Skip to main content

தமிழ்நாடும் மொழியும் 10 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

 அகரமுதல




(தமிழ்நாடும் மொழியும் 9 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும்

கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி

பண்டைத்தமிழர் இயற்கைப் பொருள்களையே தெய்வங்களாக வழிபட்டனர். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன்; முல்லை நிலக் கடவுள் மாயோன்; மருதநிலக் கடவுள் இந்திரன்; நெய்தற் கடவுள் கடற்றெய்வம்; பாலை நிலக் கடவுள் கன்னி. குழலும், முழவும், யாழும், பறையும் கடவுள் வழிபாட்டின்கண் ஒலித்தன.

உழவு, கைத்தொழில், வாணிகம் முதலிய தொழில்கள் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கின. கைத்தொழிலில் சிறந்து விளங்கியது நெசவுத்தொழிலே. பருத்தி, ஆட்டுமயிர், எலி மயிர் முதலியன கொண்டு மக்கள் ஆடைகளை நெய்தனர். ஆடைகள் மிக நுட்பமாக நெய்யப்பட்டமையால் அவைகள் புகையைப்போலவும், பால் நுரையைப்போலவும் சிறந்து விளங்கின. கன்னார், தச்சர், கப்பல் கட்டுவோர், பொற் கொல்லர், இசைக்கருவிகள் செய்வோர் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளரும் பண்டு தமிழகத்தில் நன்கு விளங்கினர்.

ஒழுக்கமே மக்கட் பண்பு என்பது தமிழர் கொள்கையாதலால் ஒழுக்கம் உயிரினும் அதிகமாகப் போற்றப்பட்டது. “தீதும் நன்றும் பிறர் தரவாரா” “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் தமியர் உண்டலும் இலமே” போன்ற உயர்ந்த கொள்கைகளைச் சங்ககால மக்கள் பொன்னேபோற் போற்றி ஒழுகினர்.

பண்டு தமிழ்மக்கள் வீரஞ்செறிந்தவராகவும், காதல் கனிந்தவராகவும், கடமை உணர்வுடையோராகவும், பண்பு நலன்கள் அனைத்தும் கொண்டவராகவும் விளங்கினர். இன்பம், அமைதி. அழகு இம்மூன்றும் தமிழ் நாடெங்கணும் களிநடம் புரிந்தன.

வாணிகம்

சங்கக்காலத்தில் தமிழகம் மேனாடுகளுடனும், கீழ் நாடுகளுடனும் வாணிகத்தொடர்பு பெரிதும் கொண்டிருந்தது. இதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் காட்டும். மேலும் பழைய ஏற்பாடும், செனகா, பெட்ரோனியசி, பிளினி, தாலமி ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகளும் ஆகியவற்றில் தமிழர் மேலை நாட்டாரோடு செய்த வாணிகத்தைப் பற்றி நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. இதுமட்டுமா? ரோம நாணயங்கள் பல தமிழக மண்ணிற் கிடைத்துள்ளன. தோகை, மயில், அரிசி, இஞ்சி, முத்து ஆகிய சொற்கள் எபிரேய மொழியிற் காணப்படுகின்றன.

மேற்கே யவனமும் கிரேக்கமும் தமிழகத்தோடு வாணிகம் செய்தன; கிழக்கே தமிழகம் மலேயா, சீனா முதலிய நாடுகளுடன் வாணிகம் செய்தது. பாண்டிய நாட்டிலிருந்து முத்தும், சேர நாட்டிலிருந்து தந்தம், மிளகு, முதலியனவும், சோழ நாட்டிலிருந்து பட்டும் பிறவும், பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாயின. வெளிநாடுகளிலிருந்து பாவை விளக்கு, மது வகைகள், தங்கம், குதிரை முதலியன தமிழகத்தில் வந்து குவிந்தன. யவன வீரர்கள் தமிழ் மன்னர்தம் காவலர்களாகவும் பணியாற்றியிருக்கின்றனர். இவற்றைக் கீழ்வரும் வரிகள் நன்கு வலியுறுத்தும்.

‘யவனர் தந்த வினை மாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ (சிலம்பு)
“நீரின்வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடன் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்” (பத்துப்பாட்டு)

