Skip to main content

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 9

 

அகரமுதல






(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 8 தொடர்ச்சி)

ஊரும் பேரும் – 9

மருத நிலம்‌ தொடர்ச்சி


கேணி, கிணறு

    இன்னும், ஊற்று நீரால் நிறையும் கேணியும் கிணறும் சில ஊர்களைத்
தோற்றுவித்துள்ளன. சென்னை மாநகரிலுள்ள  திருவல்லிக்கேணியும்,
நெல்லை நாட்டிலுள்ள நாரைக் கிணறும் இவ்வுண்மைக்குச் சான்றாகும்.

 நிலம்

    இங்ஙனம் ஆற்று நீராலும், ஊற்று நீராலும் ஊட்டி வளர்க்கப்படும்
நிலத்தின் தன்மையை உணர்த்தும் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்கள்
பலவாகும். நிலம் என்னும் சொல்லை நன்னிலம்  என்ற ஊர்ப் பெயரிற்
காணலாம். அப்பெயரிலுள்ள அடைமொழி அந்நிலத்தின் வளத்தைக்
குறிப்பதென்பர்.
 

புலம்

    புலம் என்னும் சொல்லும் நிலத்தைக் குறிக்கும். தஞ்சை நாட்டில் தாமரைப் புலம், கருவப் புலம், செட்டி புலம் முதலிய ஊர்கள் உண்டு.

பற்று
 

    பற்று என்பது நன்செய் நிலமாகும். அது தென்னாட்டில் பத்து எனவும், வட நாட்டில் பட்டு எனவும் திரிந்து வழங்கும். திருக் கோவிலுக்கு நிவந்தமாக விடப்பட்ட நிலங்களையுடைய ஊர், கோவில் பற்று என்று பெயர் பெறும். இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓர் ஊர் பெருங்கருணைப் பற்று என்று அழைக்கப் படுகின்றது.88 செங்கல்பட்டு என்பது, செங்கழுநீர்ப் பற்று என்னும் அழகிய சொல்லின் சிதைவேயாகும்.89 சித்தூர் நாட்டில் பூத்தலைப் பற்று என்று ஆதியில் பெயர் பெற்றிருந்த ஊர் இப்பொழுது பூதலப்பட்டு என்று வழங்குகின்றது.90 வடஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்திலுள்ள ஓர் ஊர் தெள்ளாற்றுப்பற்று என்று பெயர் பெற்றது. இப்பொழுது அப்பெயர் தெள்ளாரப்பட்டு என மருவியுள்ளது.91


பண்ணை
    பண்ணை என்பது வயல்.92 அச் சொல் சில ஊர்ப் பெயர்களிலே
காணப்படுகின்றது. நெல்லை நாட்டில் செந்திலான் பண்ணை என்பது ஓர்
ஊரின் பெயர். சாத்தூருக்குத் தென் மேற்கே எட்டு கல் தூரத்தில்
ஏழாயிரம் பண்ணையென்னும் ஊர் உள்ளது.

பழனம், கழனி
 

    பழனம் என்ற சொல்லும் வயலைக் குறிக்கும். தஞ்சை நாட்டில் திருப்
பழனம்
 என்பது பாடல் பெற்ற ஓர் ஊரின் பெயர். அஃது இப்பொழுது
திருப்பயணமாயிற்று. இன்னும் வயலைக் குறிக்கும் கழனி என்னும் அழகிய
சொல், ஆர்க்காட்டிலுள்ள தென்கழனி, புதுக் கழனி முதலிய ஊர்களின் பெயரிலும் தஞ்சை நாட்டுக் காக் கழனியிலும் காணப்படும்.

 வயல்; விளை

     வயல் என்னும் சொல் புதுவயல், நெடுவயல் முதலிய ஊர்ப்
பெயர்களில் வழங்கும். தென்னாட்டில் விளை புலங்களையுடைய ஊர்களை
விளையென்னும் பெயரால் குறிப்பதுண்டு. வாகை விளை, திசையன் விளை
முதலிய ஊர்கள் நெல்லை நாட்டில் உள்ளன.
 

நில அளவு

   வேலியும் காணியும் நிலத்தின் அளவைக் குறிக்கும் சொற்களாகும். அவைகளும் ஊர்ப் பெயரிலே காணப்படும். தஞ்சை நாட்டு ஐவேலி, ஒன்பதுவேலி முதலிய ஊர்களும், மதுராந்தக வட்டத்திலுள்ள பெரு வேலியும் நிலத்தின் அளவால் எழுந்த பெயர்கள் என்பது வெளிப்படை. அவ்வாறே நெல்லை நாட்டில் உள்ள முக்காணி, சங்காணி முதலிய ஊர்ப் பெயர்களில் காணி இடம் பெற்றுள்ளது. குறைந்த அளவினாகிய குறுணியும் நாழியும், சிறுபான்மையாகிய ஊர்ப் பெயர்களிற் காணப்படும். மதுரை நாட்டில் சோழங்குறுணி என்றும் எட்டு நாழி என்றும் பெயருடைய ஊர்கள் உண்டு.

