Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11

 அகரமுதல




(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10 தொடர்ச்சி)

பழந்தமிழ்

4. மொழி மாற்றங்கள்

 மொழியில் காணப்படும் இலக்கணக் கூறுகளின் மாற்றமும், சொற்பொருள்களின் மாற்றமும், சொல்மாற்றமும் விரைந்து நிகழ்வன  அல்ல;  மிகுந்தும் நிகழ்வனவல்ல. நூற்றாண்டு தோறும் சிலவாகவே நிகழும். இவ்வாறு மாற்றங்கள் நிகழ்வதற்குரிய காரணங்கள் மொழியைப் பயன்படுத்தும் மக்களுடைய சோம்பர், விரைவு, அயல் மொழியாளர் கூட்டுறவு, மொழியறிவு இன்மை எனப் பல திறப்படும்.

  இம் மாற்றங்கள் மொழி வளர்ச்சியில் இயல்பாக நிகழக் கூடியன  என்பதைத் தமிழ்மொழி இலக்கண ஆசிரியர்கள் நன்கு அறிந்துள்ளனர். தொல்காப்பியர் இவ்வகை மாற்றங்களை உளத்தில் கொண்டே ஒவ்வோர் இயலின் இறுதியிலும் புறனடை நூற்பாக்கள் அமைத்துள்ளார். இம்மாற்றங்கள் தாமாகவே நிகழக் கூடியனவே என்பதும் நாம் வலிந்து புகுத்துதற்குரிய அல்லன என்பதும் தொல்காப்பியரும் பிறரும் அறிந்த உண்மைகளாம்.

   இம் மாற்றங்களை இலக்கணக் கூறு மாற்றம், சொற் பொருள் மாற்றம், சொல் வடிவ மாற்றம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  இலக்கணக் கூறுமாற்றம்

  தமிழ்மொழி, பண்பட்ட இலக்கணத்தைத் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே பெற்றுள்ளது. மொழி சிதையாமல் கட்டுக்கோப்பாக அமைந்து எளிமையும் எழிலும் பொருந்த, எளிதாகக் கருத்துகளை அறிவிக்கத் துணை புரிவதே இலக்கணம். திணை, பால், எண், இடம், காலம், வேற்றுமை என்பனவும், பெயர், வினை,  இடை, உரி என்பனவும் இலக்கணத்தின் பாற்பட்ட பெயர்களே. இவற்றை அறிவிப்பனவே இலக்கணக் கூறுகள் எனப்படும்.

 தொல்காப்பியர் காலத்தில் அஃறிணைப் பன்மையினை உணர்த்தக் ‘கள்’ எனும் விகுதி பயன்பட்டது.

            கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே

            கொள்வழி யுடைய பலவறி சொற்கே

                                                        (தொல்  சொல்  169)

  குதிரை: குதிரைகள்; மரம்: மரங்கள்

  ஆனால் இக்கள் விகுதியை உயர்திணையை அறிவிக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

            துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

            மற்றை யவர்கள் தவம்                                   (குறள் 263)

            வரைவிலா மாணியழையார் மென்றோள் புரையிலாப்                     பூரியர்கள் ஆழும் அளறு                   (குறள் 919)

  திருக்குறட்பாக்களில் இவ்வாறு பயன்பட்டுள்ளமை  அறிந்த புலவர்கள் தொல்காப்பியர் விதியைக் கடந்து திருவள்ளுவர் வழக்கை ஒட்டித் தாமும் கள் விகுதியை உயர்திணைப் பன்மைக்கும் உரித்தாக்கிவிட்டனர். இன்று நாமும் பயன்படுத்தி வருகின்றோம். அவன் அல்லது அவள் என்பதைப் பன்மைப்படுத்த வேண்டுமென்றால் அவர் ஒன்றே பொருந்தும் என்றாலும் அவர்கள் என்பதுதான் ஏற்றது என்று கருதும் நிலையில் உள்ளோம்.

