மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 76
அகரமுதல
(குறிஞ்சி மலர் 75 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 27 தொடர்ச்சி
மாந்தர்பால் பொருள் போக்கிப் பயின்றதாம்
மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை
எந்தமார்க்கமுந் தோற்றில தென்செய்கேன்?
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?
— பாரதி
அடுத்த நாள் விடியற்காலையில் மீனாட்சிசுந்தரத்தோடு அரவிந்தனும், முருகானந்தமும் மதுரைக்குத் திரும்பி விட்டார்கள். சிற்றப்பாவின் பதினாறாவது நாள் இறுதிச் சடங்குகளுக்காகக் கிராமத்துக்குத் திரும்பவும் போவதற்கு முன்னால் அரவிந்தன் மதுரையில் செய்ய வேண்டிய செயல்கள் சில இருந்தன. மாவட்ட அதிகாரி அலுவலகத்துக்குச் சென்று பூரணியின் வெளிநாட்டுப் பயண அனுமதிக்கான விண்ணப்பங்களைக் கொடுத்து ஏற்பாடு செய்தான். பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து விரைவுபடுத்தினான். அரசினர் அலுவலகங்களில்தான் தொடர்புடையவர்களைப் பார்த்துத் தூண்டிக் கொண்டிருக்காவிட்டால் தானாகவே எந்தக் காரியமும் நடந்து விடுவதில்லையே. வெளிநாட்டுப் பயண அனுமதிக்குத் தானே ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக மங்கையர் கழகத்துக் காரியதரிசிக்கும் தகவல் தெரிவித்து விட்டான் அவன்.
முன்பு பூரணியின் சொற்பொழிவு மூலம் ஏழைகளின் குடிசை உதவி நிதிக்கு வசூலான தொகையை மிகவும் நம்பிக்கையான கொத்தனார் ஒருவரிடம் ஒப்பந்த முறையில் அளித்து ஏற்பாடு செய்திருந்தார்கள் அரவிந்தனும் முருகானந்தமும். அன்று கொத்தனாரைப் பார்த்துப் பேசிவிட்டு வேலை எவ்வளவில் நிறைவேறியிருக்கிறதென்பதைக் கவனித்து வருவதற்காக அவர்கள் இருவரும் போய் இருந்தார்கள்.
மதுரை பேருந்து நிலையத்துக்குத் தென்புறமுள்ள பள்ளத்துக்கு அருகே பழைய காலத்தில் புண்ணிய நதியாயிருந்து இப்போது புண்ணியமும் இல்லாமல் கண்ணியமுமில்லாமல் வெறும் சாக்கடையாக மாறிவிட்ட சிற்றாறு ஒன்று இருக்கிறது. அதற்குக் ‘கிருதமாலா’ நதி என்று பெயர். இந்த ஆறு மழைக் காலங்களில் நீரோட்டம் பெருகிக் கரை மீறி விடுவதால்தான் அரிசனங்களின் குடிசைகளுக்கு அடிக்கடி சேதம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆற்றின் போக்கைச் சிறிது வழி விலக்கி உயரமாகக் கரை எடுத்துவிட்டிருந்தும் மழை அளவு மீறிப் பெய்கிற காலங்களில் சிதைவு நேர்ந்து கொண்டுதான் இருந்தது. அதனால், இந்த முறை கொத்தனாரிடம் பொறுப்பை ஒப்படைக்கும்போதே, “நிறைய மண் அடித்துத் தரையைக் கெட்டிப்படுத்தி மேடக்கிக் கொண்டு அப்புறம் குடிசைகளைப் போடுங்கள்” என்று எச்சரிக்கை செய்திருந்தான் அரவிந்தன். இப்போது போய்ப் பார்த்ததில் தான் சொல்லியிருந்தபடியே அந்தக் கொத்தனார் எல்லாம் செய்திருந்தது கண்டு அரவிந்தன் திருப்தியடைந்தான். வேலை ஏறக்குறைய நிறைவேறியிருந்தது. கொத்தனார் அரவிந்தனுக்கு அருகிலே வந்து மெல்லக் கேட்டார். “ஐயா! திறப்பு விழாவுக்கு யாரை அழைக்கப் போறீங்க? மந்திரிங்க யாராச்சும் வராங்களா?”
