்லாம் சொற்களின் வடிவ மாற்றங்களே. இவற்றை வரையறைக்கு உட்படுத்தாவிட்டால் இவை பல்கி மொழியின் சிதைவை விரைவுபடுத்தும். தமிழ் பல மொழிகளாகப் பிரிந்தமைக்கு இவையும் காரணங்களாம். ஆதலின் சொற்சிதைவைத் தடுத்தல் மொழியறிஞர் கடனாகும். திருத்தமாகப் பேசவும் எழுதவும் மக்களை மொழியறிவு உள்ளவர்களாகச் செய்தல் வேண்டும்.

 கடன் பெறல்

   ஒரு மொழியைப் பேசுகின்ற மக்கள் பிறிதொரு மொழியைப் பேசுகின்ற மக்களுடன் தொடர்பு கொள்ளும்போது, இருசாரார் மொழிகளும் ஒன்றில் ஒன்று கலப்புறுதல் இயற்கை; தவிர்க்க முடியாதது. பண்பாட்டிலும் நாகரிகத்திலும் குறைபாடுடைய மக்கள் அவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ள மக்களோடு பழகுகின்றபோது அவர்களுடைய நாகரிகத்தையும் பண் பாட்டையும் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படலாம். அப்பொழுது அவைபற்றிய சொற்களையும் பயன்படுத்துவார்கள். ஓரினம் பிறிதோரினத்தை அடிமை கொள்ளுமேல், அடிமைப்பட்ட இனத்தின் மீது வென்ற இனம் தன் மொழியைச் சுமத்துவது தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் ஒன்றாகும்.

 இந்தியாவில் ஆரியர் வருகைக்குமுன் வாழ்ந்த தமிழினம் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் ஆரியர் இனத்தைவிடத் தாழ்வுற்று இல்லை. பல்வகையாலும் உயர்ந்த நாகரிகத்தையும் பண் பாட்டையும் தமிழினம் பெற்றிருந்தது என்பது ஆரிய நூல்களாலேயே அறியக்கூடும். ஆரிய இனம் பழந்தமிழினத்தை வென்று அதன்மீது தன் மொழியைக் கட்டாயப்படுத்திச் சுமத்தியது என்றும் கூறுவதற்கில்லை.

 தொடக்கத்தில் புதியதாக வந்த மக்களுக்கும் இங்கேயே நிலைத்து வாழ்ந்த மக்களுக்கும் போராட்டங்கள் நிகழ்ந்தன. பின்னர் இருசாராரும் ஒற்றுமையுற்று அமைதியாக வாழத் தொடங்கிவிட்டனர். புதியவருடன் கூட்டுறவு கொள்ள விரும்பாதவர்கள் தனித்து வாழ விரும்பி ஒதுங்கிவிட்டார்கள்.

  ஆரிய இனமும் தமிழினமும் கலந்து வாழத்தொடங்கிய பின்னர் இருவகையினர் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் கலப்பு நிகழ்ந்து, அக் கலப்பின் பயனாய்ப் புதிய பண்பாடும் நாகரிகமும் உருவாகத் தொடங்கியன. அதுவே இன்றுள்ள இந்தியப் பண்பாடு. இப் பண்பாட்டில் மிகுந்த அளவு தமிழருடையதென்றும் குறைந்த அளவு ஆரியருடையதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

 இவ்வாறே இருசாரார் மொழிகளிலும் கலப்பு ஏற்பட்டது. ஆரியம், இந்நாட்டுக்கு வரும்வரையில் ஏட்டில் எழுதப்படாத மொழியாகவே இருந்து வந்துள்ளது. பழந்தமிழின் வரிவடிவைக் கண்டே ஆரியம் தனக்கு எழுத்தைப் படைத்துக்கொண்டது. ஆரியம் தமிழின் கூட்டுறவால் பல மாறுதல்களை அடைந்துள்ளது என்பதை முன்பே சுட்டிக்காட்டியுள்ளோம்.

  இருபத்தைந்து எழுத்துகள்  பத்து உயிரும் பதினைந்து மெய்யும் இவ் விரண்டுக்கும் பொதுவாக அமைந்தமையால் தமிழ்மொழிச் சொற்கள் ஆரியத்திலும், ஆரியமொழிச் சொற்கள் தமிழிலும் எளிதே கலக்கத் தொடங்கின.

