இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’
4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி
வடமொழிச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள்தாமும் அச் சொற்களை ஆடம்பரப் பொருளாகவும் அழகு தரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாக மதிப்பதில்லை. ஆதலின் அவற்றை அறவே கைவிட்டு வாழவல்லவாம் என்பதை அவர்கள்- கீழைநாட்டு மொழிநூல் அறிஞர்கள் -அறிந்தவரல்லர். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தம்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு வடமொழிச் சொற்களை அளவுக்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின் தன்னுடைய வடமொழிக் கலவைகளைக் கைவிடுவது தெலுங்குமொழிக்கு இப்பொழுது அரிதாம் என்பது உண்மை, கன்னடத்திற்கு அதனினும் அரிதாம், மலையாளத்திற்கு அவை எல்லாவற்றையும்விட அரிதாம். அவற்றின் இயல்பு அதுவேயாயினும் திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ் தன்னிடையே இடம் பெற்றிருக்கும் வடமொழிச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர்வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம்பெற்று வளர்வதும் இயலும்.
செந்தமிழ் என்றும் , தனித்தமிழ் என்றும் சிறப்பிக்கப் பெறுவதும் பெரும்பாலும் அம் மொழி இலக்கியங்கள் அனைத்தையும் எழுதப் பயன்படுவதுமாகிய பழந்தமிழ் அல்லது இயல் தமிழ் மிக மிகக் குறைந்த வடமொழித் தொடர்பையே பெற்றுள்ளது. வடமொழிச் சொற்களையும் எழுத்துகளையும் மேற்கொள்வதை வெறுத்து ஒதுக்கிவிட்டுப் பழந்திராவிடத் தனிச் சிறப்பு வாய்ந்த மூலங்கள், சொல்லுருவங்கள் ஒலிமுறைகளை மட்டும் மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் விழிப்புணர்ச்சியையும் விடாமல் மேற்கொண்டிருப்பதனாலேயே அச் செந்தமிழ் தன்மொழியின் உரைநடை, பேச்சு நடையோடு சிறப்பாக வேறுபடுகின்றது. ஒரு தமிழ்ச் செய்யுள், இலக்கியச் சுவை மலிந்து இலக்கியம் என்ற தகுதிக்கு உரியதாய் உள்ளது என்பது பிறமொழி இலக்கியங்களில் உள்ளதுபோல், அச் செய்யுள் ஆண்டிருக்கும் வடமொழிச் சொற்களின் எண்ணிக்கை அளவைப் பொறுத்திராமல், அவ் வடமொழி ஆட்சியிலிருந்து எந்த அளவு வடமொழிச் சொல்லாட்சியை வெறுத்துள்ளது என்பதையே பொறுத்திருக்கின்றது என்று மதிக்குமளவு கற்றுவல்ல தமிழ்ப் பெரியார்கள் உள்ளத்தில் அவ் வடமொழி வெறுப்புணர்ச்சி ஆழப் பதிந்துள்ளது.
வாழ்வியலில் பிறரிடம் கடன் பெறுவதைத் தமிழர் வெறுத்தது போன்று மொழியியலில் கடன் பெறுவதையும் வெறுத்தனர். ஆதலின் தொடக்கத்தில் வடமொழிப் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ்ப் பெயராக்கிப் பயன்படுத்தினர்.
தருமபுத்திரனை அறவோன் மகன் (புறம்366) என்றும், காலகண்டனை நீலமணிமிடற்றோன் (புறம்56) என்றும் தமிழ்ப்படுத்தினர். சில வடமொழிப் பெயர்களுக்கு வேறு தமிழ்ப் பெயர்கள், பெயருடையோர் தொழிலாலும், கொடியாலும், நிறத்தாலும் கொடுக்கப்பட்டன. உயிர்களை அவற்றின் வினை வகையால் கூறுபடுத்தும் தொழிலோன் என்று கருதி யமன் என்பவனைக் கூற்றுவன் என்று அழைத்தனர். பலராமன் நிறத்தால் வாலியோன் என்றும், கொடியால் பனைக்கொடியோன் என்றும் அழைக்கப்பட்டான். காலப்போக்கில் இம் முயற்சி தளர்ச்சியுற்றது. வடமொழிச் சொற்களைத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றி வழங்கினர். பின்னர் வடமொழியின் செல்வாக்கு மிகுந்தது. அரசியல் ஆவணங்களிலும், கல்வெட்டுக்களிலும் வடமொழியே பயன்படுத்தப்பட்டது. அரசர்களும், செல்வர்களும், புலவர்களும், கலைஞர்களும் வடமொழியைப் போற்றினர். மக்கள் பெயரும் பிறவும் வடமொழியாயின. தமிழிலக்கியங்களில் வடமொழிச் சொற்கள் இடம்பெறுதல் பெருகிக்கொண்டே வந்து வடமொழியும் தமிழும் கலந்து பேசும் மணிப்பிரவாள நடை தோன்றும் நிலை எய்தியது.
மேல்நாட்டார் தொடர்பு தமிழருக்கு ஏற்பட்டுவிட்டது. முதலில் கிரேக்க மக்களும் உரோம மக்களும் அராபிய மக்களும் வாணிபம், தொழில் காரணமாகத் தமிழ் நாட்டுக்கு வந்தனர். கிரேக்கர்களை யவனர்கள் என்று அழைக்கத் தொடங்கிய பின்னர் மேல்நாட்டார் அனைவரையும் அப் பெயரால் அழைத்தனர்.
கி.மு. ஆண்டுகளிலேயே தமிழ்ச்சொற்கள் பல, ஈப்ரூ மொழியில் இடம் பெற்றுவிட்டன. அக்காலங்களில் மேலைநாட்டு மொழிச்சொற்கள் தமிழில் இடம்பெறவில்லை.
