அணிற்பிள்ளை – தி.ஈழமலர்
கோடை முழுக்கக் கொண்டாட்டம்தான்!
பிறந்து ஓரிரு நாட்களே
ஆன, இவ்வளவு சிறிய அணிற்பிள்ளையை இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே பார்த்து
இரசிக்கும் வாய்ப்பு சின்னக்குட்டி அழகனைத்தவிர வேறு யாருக்கும்
கிட்டியிராதுதான். அழகன் – பெயருக்கு ஏற்றாற்போல் அழகும் அறிவும் மிகுந்த
துடிப்பான 3 வயதுக் குழந்தை.
அந்த அணில், இவர்கள் புதுமனை புகும்
பொழுது பழைய வீட்டில் கிடைத்த பரிசு. அன்று, அந்தப் புது வீட்டில் அனைவரும்
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பொழுது, அழகன் மட்டும் தாத்தாவின் அறையை
அடிக்கடி நோட்டமிட்டு இருந்ததை அவன் அண்ணனைத் தவிரப் பிறர் கவனித்து இருக்க
மாட்டார்கள். தாத்தாவின் சிறிய அறையில் உள்ள பழைய கூடைதான், அந்த அணிலின்
புது வீடு! இதற்கு முன், அழகன் கைக்குழந்தையாக இருந்த பொழுது, அவனது
துணிகளை அடுக்கப் பயன்பட்டது; அதற்கும் முன், அவன் அண்ணன் அறிவனின்
விளையாட்டுப் பொம்மைகளைச் சுமந்தது; இன்று வேண்டாத துணிகளால் ஆன,
மெத்தையிடப்பட்டு அணிலைத் தாலாட்டும் தொட்டிலாகிவிட்டது அந்தக் கூடை.
மணிக்கு மும்முறை அணிலைப்
பார்த்தால்தான் அண்ணனுக்கும் தம்பிக்கும் பொழுதே நகரும். ஆனால், இவர்களின்
அப்பாவிற்கு இது தெரிந்தால், முதுகுத் தோலை உரித்து விடுவார் என்னும் பயம்
தாத்தாவிற்கு. தாத்தா, தன் மகன் வீட்டில் தங்கி உள்ளார். பேரப்பிள்ளைகள்
மீது கொள்ளை அன்பு கொண்டவர்; தற்சமயம் அணிற்பிள்ளை மீதும்! ஆனால்,
அவருக்குத் தெரியாது, தன் மகனுக்குத் தன் மீதும் தன் அறை மீதும் வந்த
சந்தேகத்தைப் பற்றியும் அதனால், மாலை வீச விருக்கும் சூறாவளியைப்
பற்றியும்!
உணவருந்திவிட்டு
விருந்தினர் அனைவரும் சென்று விட்டனர். அண்ணனும் தம்பியும் அணிற்பிள்ளையைப்
பார்க்க ஓடோடி வந்தனர். ‘‘தாத்தா! தாத்தா! என்ன செய்கிறீர்கள் தாத்தா? ’’ –
இஃது அழகன். ‘‘அடடே! வாங்க! வாங்க! சின்னக் குட்டிகளா! இங்க
பார்த்தீர்களா, உங்கள் குட்டி அணில் பால் குடிப்பதை! ’’ தாத்தாவிற்கு
அளவற்ற ஆனந்தம், அணிலின் பசி ஆற்றியதைக் குறித்து. “எப்படித் தாத்தா அணில்
பால் குடிக்கும்? நானும் பார்க்கிறேன் தாத்தா”.
‘‘இங்க வா, சின்னக் குட்டி! இதுதான் மை
உறிஞ்சி. இதில் பாலை உறிஞ்சி எடுத்து, அணில் வாயில் வைக்க வேண்டும். இங்கே
பார் எப்படிச் சப்பிச் சப்பிக் குடிக்கிறது! சின்னக் குட்டி மாதிரியே
சமர்த்து அணில். அதுதான் அடம்பிடிக்காமல் பால் குடிக்கிறது.’’
‘‘தாத்தா அணில் உங்களைக் கடிக்காதா? கையிலேயே வைத்து இருக்கிறீர்களே!’’.
‘‘அணிலுக்கு இன்னும் பல் முளைக்கவில்லை
கண்ணா! பல் முளைக்க இன்னும் சில நாள் ஆகும். அப்புறம்தான் கடிக்கும்.’’
குழந்தைகளின் கேள்விக் கணைகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் தாத்தா.
அதற்குள், உள்ளே வந்த பிள்ளைகளைத் தேடி அப்பா வந்து விட்டார். அணிற்
பிள்ளையைப் பார்த்தும் விட்டார். அவ்வளவுதான்!
‘‘என்னப்பா இது? இந்தக் குட்டி அணிலை இங்கே
கொண்டு வரவேண்டாம் என்று சொன்னேன் அல்லவா? என்ன காரியம் செய்து
விட்டீர்கள்? இதை அங்கேயே அதனிடத்திலேயே விட்டுவிட்டுத்தானே வரச் சொன்னேன்.
ஏம்ப்பா இப்படி எல்லாம் செய்கிறீர்கள்?’’ என்றார். அதைக் கேட்டதும்,
பிள்ளைகள் இருவரும் பயந்து போய் விட்டனர். அம்மா அடுப்படியில் இருந்து
சத்தம் கேட்டு ஓடி வந்து விட்டார். இவரை எப்படிச் சமாதானப்படுத்துவது, என்ன
சொல்லி அணில் வளர்க்கச் சம்மதிக்க வைப்பது? என்ற சிந்தனையில், தாத்தா
மூழ்கிய கணம், நல்ல வேளையாக அப்பாவின் கைப்பேசி சிணுங்க, அதைக் கவனிக்கச்
சென்று விட்டார் அப்பா. “அப்பாடா!” அனைவரிடம் இருந்தும் அவ்வமயம் வந்த
பெருமூச்சில் அநேகமாக அந்த அறையின் வெப்ப நிலை கூடச் சற்று உயர்ந்திருக்கக்
கூடும்.
அம்மா கேட்டார்
தாத்தாவிடம். ‘‘மாமா! இதை எப்படி இங்கே கொண்டு வந்தீர்கள்? என்ன நடந்தது?
அவர் என்ன சொன்னார் ? ஏன், இவ்வளவு கோபமாகப் பேசுகிறார்? ’’
‘‘அஃது ஒன்றும் இல்லை
அம்மா! நேற்று மாலை, நம் பழைய வீட்டின் பின்னால் உள்ள கூரையைப் பிரிக்கும்
பொழுது, இந்த அணில் அங்கு இருந்தது. தனியாகக் கீழே விழுந்து கிடந்தது. நான்
அருகில் போய்ப்பார்த்தேன். எப்படி இது அங்கு வந்தது என்றே தெரியவில்லை.
நான் பார்த்ததை உன் கணவனும் பார்த்து விட்டு, என்னிடம் வந்தான். அதற்குள்,
நான் அந்த அணிலை எடுக்கப் போனேன். அவன் வேணடாம் என்றான். அணிலை
வீட்டிற்குக் கொண்டு வருவது தவறு; அணில் இயற்கைச் சூழலில்தான் வளர
வேண்டும். என்றெல்லாம் அறிவுரை கூறி, அதை விட்டு விட்டு வருமாறு சொல்லிப்
போய்விட்டான். பிறகு அவன்போனதும் அவனுக்குத் தெரியாமல், அணிலை எடுத்து
வந்து விட்டேன். இங்கு வந்து அணிலைப் பத்திரப்படுத்தும்போது, பிள்ளைகள்
பார்த்து விட்டனர். இப்போது அவனும் பார்த்து விட்டான். ம். ம். என்ன
நடக்குமோ! ’’
‘‘என்ன மாமா நீங்க! அவர்தான்
கோபப்படுவார்னு தெரியுமே! . . . அப்புறம் ஏன் அவருக்குத் தெரியாமல் கொண்டு
வந்தீங்க. . .? அவருக்குத் தெரியாமலேயே இந்த அணிலை இந்த வீட்டில் வைத்து
வளர்க்க முடியுமா? ’’ சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஏதோ தீயும் வாடை வர,
கிளம்பிச் சென்று விட்டார் அம்மா.
பிள்ளைகள் இருவரும் அப்பாவைச்
சமாதானப்படுத்தி, அணில் வளர்க்கச் சம்மதிக்க வைக்கும் முயற்சியில்
இறங்கினர். அப்பா தனது கைப்பேசியைக் கீழே வைத்த மறுநொடி, ஓடிச் சென்று
அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான் அழகன். மடியில் சென்று உட்கார்ந்தான்
அறிவன்.
‘‘அப்பா அப்பா
அந்தக் குட்டி அணிலை நாமே வளர்க்கலாம்ப்பா!.. அது நம்மை ஒன்றுமே செய்யாது
அப்பா! …. அதற்கு இன்னும் பல்கூட முளைக்கவில்லை அப்பா! …அது மிகவும்
அழகாயிருக்கப்பா! ’’ – அழகனின் கொஞ்சல் இவை.