 புன்செய்

வளமிகுந்த நிலத்தை நன்செய்(நஞ்சை) என்றும், வளங்குறைந்த நிலத்தைப் புன்செய்(புஞ்சை) என்றும் கூறுவர். தஞ்சை நாட்டில் பாடல் பெற்ற
நனி பள்ளி என்னும் தலம் இப்போது புஞ்சையென வழங்குகின்றது.93

தோட்டம்
   ஊற்று நீரை இறைத்துத் தோட்டப் பயிர் செய்யும் வழக்கமும்
தமிழ்நாட்டில் உண்டு. ஆதலால் தோட்டத்தைக் குறிக்கும் சொற்கள் சிறு பான்மையாக ஊர்ப் பெயர்களில் வழங்கக் காணலாம். தஞ்சை நாட்டில் பூந்தோட்டமும், தென்னார்க்காட்டில் இஞ்சிக் கொல்லையும், கருப்புக் கிளாரும் உள்ளன. தோட்டம், கொல்லை, கிளார் என்பன ஒரு பொருட்சொற்கள்.

ஊர்

     நால் வகை நிலங்களிலும் பொதுவாகத் தமிழ் மக்கள் குடியிருந்து
வாழ்ந்தாரேனும் மருத நிலமே சிறப்பாகக் குடியிருப்புக்கு ஏற்றதாகக்
கொள்ளப்பட்டது. ஆதலால், ஊர் என்னும் பெயர் மருத நிலக்
குடியிருப்பைக் குறிக்கும்.94 மரப் பெயர், மாப் பெயர் முதலிய எல்லா
வகையான பெயர்களோடும் ஊர் என்னும் சொல் சேர்ந்து,  தமிழ் நாட்டில் வழங்கக் காணலாம். மருத மரத்தின் அடியாகப் பிறந்த ஊர் மருதூர்; நாவலடியாகப் பிறந்த ஊர் நாவலூர். இன்னும் தேவாரப் பாடல் பெற்ற தெங்கூரும்பனையூரும் பாசூரும், கடம்பூரும் மரங்களாற் பெயர் பெற்ற பதிகளேயாகும்.


பறவையும் ஊரும்

     அன்னமும், மயிலும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றன.
நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர் ஆகும். குருகு என்பது அன்னத்தின்
பெயர். சென்னையில் உள்ள மயிலாப்பூர் மயிலோடு தொடர்புடைய தென்பது
தேற்றம். நாரையாற் பெயர் பெற்ற ஊர் திருநாரையூர். கோழியின் பெயர்
கொண்டது கோழியூர்.95 கொக்கைக் குறிக்கும் வண்டானம் என்பது ஓர் ஊரின் பெயர்.96்

புலியூர
 

   இன்னும், விலங்குகளுள் புலியின் வீரத்தைப் பண்டைத் தமிழர்கள் வியந்து
பாராட்டியதாகத் தெரிகின்றது. அவ்விலங்கின் பெயர் கொண்ட ஊர்கள்
பலவாகும். புலியூர், பாதிரிப் புலியூர், எருக்கத்தம் புலியூர் முதலிய ஊர்கள் 
பாடல்கள் பெற்றுள்ளன. இன்னும் திருச்சி நாட்டில் பெரும்புலியூர்,
குறும்புலியூர் என்னும் ஊர்கள் உண்டு. பெரும்புலியூர் என்பது பெரம்பலூர்
என்றும், குறும் புலியூர் என்பது குறும்பலூர் என்றும் இக்காலத்தில்
வழங்கப்படுகின்றன. மாயவரத்துக்குத் தெற்கே சிறு புலியூர் என்ற ஊர்
உள்ளது.

நல்லூர்
 

    தமிழ் நாட்டு ஊர்களை நல்லூர் என்றும் புத்தூர் என்றும் வகுத்துக்
கருதலாகும். பெண்ணையாற்றங்கரையில் அமைந்தது திருவெண்ணெய்
நல்லூர். அது சுந்தர மூர்த்தியைத் தடுத்தாட் கொண்ட ஈசன் கோவில் கொண்டுள்ள இடம்.97 சைவசமய ஞான நூலாகிய சிவஞான போதத்தை அருளிச் செய்த மெய்கண்ட தேவர் பிறந்தருளும் பேறு பெற்ற நல்லூரும் அதுவே. கும்பகோணத்துக்கருகே நல்லூர் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அமர் நீதி என்னும் அடியார் அவ்வூரில் தொண்டு செய்து சிவப்பேறு பெற்றார் என்று சேக்கிழார் கூறுகிறார். மண்ணியாற்றங்கரையில் முருகவேளின் பெயரால் அமைந்த சேய் நல்லூர் இந் நாளில் சேங்கனூர் என்று வழங்கும்.98 வட ஆர்க்காட்டிலுள்ள மற்றொரு சேய் நல்லூர் சேனூர் எனப்படும்.