  இடப்பெயர்கள்: தொல்காப்பியர் காலத்தில் தன்மையொருமை யில் யான் என்பதும், தன்மைப் பன்மையில் யாம், நாம் என்பன இரண்டும் பயன்பட்டன. பின்னர், தன்மை ஒருமையில் நான் என்பதும் பயன்பட்டது. பன்மையில் யாம் என்பதற்கு யான் ஒருமையில் இருப்பதுபோல, நாம் என்பதற்கும் ஒருமை வேண்டும் என்ற நினைப்பால் நான் படைக்கப்பட்டு விட்டதுபோலும்.

  முன்னிலை  ஒருமையில் நீ என்பதும் பன்மையில்  நீயிர், எல்லீர் என்பனவும் தொல்காப்பியர்  காலத்தில் வழங்கின. வேற்றுமை உருபு ஏற்குங்கால் நின்னை (நீ+ஐ) என்றும், நும்மை (நீயிர்+ஐ) என்றும் வடிவு மாறின. தொல்காப்பியர், நும் என்பதிலிருந்துதான் நீயிர் தோன்றியது என்பர்.

  பின்னர்ப் பன்மையில் நீவிர், நீர் என்பனவும் தோன்றிவிட்டன.

  கள் விகுதி உயர்திணைப்  பன்மை குறிக்கும் நிலையை அடைந்தவுடன், தன்மையில் யாங்கள் (யாம்+கள்), நாங்கள் (நாம்+கள்) என்பனவும் முன்னிலையில் நீங்கள் (நீ+கள்) என்பதும் வழங்கத் தொடங்கிவிட்டன.

   வேற்றுமை உருபு ஏற்குங்கால் ஒருமையில் உன்னை, உனக்கு என்றும்,  பன்மையில் உங்களை, உங்களுக்கு என்றும் கூறும் வழக்குகள் தோன்றிவிட்டன.

    வேற்றுமை யுருபுகள்: தொல்காப்பியர் காலத்தில் இரண்டாம் வேற்றுமைக்கு ஐ,  மூன்றாம் வேற்றுமைக்கு ஓடு, நான்காம் வேற்றுமைக்கு கு, ஐந்தாம் வேற்றுமைக்கு இன், ஆறாம் வேற்றுமைக்கு அது, ஏழாம் வேற்றுமைக்கு கண் உருபுகளாகக் கருதப்பட்டன.

 பின்னர் மூன்றாம் வேற்றுமைக்கு ஆல், ஆன், ஓடு, உடன் உருபுகளாயின. ஐந்தாம் வேற்றுமைக்கு இல் உருபாக வந்தது. பேச்சு வழக்கில் இருந்து, விட, காட்டினும், பார்க்கிலும், என்பன பயன்படுகின்றன.

  ஆறாம் வேற்றுமைக்கு ஆது (ஒருமை), அ (பன்மை) என்பனவும் உருபுகளாயின. பின்னர் உடைய என்பதும் ஆறாம் வேற்றுமைப் பொருளை உணர்த்தத் தோன்றிவிட்டது.

  கால இடைநிலை : தொல்காப்பியர் இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் காலம் மூன்று எனக் கூறினும், காலத்தைக் காட்டும் இடைநிலைகள் யாவை எனக் கூறினார் இலர். தமிழில் ஒரு காலத்தில் துணைவினைகளே காலங்களை உணர்த்தின.

   பவணந்தியார்தாம் இறந்த காலத்தை உணர்த்த த், ட், ற், இன், என்பனவும், நிகழ் காலத்தை உணர்த்த கிறு, கின்று, ஆநின்று,  என்பனவும் எதிர்காலத்தை உணர்த்த ப், வ் என்பனவும் வரும் என்றனர்.

  வியங்கோள் வினை: தொல்காப்பியர் காலத்தில் வியங்கோள் வினை படர்க்கையில் மட்டும் வந்தது.

