Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10

 அகரமுதல



(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9 தொடர்ச்சி)

பழந்தமிழ்

3. பழந்தமிழ்

  தொல்காப்பியர் காலம் ஆரியர்கள் தென்னாட்டில் குடியேறிய காலம். அக்காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்பர். அக்கால நிலையைத் தெளிவாக அறிவிப்பது தொல்காப்பியமே. தொல்காப்பியர் அவர்க்கு முன்பிருந்தோர் இயற்றிய நூல்களையும், அவர் காலத்து நூல்களையும் அவர் கால வழக்கினையும் நன்கு ஆராய்ந்து மொழியிலக்கணமும் இலக்கிய இலக்கணமுமாகப் பயன்படத் தம் நூலை ஆக்கித் தந்துள்ளார். அத் தொல்காப்பியத்துள் பயின்றுள்ள பல சொற்கள் இன்றும் தமிழை வளம்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொல்காப்பியச் சொற்களுக்கு உரிய அகராதியை ஒருமுறை நோக்குவோரும் தொல்காப்பியர் காலத் தமிழே இன்றும் வாழ்கின்றது என்று எளிதில் கூறுவர்.

    முதல் நூற்பாவையே நோக்குங்கள்.

            எழுத்து எனப்படுப

            அகர முதல

            னகர இறுவாய் முப்பஃது என்ப

            சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

  இந் நூற்பாவில் பயின்றுள்ள சொற்களுள் இறுவாய், அலங்கடை என்பனதாம் தமிழ்ப் புலமையில்லார்க்குப் பொருள் விளங்கா என்னலாம்.

  இன்னும் சில நூற்பாக்களைக் காணுங்கள்.

            எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

(தொல்.சொல்155)

            அவ்வழி,

            அவன், இவன், உவன் என வரூஉம் பெயரும்

            அவள், இவள், உவள் என வரூஉம் பெயரும்

            அவர், இவர், உவர் என வரூஉம் பெயரும்

            யான், யாம், நாம் என வரூஉம் பெயரும்

            யாவன், யாவள், யாவர் என்னும்

            ஆவயின் மூன்றொடு அப்பதி னைந்தும்

            பால்அறி வந்த உயர்திணைப் பெயரே

(தொல்.சொல்162)

            உரிச்சொல் கிளவி விரிக்குங் காலை

            இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப்

            பெயரினும் வினையினும் மெய்தடு மாறி

            ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்

            பலசொல் ஒருபொருட்கு  உரிமை தோன்றினும்

            பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தி

            தம்தம் மரபின் சென்றுநிலை மருங்கின்

            எச்சொல் ஆயினும் பொருள்வேறு கிளத்தல்

            (தொல்.சொல் 297 )

  இவையெல்லாம் இன்று பயில்வோர்க்கும் எவ்வளவு  இனிமையாக,  எளிமையாகப் பொருள் விளங்கக்கூடிய முறையில் ஆக்கப்பட்டுள்ளன.

  இனித் திருக்குறள் காலத் தமிழைத் திருக்குறளின் துணைகொண்டே சுவைத்து அறியலாம். திருக்குறளின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதன்று. திருக்குறள் பொதுமக்களுக்காகவே  இயற்றப்பட்டது. ஆதலின் அக்கால மக்கள், உரையாடிய உயிர்த் தமிழ்தான் திருக்குறளாசிரியர் பயன்படுத்திய தமிழாகும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் முன்னோர் நாவில் நடமாடிய தமிழ் இன்று நம் நாவில் நடமாடும் தமிழாகத்தான் இருக்கின்றது. திருக்குறளைத் திறந்து எந்தக் குறளை வேண்டுமென்றாலும் படித்துப் பாருங்கள்.

            ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

            உயிரினும் ஓம்பப் படும்.                                 (131)

            ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்  அந்நிலையே

            கெட்டான் எனப்படுதல் நன்று.                                (967)

            யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

            சாந்துணையும் கல்லாத வாறு.                               (327)

   இவை நமக்கு விளங்காத் தமிழாகவா இருக்கின்றன. இவற்றுள் பயின்றுள்ள சொற்களே இன்றைய மொழியிலும் பயில்கின்றன.

