ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–10
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 9 தொடர்ச்சி)
ஊரும் பேரும் – 10
நெய்தல் நிலம்
தமிழ் நாடு. நெடிய கடற்கரை யுடையது. முன்னாளில் “சோழ நாட்டுக் கடற்கரை, சோழ மண்டலக்கரை என வழங்கிற்று. அஃது ஐரோப்பியர் நாவில் சிதைந்து கோரமண்டல் கரையாயிற்று. பாண்டி நாட்டுக் கடலில் நினைப்பிற் கெட்டாத. நெடுங் காலமாக நல் முத்து விளைந்தமையால் . அக் கரை முத்துக்கரை என்று பிற நாட்டாரால் ‘குறிக்கப்பட்டது.100 சேர நாட்டுக் கடற்கரை, மேல் கரை என்று பெயர் பெற்றது.
கரை
“கடற்கரையில் அமைந்த சில ஊர்களின் தன்மையை அவற்றின் பெயர்களே காட்டும். பாண்டி நாட்டில் கீழக் கரை என்பது ஓர் ஊரின் பெயா். அக் காலத்தில் கரை . முத்துச் . சலாபம் அங்குச் சிறப்பாக அமைந்தது. பிற் காலத்தில் மரக்கல வணிக மன்னராய் விளங்கிய சீதக்காதி என்னும் மகமதிய வள்ளல் அவ்வூரில் சிறந்து வாழ்ந்தார். இன்னும் வைகை யாறு கடலோடு கலக்கும். இடத்தில் அமைந்த ஊருக்கு ஆற்றங்கரை என்பது பெயர். முன்னாளில் சங்கு வாணிபம் அவ்வூரில் நன்கு நடைபெற்றது. இராமேசுவரத்துக்கு அண்மையில் கோடிக் கரை என்னும் ஊர் உண்டு. அது தாலமி முதலிய யவன ஆசிரியர்களாலும் குறிக்கப் பட்டுள்ளது. முற் காலத்தில் தென்னிந்தியாவினின்று இலங்கை நாட்டுக்குச் செல்வதற்குக் கோடிக் கரை மார்க்கமே குறுக்கு வழியாக இருந்தது.
துறை
கடல் வாணிபத்திற்குச் சாதனமாகிய இடம் துறை என்று பெயர் பெறும். இக் காலத்தில் அதனைத் துறைமுகம் என்பர். பண்டைத் துறைமுகங்கள் பெரும்பாலும் ஆற்று முகங்களில் அமைந்திருந்தன. குமரியாறு கடலொடு கலந்த இடத்தில் குமரித்துறை இருந்ததாகத் துறை இலக்கியம் கூறுகின்றது. அத்துறையில் விளைந்த முத்துச்சலாபத்தின் செம்மையைக் குமரகுருபர அடிகள் பாராட்டுகின்றார். குமரித்துறை கடலாற்கொள்ளப்பட்டு அழிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு கொற்கைத் துறை தென்னாட்டுப் பெருந் துறையாக இருந்தது. அத் துறையில் விளைந்த முத்து, கடல் கடந்து, பிற நாடுகளிற் போந்து பெரு மதிப்புப் பெற்றது.
கொற்கைத்துறை செல்வச் செழுந்துறையாய் இலங்கிய தன்மையால் பாண்டிய மன்னன் கொற்கைத் துறைவன் என்றும், கொற்கைக் கோமான் என்றும் குறிக்கப்பட்டான்.
