புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை: தங்கத்தில் பதித்த முத்து
புதிய புரட்சிக்கவி
பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிக்கவி குறுங்காவியத் தழுவல்
அணிந்துரை
இனவுணர்வுக்கும், மொழியுணர்வுக்கும், தமிழ்ப் பண்பாட்டு உணர்வுக்கும் குடியாட்சியுணர்வுக்கும் மொத்தத் தொகுப்பாக முகிழ்த்த காவியம் பாவேந்தரின் புரட்சிக் கவி’.
அந்தப் புதுவைப் பாட்டுக்கு புதுமை சேர்க்கப் புறப்பட்ட காப்பியம் புலவர் பன்னீர் செல்வத்தின் புரட்சிக்கவி நாடகக் காப்பியம்’. நகலுக்கு நகைகளைப் பூட்டி அசலுக்கே அழகு சேர்க்கிறார் பன்னீர். பக்கந்தோறும் பன்னீர் தெளித்து நூலுக்கு மணம் தருகிறார். முன்னர் மொழி பொன்னே என்ற கோட்பாட்டில் பாவேந்தரின் வரிகளை அப்படியே கையாள்கிறார். மூலத்திற்கு மூலமே நிகர் எனும் தத்துவத்தில் நின்று பாவேந்தரைப் பெருமைப்படுத்துகிறார். பாவேந்தர் வரிகளும் இவரின் வரிகளும் நூலில் கலந்து கலந்து வருவது தங்கத்தில் முத்துப் பதித்தத் தன்மையுடைத்து. கதைக்காப்பியம் சுளுக்கி விடாமல் இவரின் நாடகக் காப்பியம் நாடகச் சுவையோடு நடைபோடுகிறது.
பாக்களின் யாப்பினைத் தோப்புப் பலாவாய்த் தோலுரித்துத் தருகிறார். புதிதாய் மரபு எழுதமுனையும் அமுதவல்லிகளுக்கும் அமுதர்களுக்கும் இந்நூல் அமுது! அமுது! அமுது!
தேன்விஞ்சும் தமிழே யாகத்
தீங்குயில்கள் கூவ புள்ளி
மான் துஞ்சும் நீழல் எல்லாம்
மண்டுசுவைக் கனிக ளாக
மீன் துஞ்சும் மகளிர் பான்மை
மென்தோகை மயில்க ளாட
வான் துஞ்சும் மலர்ம ணத்தில்
வளர்தென்றல் துணையாய் மேவ
இப்பாடலின் சந்தம் படிப்போர் நெஞ்சில் சந்தனம் பூசுகிறது. நாடகக் காப்பியத்தில் மன்னனை நோக்கி உதாரன்,
இழிந்திடும் அருவி யோரம்
இயற்கையே பூத்து நிற்க
வழிந்திடும் ஓடைத் தேனில்
வழுக்கியே தும்பி சாய
அழிந்திடும் நாணத் தாலே
அணங்கனார் மயங்கி நிற்க
கழிந்திடும் ஊழி யெல்லாம்
காதலர் மகிழும் நாட
எனப் பாடுகிறான். இந்தப் பாடல் சங்கப்பாடலாய் மிளிர்கிறது. கோடுகள் இல்லாக் கோலப் புள்ளி எனச் சொல்லும் நயம் போற்றுதற்குரியது.
அசையை இணைத்தே அளவாய்ச் சொற்களை
முன்னும் பின்னும் மோனை எதுகையை
எளிய பாங்கில் எழிலுற அமைத்தால்
வண்ணம் மிகுந்த வண்டமிழ்ப் பாடலாய்
எண்ணந் தேக்கும் இனிய கவிதை
நுண்ணிய கருத்துடன் திண்ணமாய்ப் பிறக்கும்.
என மரபுக் கவிதை புனையும் வழியைக் கூறுவது பயில் வோருக்குப் பாடமாக அமைகிறது.
ஒலியின் அளவை அசையென்றார்
ஒழுங்குறு அசையைச் சீரென்றார்
மெலிவில் வகையாய்ச் சீரிணையின்
மேன்மைப் பாவின் தளையென்றார்
இவ்வாறு யாப்பின் உறுப்புகளை எளிமையாகக் கூறும் விதம் நடுவீட்டில் நிலவு தோன்றியது போல் உள்ளது.
எருத்தைப் பூட்டி யோட்டுகிற
எழில் கொள் தேருக் கொப்பாகும்
என எதுகை, மோனை இல்லாத கவிதைகளைச் சாடும்போது கற்பனை மங்கை “கால்சலங்கை” கட்டி ஆடுகிறாள். மொத்தத்தில் பாவேந்தரின் புரட்சிக் கவியின் உயிரோட்டத்திற்கு இவரின் படைப்பு கூடுதல் ஊட்டச்சத்து என்று துணிந்து கூறலாம்.
அகவலும், விருத்தமும் ஆர்ப்பரிக்கின்றன, வெண்பா இனமும் தாழிசையும் வேர்விட்டு நிமிர்கின்றன. இசைப் பாடல்கள் இடையிடையே இடை நெளித்து. ஆடுகின்றன.
பாவேந்தரின் புரட்சிக்கவி புரட்சிக்கவியாகவே நாடகக் காப்பியத்திலும் விறுநடை போடுகிறது.
நல்ல மரபு வயலில் வகை வகையான செய்யுள் நடவுகள்.
புரட்சிக்கவி நாடகக் காப்பியம் புதிய முயற்சி. பாவேந்தருக்கும் தமிழுக்கும் இது பெருமை. பன்னீர் செல்லத்தைப் பாராட்டுகிறேன். அவரின் சீரிய முயற்சி வெல்க!.
12.07.04 வாழ்த்துகளுடன்
சென்னை சுரதா
Comments
Post a Comment