தமிழ்நாடும் மொழியும் 12 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 11 தொடர்ச்சி)
தமிழ்நாடும் மொழியும்
கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி
சமய நிலை
திருமால், பிரம்மா, சிவபிரான், முருகன் இவர்களைப் பற்றி மிகுதியாகவும், பலராமன், கொற்றவை இவர்களைப் பற்றி ஆங்காங்கும் சங்க நூல்கள் கூறுகின்றன. அந்தணர் மந்திர விதிப்படி வேள்விகள் செய்தனர் என்றும், அவர்கள் ‘சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச் சீரெய்திய ஒழுக்கமொடு புணர்ந்து, அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்’ பெரியோராய் விளங்கினர் என்றும், ஒருவன் இம்மையிற் செய்த வினையின் பயனை மறுமையில் அடைவான் என மக்கள் எண்ணினர் என்றும், கணவன் இறப்பின் மனைவி உடன்கட்டை யேறுதலும், அன்றிக் கைம்மை நோன்பு நோற்றலும் உண்டு என்றும் சங்க இலக்கியங்கள் சாற்றுகின்றன.
காப்பியக் காலம்
தமிழக வரலாற்றிலே ஒரு திருப்பு மையம் காப்பியக் காலமாகும். காப்பியக் காலம் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய காலமாகும். இவ்விரட்டைக் காப்பியங்களுள் சிலப்பதிகாரம் என்பது நெஞ்சையள்ளும் செந்தமிழ்க் காப்பியம் ஆகும். மணிமேகலை அத்துணை சிறப்புடையதன்று.
காப்பியக் காலத்திலே நிலவிய தமிழ்ச் சமுதாயத்தின் நிலை, அக்காலத்துச் சமயநிலை, மக்களிடையே உலவிய பழக்க வழக்கங்கள் முதலியவற்றை நன்கு அறிய நமக்குத் துணைபுரிவன இந்த இருபெரும் காப்பியங்களேயாம். இந்த இரண்டு காப்பியங்களிலும், வெவ்வேறு சமயச் சூழ்நிலைகள் காணப்படுகின்றன. அவற்றை இனிப் பார்ப்போம்.
காப்பியக் காலச் சமயச் சூழ்நிலைக்கும் சங்ககாலச் சமயச் சூழ்நிலைக்கும் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை இருகால இலக்கியங்களையும் கற்றோர் அறியலாம். சங்கக்கால இலக்கியங்களிலே கோவில்களைப் பற்றிய குறிப்புகள் மிக மிகக் குறைவு. மேலும் சங்கத்தமிழ்ச் சமுதாயத்திலே சமயத்துக்கு அளிக்கப்பட்ட இடமும் செல்வாக்கும் மிக மிகக் குறைவு. அதுமட்டுமல்ல; சமயத்தைச் சேர்ந்த புலவர்கள் சமயப் பிரசாரம் செய்யவில்லை; சமயம் பற்றிய நூல்களை எழுதவில்லை. மாறாக, பண்டைத் தமிழ்ப் புலவர்கள் வகுத்த அகம் புறம் பற்றியே பாடல்களை இயற்றினர்.
ஆனால் காப்பியக் காலத்திலே சமண, புத்த, வைதிக சமயங்களுக்குரிய கோவில் பல காணப்படுகின்றன. சதுக்கப் பூதம் என்ற ஒன்று காணப்படுகின்றது. புகார், வஞ்சி, மதுரை, காஞ்சி ஆகிய தலைநகரங்களிலே பல கோவில்கள் காணப்படுகின்றன. இளங்கோவடிகள் ஓரளவுக்குத் தன் சமயக் கருத்துகளைப் பொதிந்துள்ளார். ஆனால் மணிமேகலையிலோ சமயம் பேருருக் கொண்டு காணப்படுகின்றது. நூல் முழுதும் சமயப்பிரசாரமே. சமயவாதப் போர்கள் நடைபெறுகின்றன.