தொல்காப்பியத்திற்கும் திருக்குறளுக்கும் பின்னர்த் தோன்றிய நூல்களெல்லாம் இவை இரண்டுக்குமுரிய தமிழிலேதான் தோன்றின. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுச் சிலப்பதிகாரமும், ஏழாம் நூற்றாண்டுத் தேவாரமும், பத்தாம் நூற்றாண்டு இராமாயணமும், பன்னிரண்டாம் நூற்றாண்டுப் பெரிய புராணமும், பத்தொன்பதாம் நூற்றாண்டு அருட்பாவும், இருபதாம் நூற்றாண்டு இன் தமிழ் நூல்களும் கொண்டுள்ள தமிழ் ஒரே தமிழ்தான். நூற்றாண்டுதோறும் தோன்றும் புலவர்கள் தோன்றினார்கள்; தம் காலத் தமிழைக் கற்றுத் தமிழ் மரபை ஒட்டியே தமிழர்களுக்குப் பயன்படும் நூல்களைத் தமிழர்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் எழுதினார்கள். ஆகவே தமிழ் மறையாமல் நூலிழைபோல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் பழந்தமிழ் மறையவில்லை என்றாலும், பழந்தமிழ்ச் சொற்களில் மாற்றம் இல்லை என்று கூறவில்லை. மறைவு வேறு; மாற்றம் வேறு. மாற்றம் மறைவாலும் ஏற்படலாம்; வளர்ச்சியாலும் ஏற்படலாம்.

  ஒரு மொழியின் சொற்களில் மாற்றம் சூழ்நிலைக்கு ஏற்ப உருவாகும். சொற்களே கருத்துகளை அறிவிக்கும்  கருவிகள். கருத்துகள் மாற்றம் அடையும்போது சொற்களும் மாற்றம் அடைகின்றன. புதிய கருத்துகளுக்குப் புதிய சொற்களும் தோன்றும். பழைய சொற்களே புதுப் பொருளையும் தரும். பழைய கருத்துகள்  பயன்படாவிடின்  அவற்றிக்குரிய சொற்களும் பயன்படா. கருத்தை அறிவிக்குங்கால் கொள்ளப்படும் மொழியமைப்பு முறைகளிலும் மாற்றங்கள் தோன்றும். இம் மாற்றங்களை இலக்கணச் சொல்லுருவ மாற்றங்கள் என அழைக்கலாம்.

  சொற்களின் வடிவ மாற்றமும் பொருள் மாற்றமும் எல்லா மொழிகளிலும் தவிர்க்க முடியாதன. ஆனால் இம் மாற்றங்கள் தொன்றுதொட்டு வரும் மொழியை மாய்த்து விடுதல்  கூடாது. தமிழில் ஏற்பட்டுள்ள சொற்கள் பற்றிய மாற்றங்கள் தமிழை மறைத்துவிடவில்லை. தமிழில் காணலாகும் இம் மாற்றங்களை அடுத்த இயலில் ஆராய்வோம்.

 (பதிப்பாசிரியர் குறிப்பு: அடுத்த பக்கத்தில் பழந்தமிழின் குடிவழிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில நூலில் குறிப்பிட்டவாறே இதில் திராவிட முதல் மொழி, சிந்து வெளி, திரமிளா (திராவிடம்) எனக் குறிக்கப் பெற்றுள்ளது. எனினும் பேராசிரியர் கருத்திற்கிணங்கத் திராவிட முதன் மொழி என்றோ  திராவிடம் என்றோ திரமிளா என்றோ கூறப்படுவனவெல்லாம் தமிழே; சிந்து வெளி மொழியும் தமிழே. பிற நடுநிலை ஆய்வறிஞர்களின் கருத்தும் இதுவே.)

திராவிட முதல் மொழி

சிந்துவெளி

திரமிளா (திராவிடம்)

கூ     பிராசி பழஞ்சிங்களம் சங்கத்தமிழ்  முதல்கன்னடம் கோண்டி  துளு  மால்டோ  உராஅன்

சிங்களம்            செந்தமிழ்     பழங்கன்னடம்

தமிழ்       மலையாளம்

தெலுங்கு  கன்னடம்       குடகு

  *Studies in Proto Indo- Mediterranean Culture- Volume I page 158 



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்