Skip to main content

மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! – பழ.தமிழாளன்

 அகரமுதல



மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் !

1.

நெற்றியிலே பெண்குறியும் நிலைபெற்ற(து)  உண்டோ ?

     நெற்றிதனில்  பிறந்தவராம் பிராமணர்கள்   என்பார் 

உற்றதொரு  பெண்குறியும்  தோளதனில்   உண்டோ ?

     உலகாள்வோர் பிறந்தகுறி அக்குறியே என்பார் 

பெற்றதொடை  பெண்குறியும்  பிறங்குவதும்   உண்டோ ?

    பொருள்வணிகர்  தோன்றுகுறி  அதுதானாம்  என்பார்.//

நிற்கின்ற  தாளதனில்  பெண்குறியும்  உண்டோ ?

    நிறையுழைப்புச் சூத்திரர்கள்  பிறந்த  குறி  என்பார் !

2.

பிறக்குமிடப் பெண்குறிகள்  பிறந்தவிடம்  நான்காய்

    பேதமையை  விளைவிக்கும்  மனுநூலின்   கூற்றை

அறவுணர்வு பெற்றிருக்கும்  அறிஞரெல்லாம்  ஏற்கார்

   அறிவில்லா அடுமடையர் அதையேற்பர்  நம்பி 

இறைவனுக்கு மேலாவான் பிராமணனே  என்றும்

    இயம்பியுள்ள நூற்களுமே வேதமெனல்     வெட்கம்

அறமுறையும்  சமப்பொதுமை  ஆக்காத நூல்கள்

   ஆரியத்தான்  தான்வாழ  ஆக்கிவைத்த  நூல்கள் !

3.

மக்களையும்  மடமைதனில்  ஆக்கிவைத்தே  ஏற்க

    மனுநூலும்  பிறநூலும்  மறையென்றல் தீதே !

தெக்கணத்துப் பகுத்தறிவுத் தமிழ்மாந்தர் ஏற்கார்

    திறந்தகடை  மூடிவிட்டுச்  செல்லுமிடம்  தேர்ந்தே

இக்கணமே  நடைகட்டல்  ஏற்புடைத்தே  ஆகும் 

    இரியாதே  இருப்பீரேல்  எழிற்றமிழ நங்கை

தக்கமுறை  அறத்தாலே  தாக்கிடுவாள்  தேர்க !

    தமிழ்மான  மறவரெல்லாம்   சூழ்ந்தழிப்பார்   ஓர்க !

                புலவர் பழ.தமிழாளன்,

         இயக்குநர்—பைந்தமிழியக்கம்,   திருச்சிராப்பள்ளி.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்