 தமிழ் நாட்டை ஆண்ட அரசர் பலர் தம் பெயர் விளங்குமாறு பல
நல்லூர்களை உண்டாக்கினார்கள். பாண்டி நாட்டில் வீரபாண்டிய நல்லூர்,
அரிகேசரி நல்லூர், மானா பரண நல்லூர், செய்துங்க நல்லூர்
 முதலிய
ஊர்கள், பாண்டிய குலத்தைச் சேர்ந்த மன்னர் பெயரை விளக்கி நிற்கின்றன.
சோழ நாட்டில் பெருஞ் சோழ மன்னர்கள் உண்டாக்கிய நல்லூர்களைச்
சாசனங்களிற் காணலாம். முடி கொண்ட நல்லூர், அநபாய நல்லூர்,
திருநீற்றுச் சோழ நல்லூர், திருத்தொண்டத் தொகை நல்லூர், சிவபாத சேகர
நல்லூர், கலி கடிந்த சோழ நல்லூர் 
முதலிய நல்லூர்கள் சோழ மன்னருடைய
விருதுப்பெயர் பெற்ற பதிகளாகும்.

புத்தூர்

     புதியவாகத் தோன்றும் ஊர்கள் புத்தூர் என்று பெயர் பெறும்.
தேவாரப் பாடல் பெற்ற பாண்டி நாட்டுப் பதியொன்று திருப்பத்தூர் என வழங்கி வருகின்றது. அரிசில் ஆற்றங்கரையில் எழுந்த புத்தூர் அரிசிக்கரைப் புத்தூர் என்றும், கடுவாய் நதிக்கரையிலுள்ள கடுவாய்க்கரைப் புத்தூர் என்றும் தேவாரப்பதிகம் குறிக்கின்றது. பாண்டி நாட்டிலுள்ள திருவில்லிபுத்தூர் வைணவர் போற்றும் பெரும் பதியாகும். சுந்தரர் திருமணம் செய்யப் போந்த புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆயிற்றென்று பெரிய புராணம் கூறுகின்றது.99 கொங்கு நாட்டில் பழைய பேரூருக்கு அருகே கோவன் என்னும் தலைவன் பெயரால் எழுந்த ஊர் கோவன்புத்தூர் என்று
பெயர் பெற்றது. அதுவே இப்பொழுது கோயம்புத்தூராகச் சிறந்து
விளங்குகின்றது.

குறிப்பு:

88. 403 / 1907.

89. 337 / 1908; செ.க.அ.(எம்.இ.ஆர்.)1933- 34.

90. 53 / 1907.

91. 73 / 1908; செ.மா.க.(ஐ.எம்.பி.)ப. 122.

92. பெரு நிலம்‌ உடையாரைப்‌ பண்ணையார்‌ என்பர்‌.

93. 187 /1925.

94, சங்க இலக்கியத்தில்‌ ஊரன்‌ என்ற. சொல்‌ மருத நிலத்‌தலைவனைக்‌ குறிக்கும்‌. “தண்டுறை ஊரனை”. – ஐங்குறுநூறு, 88.

95. கோழியூர்‌ என்பது தட நாட்டின்‌ பழைய தலைநகராகிய உறையூரின்‌ பெயர்‌, “கோழி உறையூர்‌” – பிங்கல நிகண்டு.

96. இவ்வூர்‌ இராமநாதபுர நாட்டில்‌ உள்ளது. 

97. “பெண்ணைத்தென்பால்‌ – வெண்ணெய்‌ நல்லூர்‌” சுந்தரர்‌ தேவாரம்‌.

98. “சேயடைந்த சேய்ஞலூர்‌” என்பது தேவாரம். சூரனோடு போர்‌ செய்யக்‌ கருதி எழுந்த முருகவேள்‌. சிவபெருமானை வழிபட்டுச்‌ சருவ சங்காரப்‌ படைக்கலம்‌ பெற்ற தலம்‌ சேய்நல்லூர்‌ (சேய்ஞலூர்‌) என்று கந்த புராணம்‌ கூறும்‌. -குமாரபுரிப்‌ படலம்‌, 14-15, 75-76. 

99… “அருங்கடி மணம்‌ வந்தெய்த அன்று தொட்டு என்றும்‌ 

அன்பில்‌ வருங்குல மறையோர்‌ புத்தூர்‌ மணம்‌ வந்த புத்தூர்‌

ஆமால்‌” – தடுத்தாட்கொண்ட புராணம்‌, 23.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்