மகமதியர் ஆட்சியும் ஆங்கிலேயர் ஆட்சியும் இந் நாட்டில் ஏற்பட்ட பின்னர், உருது மொழிச் சொற்களும் மேலைநாட்டு மொழிச் சொற்களும் பேச்சு வழக்கில் மிகுந்தன. கச்சேரி, வக்கீல், சமீன், அசல், தாசில், முன்சீப், சர்க்கார் முதலியன உருதுமொழிச் சொற்களே. எல்லாமாக 411 சொற்கள் தமிழில் புகுந்தன.
கவர்ன்மெண்ட், கவர்னர், கௌன்சில், கமிட்டி, கம்பெனி, பிரைவேட், பப்ளிக், ஜட்சு, ஆர்டர், அப்பீல், கலெக்டர் போன்ற ஆட்சித் தொடர்பான ஆங்கிலச் சொற்கள் 486 தமிழ் வழக்கில் இடம் பெற்றன.
பேச்சு வழக்குச் சொற்களை ஆராய்ந்தால் அரபி, பெர்சியன், உருது, போர்த்துக்கீசியம், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய பல்வேறு மொழிகளிலிருந்தும் தமிழில் வந்து வழங்கும் சொற்கள் 1202 ஆகும்.1
இக்காலை ஆங்கில ஆட்சி அகன்று மொழிவழி நாடுகள் அமைந்து தமிழ்நாட்டு ஆட்சிமொழி தமிழே என்று ஒப்புக் கொள்ளப்பட்டுச் செயல்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் வேற்று மொழிச் சொற்கள் பல மறைந்துவிட்டன. புதிய தமிழ்ச்சொற்கள் தோன்றி வருகின்றன. ஆணையர், பொறியர், காவலர், வருவாய்த் துறை, மாவட்டம், ஆளுநர் போன்ற சொற்கள் ஆட்சியின் தொடர்பாகத் தோன்றியுள்ளனவே. நம் நாட்டு ஆட்சியாளரும் இதற்கெனத் தனித்துறை யமைத்துத் தனி அலுவலர்களும் நியமித்து ஆட்சிமொழியாகத் தமிழ் செயல்படுவதற்கு ஆவன செய்து வருகின்றனர். ஆயினும் இதனை, இதனால், இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் எனும் வள்ளுவரின் வாய்மொழியைப் போற்றித் தமிழ்ப் புலமையுற்றோரை இத்துறையில் அமைத்திலர். மருத்துவத் துறைக்கு மருத்துவ அறிஞரும், சட்டத் துறைக்கு வழக்கறிஞரும், தொழில்நுட்பத் துறைக்குத் தொழில் வல்லுநரும் தேடப்படுவது போல், மொழித்துறைக்குப் புலவர்களே அழைக்கப்படுதல் வேண்டும். மாறாக மொழிப் புலமையில்லாதாரை வேறு காரணங்களுக்காக மொழித் துறையில் அமர்த்தி எண்ணிய செயல் ஈடேறாமல் செய்து வருவது இரங்கத்தக்கதே.
மரியாப்பாய் (Mario Pei) என்ற மொழிநூலறிஞர், ஆங்கில மொழி வளர்ச்சிக்காகக் கூறுவது, நம் தமிழ் மொழிக்கும் பொருந்துவதாகும். அவர் கூறுகின்றார்: மொழியியல் கழகங்கள் பிரிட்டனிலோ, அமெரிக்காவிலோ இல்லை என்பது உண்மைதான். ஆளால் திருத்தமுற்ற மொழியை வளர்க்கும் கற்றறிந்த பெரியோர்கள் பெருங்கூட்டத்தினராக உள்ளனர். அவர்கள் அறிவுத்துறையில் ஈடுபட்டு மொழியை நன்கு பயன்படுத்தும் நிலையில் ஏனையோரினும் வாய்ப்பு மிகுதியாகப் பெற்றுள்ளனர்; அவர்கள் மிகுதியான நூல்களைப் படிக்கின்றனர்; மிகுதியான அளவில் எழுதுகின்றனர்; மிகுதியான அளவில் பேசுகின்றனர்; அவர்கட்கு மிகுதியான சொற்செல்வம் உண்டு; அச் சொற்களை அழகுபட ஒன்று சேர்க்கும் கலையில் அவர்கள் தேர்ந்தவர்கள். ஓர் உந்து வண்டியைப் பற்றி அறிய விரும்பினால் அதன் பொறியியலும் தொழில் நுட்பமும் தெரிந்த ஒருவரையே நாடி அறிய முயலுகின்றோம். உந்து வண்டியை ஓட்டமட்டும் தெரிந்தவரிடம் சென்று அறிவதில்லை. அது போன்று, மொழியை நன்கு பயன்படுத்தும் புலவர் வழியாகவே மொழியைப் பயன்படுத்தும் முறையை அறிய வேண்டும். மொழியைப் பேசமட்டும் தெரிந்தவரிடம் சென்று அறிய முயலுதல் கூடாது. ஆதலின் மொழியை நன்கு கற்றறிந்தவர்களையே இத் துறையில் வழித்துணையாகக் கொள்ளுதல் வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் முறையே முன்மாதிரியாக அமைதல் வேண்டும். இவ்வாறு கொள்வதனால் வேறு பயன் எய்தாவிட்டாலும் நன்கு கற்றறிந்தவர் என்ற புகழாவது கிட்டும். அது வாழ்க்கையில் உயரத் துணை செய்யும்.2
- The Modern – Tamil – Tamil Dictionary.
2. All about Language – Page 112.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Comments
Post a Comment