            அவற்றுள்,

            முன்னிலை தன்மை ஆயீரி டத்தொடு

            மன்னா தாகும் வியங்கோள் கிளவி

            (தொல்  சொல் 226)

அது, பவணந்தியார் காலத்தில் மூன்றிடங்கட்கும் உரிய

தாகி வழங்கியுள்ளது.

            கயவொடு ரவ்வொற்று ஈற்ற வியங்கோள்

            இயலும் இடம்பால் எங்கும் என்ப

(நன்னூல்  338)

விகுதிகள்: தன்மை ஒருமையில் அன் விகுதி

தொல்காப்பியர் காலத்தில் பயன்பட்டிலது; ஆனால் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் பயின்றுள்ளது.

            உரைத்தனன் யான்     (புறம்  136)

            யானும் வந்தனன்         (புறம்  154)

  இவ் வழக்குகள் நோக்கிய பிற்கால இலக்கண ஆசிரியர்கள் அன் விகுதியைத் தன்மைக்கும் உரியது என்றனர்.

  நாகர்கோயில் பகுதியில் வழக்கு மொழியிலும் அன் தன்மை ஒருமையில் பயன்படுகின்றது.

  அன், ஆட்சிக்கு வந்த பிறகு, தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய அல் (வருவல்) மறைந்துவிட்டது போலும்.

   தொல்காப்பியர் காலத்தில் கு,டு,து, று என்பன தன்மை ஒருமை விகுதிகளாகப் பயன்பட்டன.

   து, று, டு என்பன ஒன்றன்பால் படர்க்கை விகுதிகளாகப் பயின்றன.

   இவற்றுடன் ம் சேரத்  தன்மைப் பன்மை விகுதிகளாகின. இவை கு, கும், து, தும், டு, டும், று, றும் எனக் காலம் உணர்த்தும் விகுதிகளாகவும் பயின்றன. ஆனால் இக்கால  வழக்கில் இவை  பயின்றில.

   வினையெச்ச விகுதிகள்: தொல்காப்பியர் காலத்தில் பின், முன், கால், கடை, வழி, இடத்து என்பன வினையெச்ச விகுதிகளாகப் பயின்றன.

  பின்னர், பாக்கு, பான், வான், உம், ஆல், மல், மை என்பனவும் வினையெச்ச விகுதிகளாகப் பயின்றுள்ளன.

  இடைச்சொற்கள்: பெயர் வினைகளை அடுத்து முன்னோ பின்னோ வந்து பொருள் விளக்கம் தருவன இடைச்சொற்கள். இவையும் காலந்தோறும் வேறுபட்டு வந்துள்ளன. பழையன பல கழிந்துள்ளன; புதியன பல புகுந்துள்ளன.

   கட்டுரைச் சுவைபட யாதொரு பொருளையும் குறியாது வருவனவற்றை அசைநிலை என்பர். இவ் வசை நிலைகள் தொல்காப்பியர் காலத்தில் ஏழே பயின்றுள்ளன.

            யா, கா,

            பிற, பிறக்கு, அரோ, போ, மாது என வரூஉம்

            ஆ யேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி.

             (தொல்  சொல்  279)

ஆனால் பவணந்தியார் காலத்தில் அவை இருபதாகப் பெருகியுள்ளன.

            யா, கா, பிறக்கு, அரோ,போ, மாது, இகும்,

            சின், குரை, ஓரும், போலும், இருந்து, இட்டு,

            அன்று, ஆம், தாம், தான், கின்று, நின்று, அசைமொழி.

             (நன்னூல்  441)

 இவ்வாறு பெருகி வருவது மொழி வளர்ச்சியியல்புக்கு ஏற்றதே என்று கருதிய ஆசிரியர் தொல்காப்பியரும்,

            கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும்

            கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே.

            (தொல்  சொல்  117)

என்று ஆணையிட்டருளினார்.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்