இதைக் கேட்டு அரவிந்தன் மெல்லச் சிரித்தான். “நம் கொத்தனார் கேட்ட கேள்வியைக் கவனித்தாயா முருகானந்தம்? மதத்திலும், சமயங்களிலும், அனாவசியமான சடங்குகளையும், மூடப் பழக்கங்களையும் ஒழித்து விட வேண்டும் என்கிற விழிப்புணர்ச்சி இந்த நாட்களில் நம்மைப் போன்ற இளைஞர்களுக்கு எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு முடிச்சை அவிழ்க்கிற முயற்சியில் இன்னும் பல முடிச்சுக்களைப் போட்டுவிடுவது போல் பழைய அனாவசியச் சடங்குகளை நீக்கும் முயற்சிகளினால் புதிய அநாவசியச் சடங்குகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம் நாம். பழமையிலும் சரி புதுமையிலும் சரி ஏனென்றும் எதற்கென்றும் காரணம் புரியாத சடங்குகளைத் துணிந்து கைவிடும் பழக்கம் நமக்கு வரவேண்டும். அடிப்படைக் கல்நாட்ட ஒருவர், திறந்து வைப்பதற்கு ஒருவர், கல் நாட்டுபவர் காரையை அள்ளிப் பூச ஒரு வெள்ளிக்கரண்டி, மாலை, எலுமிச்சம் பழம், ஒலிபெருக்கி என்று எத்தனைச் சடங்குகள்? இன்று இந்த நாட்டின் பொருளாதார வளத்துக்குச் சடங்குகள் தாம் பெரிய விரோதிகளாக இருக்கின்றன.”
“மிகவும் சரியாகக் கூறினாய், அரவிந்தன்? பள்ளிக்கூடத்துப் பையனின் பவுண்டன் பேனா இறுக்கி மூடிக் கொண்டால் அவன் கூடத் திறந்து வைக்க ‘மந்திரியைக் கொண்டு வா’ என்பான் போலிருக்கிறதே! ஐயா கொத்தனாரே! இந்தக் குடிசைகளை இத்தனைச் செம்மையாக உழைத்து நன்றாகப் போட்டுக் கொடுத்தவர் நீர்தான். நாணயமாகவும், நம்பிக்கையாகவும் உழைக்கிற உழைப்பாளியைத் தான் கௌரவப்படுத்த வேண்டும். பெருமை செய்ய வேண்டும். இந்தக் குடிசைகளைத் திறந்து வைக்க நமக்குப் பிரமுகர்கள் தேவை இல்லை. மந்திரிகள் தேவையில்லை. காரில் அழுக்குப்படாமல் வந்து இறங்கி பட்டும் படாததுமாகப் பட்டு ரிப்பனைக் கத்தரித்து விடும் சத்துச் செத்த மனிதர்கள் இந்தக் குடிசைகளைத் திறந்து வைக்க வேண்டாம் ஐயா! நீர் தான் இதைத் திறந்து வைக்கச் சரியான ஆள்” முருகானந்தம் இப்படிக் கூறியதும் “என்னைக் கேலி செய்கிறீர்களா தம்பி?” என்று நம்பிக்கையின்றித் தலையைச் சொறிந்து கொண்டே கேட்டார் கொத்தனார்.
“கேலியில்லை கொத்தனாரே, நாளைக் காலையில் நீங்கள் தான் இந்தக் குடிசைகளைத் திறந்து வைக்கப் போகிறீர்கள்” என்றான் அரவிந்தன். அதிசயமானதாகவும், புதுமையானதாகவும் ஆடம்பரமின்றி மறுநாள் அந்தத் திறப்பு விழா நடந்தது. குடிசைக்குள் நுழைகிற பொதுவான வழியில் ஒரு சிறு குத்துவிளக்கை ஏற்றி வைத்தார் கொத்தனார். ஒலிபெருக்கி இல்லை, மாலை இல்லை, சோடா இல்லை, பத்திரிகை நிருபர்கள் வரவில்லை, பிரபலமானவர்கள் வரவில்லை. விழாவுக்கு வந்திருந்த கூட்டம் அந்தக் குடிசைகளில் குடியேறுவதற்குக் காத்துக் கொண்டிருந்த ஏழைக் கூட்டம் தான்.
“ஐயா! நீங்க எனக்கு பணம் கொடுத்தது பெரிசில்லீங்க. என்னை ரொம்ப கௌரவப்படுத்திட்டீங்க” என்று கொத்தனார் நாத் தழுதழுக்க நன்றியோடு அரவிந்தனிடம் கூறினார். ‘இன்று இந்த நாட்டில் உழைக்கும் இனம் எங்கும் ஏங்கித் தவிப்பது இந்தக் கௌரவத்திற்காகத்தான். பணத்தினால் மட்டும் உழைக்கிறவர்கள் நிறைவடைவதில்லை. உழைப்பு கௌரவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அதைச் சொல்லப் பல காரணங்களால் அஞ்சித் தயங்குகிறார்கள்’ என்று அப்போது அரவிந்தன் மனத்தில் நினைத்துக் கொண்டான். வயது முதிர்ந்த தாய்மார்களும், கிழவர்களும் இளைஞர்களுமாக அந்தக் குடிசைகளில் குடியேற இருந்த மக்கள் அரவிந்தனையும் முருகானந்தத்தையும் நோக்கிக் கண்களில் நீர் மல்கக் கைகூப்பினார்கள். ‘இந்த அன்புக் கண்ணீரும் ஆனந்தக் கைகூப்புதல்களும் பூரணிக்குச் சேர வேண்டியவை அல்லவா! அவள் இன்று இங்கே நேரில் வந்து இதில் கலந்து கொள்ள முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! இரக்கத்துக்கும், அனுதாபத்துக்கும் உரிய மனித வெள்ளத்தினிடையே தீபமேந்திச் செல்வதாகக் கனவு காணும் அவள் உண்மையிலேயே இன்று இங்கே அதைப் பார்த்திருப்பாள்’ என்று எண்ணி நெஞ்சுருகி நின்றான் அவன்.