இளங்கோவடிகள் சமணராயினும் பிற சமயங்களைத் தாழ்த்திப் பாடவில்லை. ஆனால் மணிமேகலை ஆசிரியரோ புத்தமே சிறந்தது என்று கூறுகிறார். மணிமேகலை மூலம் பிற சமயங்களோடு போராட்டம் நடத்துகிறார். பிற சமயங்களின் குறைபாட்டை எடுத்துக் காட்டுகிறார். இறுதியில் புத்த சமயத்துக்கு வாகை மாலை சூட்டுகிறார். புத்த சமயக் கருத்துகள் மிக அதிகமாகக் கூறப்பட்டுள்ளன. அதனால் நூல் சுவை குன்றிக் காணப்படுகிறது.
சங்கக் காலத்தைவிடக் காப்பியக் காலத்திலே உள்ள நகரங்கள் ஓரளவுக்கு விரிவடைந்திருந்தன என்று கூறலாம்! சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினம், உறையூர், மதுரை, வஞ்சி முதலிய பேரூர்களின் சிறப்பு நன்கு பேசப்படுகின்றது. ‘தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை‘ எனக் கவுந்தியடிகளால் பாராட்டப்பெற்ற பாண்டியர் தலைநகர் காப்பிய காலத்தில் சிறந்த நிலையில் விளங்கியது. வடக்கே வையை அணிசெய்ய, புறத்தே காவற்காடும், அகழியும் கொண்டு மதுரை மாநகர் அன்று விளங்கியது. மேலும் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடியாகிய வையை பொய்யாக் குலக்கொடியாக எங்கும் தவழ்ந்து சென்று விளையாடியதால், மதுரை நகரின் புறஞ்சேரி’ புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி, வெள்ள நீர்ப்பண்ணையும் விரிநீர் ஏரியும்’ காய்குலைத் தெங்கும் வாழையும் கமுகும் பந்தரும்’ கொண்டு அறம் புரியும் மாந்தரின் இருக்கையாய் விளங்கியது. நகரின் மதில் வாயில் வாளேந்திய யவன வீரர்களால் காக்கப்பட்டது. அவ்வாயிலையடுத்து திருவீற்றிருந்த பெருவீதிகளும், அரசர் வீதியும், கலைவல்ல கணிகையர் வீதியும், அங்காடி வீதியும், மணிகள் நிரம்பிய வண்ணக்கர் வீதியும், பொன் நிறைந்த பொற்கடை வீதியும், நூலினும் மயிரினும் நுழைநூற்பட்டினும் செய்த ஆடைகள் நிறைந்த அறுவை வீதியும், கூலம் குவித்த கூல வீதியும், பிற வீதிகளும் செறிந்து விளங்கின. நகரின் மதில் வளைவிற்பொறி, கல்லுமிழ் கவண், காய் பொன் உலை, கல்லிடுகூடை, தூண்டில், தொடக்கு. ஆண்டலையடுப்பு, கவை, கழு, புதை, புழை, சென்றெறி சிரல், பன்றி, பணை, எழு, சீப்பு, கணையம், கோல், குந்தம், வேல் முதலிய பலவகைப் பொறிகளைக் கொண்டிலங்கியது.
மாண்புடன் மதுரை மாநகர் விளங்கியது போலவே, சோழர் தலை நகராகிய காவிரிப்பூம்பட்டினமும் கவினுற இருந்ததாகச் சிலம்பு கூறுகின்றது. காவிரியாறு கடலொடு கலக்குமிடத்தில் இருந்த இந்நகர் மருவூர்ப் பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இரு பெரும் பிரிவுகளாக இருந்தது. அரசர், வணிகர், மறையவர், வேளாளர் முதலியோர் வாழும் பெரு வீதிகளும், மாலை தொடுப்போர், நாழிகைக் கணக்கர், நாடகக்கணிகையர், படைவீரர் முதலியோர் வாழும் வீதிகளும் அடங்கிய பகுதியே பட்டினப்பாக்கம் எனப்பட்டது. மருவூர்ப் பாக்கத்தில், வேயா மாடம், பண்டகசாலை ‘மான் கட் காலதர்’ மாளிகை (Palatial building), கண்கவர் வேலைப்பாடுடன் கூடிய யவனர் பெருமனை, வணிகர் பெருமனை மாடங்கள் முதலியவற்றுடன் கூடிய நகர வீதியும், அருங்கல மறுகும், கூல வீதியும், பிட்டு, அப்பம், கள், மீன், உப்பு, வெற்றிலை, நறுவிரை, முத்து, மணி இவற்றை விற்போர் வீதியும் இருந்தன. இப்பகுதி கடற்கரை யாகலான், இரவில் கானற்சோலையில்
‘வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்
………………………………………….