 நாளடைவில் ஆரிய மொழிச் செல்வாக்கு ஓங்கவும், தமிழ் மொழிச் செல்வாக்கு குறையவும் தொடங்கியது. புதியனவற்றை விரும்புதல் மக்கள் இயல்பு. தமிழர்கள் புதிய மொழிகளை விரைந்து  கற்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். ஆதலின் தம் மொழியை விடுத்துத் தம்மை அடைந்தவர் மொழியை விரும்பிக் கற்றனர். அரசியல் துறையிலும் சமயத்துறையிலும் ஆரியர்கள் தலைமையிடங்களில் அமர்ந்தனர். ஆரியமே கடவுள் மொழி, ஏனைய பேயின் மொழிகள் என்று கட்டுரைத்தனர். ஆதலின் எல்லாத் துறைகளிலும் ஆரியமே இடம் பெறலாயிற்று.

  தமிழ் ஆரியத்தின் கலப்பால் ஒன்று பலவாகி, தமிழர்களே புறக்கணிக்கும் நிலையை அடைந்தது. ஆரியமே இந்திய மொழிகளின் தாய்  என்றும், ஆரிய மின்றேல் இந்திய மொழிகள் எதுவும் வாழமுடியாது என்றும் எல்லாரும் நம்புமாறு செய்துவிட்டனர்.

 வடநாட்டில் ஆரியத்தின் கலப்பால் பலமொழிகளை ஈன்றுவிட்டுத் தமிழ் பெயரளவில் மறைந்துவிட்டது. ஆனால் தென்னாட்டில் தமிழ் வளமுற்றுத் திகழ்ந்தது. தமிழரசு நிலைத்திருந்ததனாலும், தமிழ்ப் பெரும் புலவர்கள் தமிழ்ப் பேரிலக்கியங்களை இயற்றிக் கொண்டிருந்தமையாலும், தமிழ்ச் சங்கங்கள் தோன்றித் தமிழ் போற்றப்பட்டமையாலும் தென்னாட்டில் தமிழ் மறைந்துவிடவில்லை. வடக்கே ஆரியமும் தெற்கே தமிழும் என்ற நிலைமை ஏற்பட்ட பின்னர், ஆரியச் சொற்கள் தமிழில் இடம்பெற இலக்கணம் வகுத்தனர். ஆரிய மொழிச் சொற்களின் பெயர்கள் தமிழில் இடம் பெறலாம் என்றனர். அங்ஙனம் இடம் பெறுங்கால் ஆரிய மொழிக்குரிய ஒலியை விடுத்துத் தமிழ் மொழிக்குரிய ஒலியைப் பெற்றே வரவேண்டு மென்றனர். தமிழுடன் கலந்த முதல் அயல்மொழி ஆரியமே. வடக்கிலிருந்து வந்தமையால் அதனை வடமொழி என்றனர்.

  தொல்காப்பியர்

            வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

            எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

             (தொல்சொல் 401)

என்று தம் நூலில் விதித்தார்.

 செய்யுளியற்றுதற்குரிய சொற்களை இன்னவெனக் கூறியபொழுது.

            இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வட சொல் என்று

            அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

             (தொல்.  சொல்  397)

என வடமொழிச் சொல்லைத் தனித்து வைத்தே கூறினார். ஆதலின் வேண்டுங்கால் பிற மொழியினின்று கடன் பெறுதல் குற்றமின்று எனவும், ஆனால் கடன் பெறுங்கால் வரையறைக்குட்பட்டுக் கடன்பெறல் வேண்டும் என்றும், கடனைக் கடனாகவே என்றும் கருதுல் வேண்டும் என்றும் ஆசிரியர் தொல்காப்பியர் அறிவுறுத்துவதுபோல் நூற்பா அமைந்துள்ளமை நினைந்து மகிழ்தற்குரியது. வடமொழியிடமிருந்து கடன் பெறும் இயல்பற்றி அறிஞர் கால்டுவல் அவர்கள் கூறியுள்ளமை இங்கு நினைவுகூரற்பாலது.

 (தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்