அன்று மாலை அரவிந்தனைப் பொன்னகரத்திலுள்ள தன் வீட்டுக்கு வற்புறுத்தி அழைத்தான் முருகானந்தம். எதற்காக அன்று அவன் தன்னை வீட்டுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறான் என்பது முதலில் அரவிந்தனுக்குத் தெளிவாக விளங்கவில்லை. மாதத்துக்கு ஒருமுறை எப்போதாவது ஓய்வு கிடைக்கிற ஞாயிற்றுக்கிழமையில் அரவிந்தனே பொன்னகரத்துக்குப் போய் நண்பர்களையெல்லாம் பார்த்து நலம் விசாரித்துவிட்டு அளவளாவிப் பேசிவிட்டு முருகானந்தத்தின் வீட்டுக்கும் சென்று அவனுடைய பெற்றோர்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவதுண்டு. முருகானந்தத்தின் பெற்றோர்களோடு சிறு வயதிலிருந்தே அரவிந்தனுக்குப் பழக்கமும் பாசமும் உண்டு. அவர்கள் அவனுக்கு உறவில்லையானாலும் அவனுடைய கிராமத்தில் சிறிது காலம் வசித்தவர்கள். பஞ்சத்துக்கு ஊர் மாறின குடும்பமாக அரவிந்தனுடைய கிராமத்தில் அவர்கள் இருந்த காலத்தில் முருகானந்தம் சிறுபையன். அரவிந்தனும் சிறு பையன் தான் அப்போது. ஆனால் முருகானந்தத்தை விட கொஞ்சம் விவரமறிந்து நினைவு தெரிந்த பருவம் அவனுக்கு. இரண்டுபேரும் ஒரே ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்தார்கள். ஆனால் சில ஆண்டுகளில் முருகானந்தத்தின் பெற்றோர் மதுரைக்கு ஆலைக் கூலியாய்ப் போய் பிழைக்க நேர்ந்தது. அப்போது முருகானந்தமும் போய்விட்டான். பின்னால் அரவிந்தன் தாயையும் இழந்து, சிற்றப்பா சித்தி கொடுமைகளைத் தாங்காமல் மதுரைக்கு ஓடி வந்த போது உயர்நிலைப் பள்ளியில் தன்னையும் தன் அனாதைப் பிழைப்பையும் ஏளனம் செய்த மாணவர்களின் விடலைக் கும்பலுக்கிடையே தனக்கு ஆதரவு கொடுக்கும் மாணவ நண்பனாக முருகானந்தத்தைச் சந்தித்தான். தற்செயலாகச் சந்தித்து ஒருவரையொருவர் அடையாளம் தெரிந்து கொண்ட அந்தச் சந்திப்புக்குப் பின் அவர்களுடைய நன்பு மீண்டும் தளிர்த்தது, தழைத்து வளர்ந்தது. அரவிந்தனை அண்ணன் போல் எண்ணி மதித்துப் பழகத் தொடங்கியிருந்தான் முருகானந்தம். படிப்பு முடிந்த பின் தன்னுடைய தமிழாசிரியர் சிபாரிசால் அரவிந்தன் அச்சகத்தில் சேர்ந்தான். ஓய்வு நேரத்தில் பொழுது போக்காகத் தையல் தொழில் பழகிய முருகானந்தம், பிழைப்புக்காக ஒரு சிறு தையல் கடையே வைத்தான். தொழில் அவனைக் கைவிடவில்லை. ஆறு மாதமோ என்னவோ, பம்பாயில் போய் இருந்து தையல் நாகரிகங்களைக் கற்று ஒரு பட்டமும் வாங்கி வந்தான். ‘பாம்பே டெய்லர்சு’ என்ற பெருமையும் சேர்ந்து கொண்டது. எந்தப் பெருமைகள் வந்த போதும் அரவிந்தனின் மதிப்பும் பணிவுமுள்ள நண்பனாகவே பழகினான் அவன்.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Comments
Post a Comment