தமிழகத்து முத்துக்கு மேலை நாட்டிலே நல்ல விலையிருந்தது. மேலை நாட்டு அழகிகள் தமிழகத்தின் முத்தின் மீது மாறாக்காதல் கொண்டு விளங்கினர். இதனால் ஏராளமான தங்கம் அந்நாடுகளிலிருந்து தமிழகத்திலே வந்து குவிந்தது. பிளினி எனும் உரோம வரலாற்றாசிரியன் உரோம் நாட்டுப் பெண்கள் முத்தின்மீது கொண்டுள்ள வெறியையும், அதனால் ஏராளமான பொன் செலவாவதையும் கண்டு மிகவும் மனம் புழுங்கினான்கையசு என்ற மன்னனின் மனைவியாகிய இலாசியசி என்பவள் ஒரு சாதாரண நிகழ்ச்சிக்கு 40,000,000 செசுட்டர்கள் மதிப்புள்ள முத்தை அணிந்து கொண்டு வந்தாளாம். அதுமட்டுமல்ல; யாராவது அவள் அணிந்துள்ள முத்தின் விலையை வினவின் அதனை உடனே தெரிவிக்க அந்த முத்து விலைச்சீட்டை (Cash bill) யுங்கூட. உடன் கொண்டுவந்து இருந்தாளாம். இது பற்றிப் பிளினி மேலும் கூறுவதாவது:- “நமது ஆரணங்குகள் தங்களின் பெருமை காதிலும் கையிலும் ஒளிவிடும் முத்துக்களிலே இருப்பதாக எண்ணுகிறார்கள். முத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதினால் போதும். அவ்வளவுதான், நமது நங்கைகளின் உடல் பூரிப்படைகிறது. உள்ளம் களிப்பு வெள்ளத்திலே மிதக்கிறது. அதுமட்டுமல்ல; ஏழை எளியவர்கள் கூட அந்தச் செல்வமகளிரைப் பின்பற்றலாயினர். ‘முத்தும் முடியுடை வேந்தனும் ஒன்றே. முத்தணிந்து செல்வோள் முன் முடியுடை வேந்தன் செல்வான்‘ என்பது மக்களின் எண்ணம். இதுமட்டுமல்ல; முத்தைப் பெண்டிர் பாதத்தில் அணிகின்றனர். செருப்பு முழுவதும் முத்தே நிறைந்துள்ளது. முத்தை அணிந்தால் மட்டும் அவர்களுக்குப் போதாது. முத்தின் மீது உலவவேண்டும் என்பதும் அந்நாரீமணிகளின் மனப்பான்மையாகும்.”

இதுமட்டுமா? தமிழக மன்னர்கள் உரோம் நாட்டு மன்னன் அகச்டசுசீசருக்கும், சீன மன்னனுக்கும் தூது அனுப்பியுள்ளனராம்தமிழ் வணிகர்களுக்குக் கடலே அஞ்சியதாம். வெளிநாட்டு வாணிகத்தைப் போன்றே உள் நாட்டு வாணிகமும் சிறந்து விளங்கியது. அவ்வியாபாரம் பெருநகர்களிலன்றிச் சிற்றூர்களிலும் பரவி இருந்தது. வணிகர் வியாபாரப் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு வண்டிகளில் ஏற்றிச்சென்றனர். பகலில் திறந்திருக்கும் கடைவீதிகள் நாளங்காடி எனவும், இரவில் திறந்திருக்கும் கடைவீதிகள் அல்லங்காடி எனவும் வழங்கப்பட்டன. பண்டு வாணிகம் வளம் பெற்று விளங்கியமைக்கு முக்கிய காரணம் அன்று நாடு முழுதும் நல்ல சாலைகள் இருந்தமையே.

தமிழ்நாட்டுப் பண்டைய வாணிகச் செழிப்பைப் பற்றிப் பல ஆங்கில வரலாற்று நூல்கள் சிறந்த முறையிலே பேசுகின்றன.

அரசியல்

பண்டைத் தமிழகத்தில் நிலவிவந்த ஆட்சி முடியாட்சியே. எனினும் குடியாட்சியே அந்த முடியாட்சி மூலம் நடைபெற்றது. இதனைப் புறநானூறு நன்கு தெளிவாகக் காட்டுகின்றது. மன்னன், ‘மக்களின் நலனே தன் நலன்; மக்கள் வாழ்வே தன் வாழ்வு’ என்று எண்ணி முறைபிறழாது, அறந்திறம்பாது நெறியே நின்று ஆட்சிபுரிந்தான். காவலர்கள் புலவர் பெருமக்களுக்கு நல்ல மதிப்பை அளித்தனர். புலவர் சொல்லைப் பொன்னேபோலப் போற்றி ஒழுகினர். புலவரும் மன்னன் நன்னெறி விலகிப் புன்னெறி தழுவி இடர்ப்படுகையிலே சென்று தூயது துலக்கித் தீயது விலக்கி அறிவு கொளுத்தினர். இதனைக் கோவூர்க்கிழார் வரலாறு ஒன்றே உறுதிப்படுத்தும். முன்னர்க் கூறியவாறு தமிழகம் பண்டைக்காலத்திலே முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டது. அவர்களோடு, பாரி, காரி போன்ற வேளிரும், குறுநில மன்னரும் இருந்து நாடு காவல் செய்தனர்.

மன்னர்கள் ஆறில் ஒருபங்கு இறைபெற்று முறை செய்தனர். மேலும் அவர்கள் மக்களின் காட்சிக்கெளியராய் வாழ்ந்துவந்தனர். இதனால் மக்களும் மன்னனை எளிதிற் பார்த்துத் தம் குறைகூறி முறைசெயப்பெற்றனர்.

பண்டைத் தமிழ் ஆட்சிமுறையைச் செவ்வனே அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுவது குறளே. அரசன் என்பவன் யார்? அவன் கடமை என்ன? அவன் குடிகட்குச் செய்ய வேண்டியன என்ன? என்பன போன்ற வினாக்கட்கு விடை காண வேண்டுமாயின் குறளே பெரிதும் உதவும். மன்னனுக்கு அரசியலில் உதவ ஐம்பெருங்குழுவும், எண் பேராயமும் இருந்தன. அவற்றின் துணைகொண்டே ஆட்சி நடைபெற்றது.

(தொடரும்)
பேரா..திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்