தாமிரபருணி யாற்று முகத்தில் வீற்றிருந்த கொற்கைத் துறை நாளடைவில் தூர்ந்து போயிற்று. அந் நிலையில் கடற்கரையில் அமைந்த காயல் என்ற ஊர் சிறந்த துறைமுக மாயிற்று. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில், காயல் சிறந்ததொரு நகரமாக விளங்கிற்று. இத்தாலிய அறிஞராகிய மார்க்கோ போலோ என்பவர், தமிழ்நாட்டிற் போந்தபோது காயல் துறையின் செழுமையைக் கண் களிப்பக் கண்டார்.101 அத் துறைமுகத்தில் இடையறாது நடந்த ஏற்றுமதியையும் இறக்குமதியையும் அவர் குறித்துள்ளார்; முத்துக் குளிக்கும் முறையினை விரிவாக விளக்கியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த காயல் துறையும் காலகதியில் தூர்ந்து போயிற்று. இன்று அவ்வூர் புன்னைக் காயல் என்னும் பேர் கொண்டு, சின்னஞ்சிறிய செம்படவர் ஊராகக் கடற்கரையினின்று மூன்று கல் உள்ளடங்கியிருக்கின்றது.
பட்டினம்
கடற்கரையில் உண்டாகும் நகரங்கள் பட்டினம் என்று பெயர் பெறும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் நாட்டில் காவிரிப்பூம்பட்டினம் தலைசிறந்த பட்டினமாகத் திகழ்ந்தது. இந் நாளில் பட்டணம் என்னும் சொல் சிறப்பு வகையில் சென்ன பட்டணத்தைக் குறித்தல் போன்று, அந் நாளில் பட்டினம் என்பது காவிரிப் பூம் பட்டினத்தையே குறித்தது. அந் நகரத்தைப்பற்றிப் பண்டைக் கவிஞர் ஒருவர் இயற்றிய பாட்டு பட்டினப் பாலை என்று பெயர் பெற்றது. அப் பட்டினத்தில் வணிகர் குலமணியாய்த் தோன்றிப் பின்பு முற்றும் துறந்து சிறப்புற்ற பெரியார் பட்டினத்தார் என்றே இன்றும் பாராட்டப் படுகின்றார். எனவே, முன்னாளில் பட்டினம் என்று பெயர் பெற்றிருந்தது காவிரிப் பூம் பட்டினமே என்பது இனிது விளங்குவதாகும். காவிரிப் பூம் பட்டினம் பூம்புகார் நகரம் என்றும் புலவர்களாற் புகழ்ந்துரைக்கப்பட்டது. பூம்பட்டினம் எனவும், பூம்புகார் எனவும் அந் நகர்க்கு அமைந்துள்ள பெயர்களை ஆராய்வோமானால், ஓர் அழகிய கடற்கரை நகர மாக அது விளங்கிற் றென்பது புலனாகும்.102
அக் காலத்தில் சிறந்திருந்த கடற்கரை நகரங்களின் அமைப்பைப் பண்டை இலக்கியங்கள் ஒருவாறு காட்டுகின்றன. ஒவ்வொரு பெரிய கடற்கரை நகரமும் இரு பாகங்களை யுடையதாய் இருந்தது. அவற்றுள், ஒரு பாகம் ஊர் என்றும், மற்றொரு பாகம் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டன: பூம்புகார் நகரத்தின் ஒரு: பாகம் மருவூர்ப் பாக்கம் என்றும், மற்றொரு பாகம் பட்டினப்பாக்கம் என்றும் “பெயர் பெற்றன. இரண்டும் சேர்ந்தது காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்டது.103 அவ்வாறே சோழ மண்டலக் கரையிலுள்ள நாகை என்னும் நகரமும் இரு பாகங்களையுடையதாய் இருந்தது. இக்காலத்தில் நாகூர் என்றும், நாகப்பட்டினம் என்றும் வழங்குகின்ற பகுதிகள் முற்காலத்தில் ஒரு நகரின் இரண்டு கூறுகளாகவே கருதப்பட்டன.104 திருவாரூர் சோழ நாட்டின் தலைநகரமாய்த் திகழ்ந்த காலத்தில், நாகை சிறந்த துறைமுகமாகச் . செழித்திருந்தது. கடுவாய் என்னும் ஆற்றுமுகத்தில் அமைந்த அத்துறைமுகத்தைக் கடல் நாகை என்று திருப்பாசுரம் போற்றுகின்றது.105 அந்நகரில் சைவமும் வைணவமும் பெளத்தமும் சிறந்தோங்கி இருந்தன என்று தெரிகின்றது. நாகையிலுள்ள திருமால் கோவிலைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். காரோணம் என்று, புகழ் பெற்ற சிவன் கோவிலைக் குறித்து: எழுபது திருப்பாசுரங்கள் தேவாரத்தில் காணப்படுகின்றன. இராசராச சோழன் காலத்து அந் நகரில் பெளத்த சமயத்தார்க்குரிய பெரும் பள்ளிகள் அமைந்திருந்தன என்று சாசனங்களால் அறிகின்றோம். எனவே, கடல் நாகை நானாவித மக்களும் கலந்து வாழ்ந்த சிறந்த நகரமாகக் காட்சி அளித்தது. இன்னும், சேர நாட்டில் சிறந்திருந்த முசிரி என்னும் பட்டினமும் இரு பாகங்களாகவே அமைந்திருந்தது. அவற்றுள் ஊர் என்னும் பெயருடைய பாகம் கொடுங் கோளூர் எனவும், மற்றொரு பாகம் மகோதைப்பட்டினம் எனவும் வழங்கலாயின.106
பாண்டி நாட்டில் காயல் பட்டினம், குலசேகரப் பட்டினம் முதலிய கடற்கரைப் பட்டினங்கள் உள்ளன. காயல் பட்டினத்தில் இந் நாளில் மகமதியரே பெரும்பாலும் வாழ்ந்து வருவதால் சோனகர் பட்டினம் என்றும் அதனைச் சொல்வதுண்டு. உப்பு வாணிபம் அவ்வூரில் சிறப்பாக நடைபெறுகின்றது. குலசேகர பாண்டியன் பெயரைக் கொண்டு விளங்கும் ஊர்களில் ஒன்று குலசேகரப் பட்டினமாகும். சோழ மண்டலக் கரையில் சதுரங்கப் பட்டினம் என்னும் சிறிய துறைமுகம் உள்ளது. அது பாலாறு கடலிற் சேருமிடத்திற்குச் சிறிது வடக்கே அமைந்திருக்கின்றது. சதுரை என்பது அவ்வூர்ப் பெயரின் குறுக்கம். அதனை ஐரோப்பிய நாட்டார் சதுராசு என்று வழங்கினார்கள்.107
அடிக்குறிப்புகள்
100. முத்துக்கரை – The Fishery Coast.
101. The Pandyan Kingdom,p.191.
102. பூம்பட்டினம் – The City beautiful.
103. இதனைச் சிலப்பதிகாரம் இந்திரவிழாவூரெடுத்த காதை யிற் காண்க.
104. நாகப்பட்டினத்திற்கு வடக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது நாகூர்.
105. “கடல் நாகைக் காரோணம் கருதினானை” – திருநாவுக் கரசர் தேவாரம்.
106. “கோவீற் றிருந்து முறை புரியும் குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்” –
சேரமான் பெருமாள் நாயனார் புராணம், 1. மகோதைப் பட்டினத்தை
“ஆர்க்கும் கடலங்கரை மேல் மகோதை” என்று தேவாரத்தில் சுந்தரர்
பாடினார்.
107. சென்ன பட்டணத்திற்குத் தெற்கே இருபது கல் தூரத்தில்
செங்கற்பட்டைச் சேர்ந்த கோவளம் என்ற ஊர் உள்ளது. கடலுக்குள் நீண்ட
தரைமுனை (cape)கோவளம் எனப்படும். இவ்வூர்ப் பெயர் covelong
எனச் சிதைந்து வழங்குகின்றது. சென்னைக் கல்வெட்டு அறிக்கை(எம்.இ.ஆர்./M. E. R.) 1934-35.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
Comments
Post a Comment