………………………………………….
இடையிடை மீன் விலை பகர்வோர் விளக்கமும்
இலங்கு நீர் வரைப்பில் கலங்கரை விளக்கமும் “
இன்ன பிறவும் காண்பார் கண்கட்கு இனிய விருந்தளித்தன. மேலே கூறிய இரு பாக்கங்களுக்கும் இடையே இருந்த பரந்த பொழிலில், நிழல் தரும் உயர்ந்த மரங்களின் அடியில் பந்தரிட்டு வணிகர் வாணிகம் செய்தனர். இது நாளங்காடி எனப்பட்டது. மேற்கூறிய வீதிகள் தவிர, மண்டபங்கள், மன்றங்கள், தோட்டங்கள், கோவில்கள், குளங்கள் பல இப்பட்டினமெங்கும் காணப்பட்டன.
உறையூர் சோழரது மற்றொரு தலை நகரமாகும். இதனை இளங்கோவடிகள் “முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய, புறஞ்சிறை வாரணம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நகரை வாரணம் என்றும், கோழியூர் என்றும் மக்கள் வழங்கியதாகத் தெரியவருகிறது. இவ்வூரைச் சுற்றி மதிலும், கிடங்கும், அவற்றையடுத்துக் காவற்காடும், புறஞ்சேரியும், பூம்பொழிலும் விளங்கின. இவ்வூரில் இருந்த நிக்கந்தக் கோட்டத்தில் அருகக் கடவுளை வழிபடும் சாவகர் பலர் வாழ்ந்தனர்.
காப்பியக் காலத்தில் வஞ்சிமா நகர் சேரர்தம் தலைநகரமாய் விளங்கியது. இந்நகரின் புறத்தே குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற நான்கு நிலப்பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் எழுப்பிய இன்னிசையைக் கேட்டு இந்நகர மாந்தர் மகிழ்ச்சிக்கடலில் திளைத்தனர். இங்கு குணவாயிற்கோட்டம், வேளாவிக்கோ மாளிகை, பொன் மாளிகை, இலவந்தி வெள்ளிமாடம் முதலிய பெரு மாளிகைகள் இருந்தன. இந்நகர் மலை நாட்டுத் தலைநகராதலால், யானைக்கோடு, அகில், கவரி, மலைத்தேன், சந்தனம், ஏலம், மிளகு முதலிய மலைபடு பொருள்கள் இந்நகரில் எங்கும் மலிந்து காணப்பட்டன.
வடமொழிச் சொற்களும் வடவர் புராணக்கதைகளும் சங்க இலக்கியத்தில் மிகக் குறைவு. ஆனால் காப்பியங்களில் அதிகம். சங்கக்காலத்திலே திருமணம் பெற்றோரால் செய்துவைக்கப்படவில்லை. காதலர்கட்கு முழு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. பருவம் வந்த ஆணும் பெண்ணும் தத்தமக்குப் பிடித்தவரைத் தாமே கண்டு காதல் கொண்டு களவொழுக்கம் புரிந்து, அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி மணம் புரிந்து இல்லறம் என்னும் நல்லற வாழ்வில் பேரின்பங்கண்டனர்.
(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்
Comments
Post a Comment