‘‘அப்பா! அது பாவம்ப்பா! …அதற்கு
அப்பா அம்மாகூடக் கிடையாதுப்பா. ..அந்தக் குட்டி அணிலுக்கு நம்மை விட்டால்
வேறு யாருமே இல்லையப்பா….அதுக்கு இன்னும் சாப்பிடக்கூடத் தெரியலைப்பா…
வெளியில் போனால் அது சாப்பிடாமலேயே செத்துப் போயிடும்ப்பா.. அதை நாமே
வளர்க்கலாம்ப்பா! …. ’’ – இவை அறிவனின் கெஞ்சல்கள்.
தாத்தா அறையிலிருந்து
மெல்ல எட்டிப்பார்த்தார். ‘‘ஓ! இதெல்லாம் தாத்தா சொல்லித் தந்த பாடமா?
ம்.ம்.. இங்கே பாருங்கம்மா கண்ணுகளா! உங்களை அம்மா அப்பா கிட்ட இருந்து
பிரித்து ஒரு கூண்டில் அடைத்துக் கேட்டதையெல்லாம் கொடுத்தால், நீங்கள்
மகிழ்ச்சியாக இருப்பீர்களா? அம்மா அப்பா இல்லாமல் சிரமமாக இருக்கும்தானே!
.. எங்களுக்கும் நீங்கள் இல்லாமல், உங்களைப் பார்க்காமல், கவலையாக
இருக்கத்தானே செய்யும்? இப்ப சொல்லுங்க! அதே மாதிரிதானே அந்தக் குட்டி
அணிலும் கவலைப்படும்? அதன் அம்மா அதைக் காணவில்லை என்று எவ்வளவு
வருந்தியிருக்கும்?. . . அதன் அப்பா அதைத் தேடிப் பார்த்து விட்டு
ஏமாற்றத்தோடு போயிருக்கும்? இதை அதன் பழைய இடத்திலேயே விட்டு விட்டால்,
மறுபடியும் அந்த அப்பா அணில் தேடிவரும்பொழுது, மகிழ்ந்து இதைக் கூட்டிப்
போய்விடும் அல்லவா? இதை நாமே வைத்திருந்தால், ஒரு குழந்தையைப் பெற்றோரிடம்
இருந்து பிரித்த பாவம் நம்மைத்தானே சேரும்? அதனால், இந்த அணிலை அங்கேயே
விட்டு விட்டு வரலாம்.’’
அப்பா சொன்னது
ஏதோ புரிந்ததுபோல் இருந்தது பிள்ளைகளுக்கு! அணிலை விடவும் மனமில்லை; அதை
வைத்திருப்பது தவறு என்பதுபோலவும் தெரிந்தது. செய்வதறியாமல் திகைத்தனர்
பிள்ளைகள். தாத்தா தன் மகனிடம் கூறினார் : ‘‘நீ சொல்வதெல்லாம் சரிதானப்பா.
ஆனால், இந்த அணிலுக்கு வேறு உறவுகள் இருப்பதுபோல் தெரியவில்லை.
இருந்திருந்தால் அவ்வளவு நேரம் இது கீழே கிடந்திருக்காது. இதற்கு முடி
மட்டுமாவது முளைக்கட்டும்! அதன் பிறகு நாம் இதைக் கொண்டுபோய் எங்காவது
விட்டுவிடுவோம். அது பிழைத்துக்கொள்ளட்டும். இப்போதே விட்டு விட்டால் பூனை
ஏதாவது வந்து தின்றாலும் ஆச்சிரியமில்லை. என்ன பிள்ளைகளா ! சிறிது காலம்
மட்டும் இது நம்முடன் இருக்கட்டும், சரிதானே! ’’ என்றார்.
பிள்ளைகள் மறுபடியும்
கெஞ்சலாயினர். அம்மாவையும் துணைக்கு அழைத்தனர். ஒரு வழியாக நால்வரும்
சேர்ந்து அப்பாவின் மனத்தைமாற்றி, அணில் வளர்க்கச் சம்மதம்வாங்கி விட்டனர் –
ஒரு நிபந்தனையுடன். நீலச் சிலுவைச் சங்கத்தினரிடம் அறிவுரை கேட்டு அணில்
வளர்க்கும் முறை அறிந்து வளர்க்க வேண்டும் என்பதே அந்நிபந்தனை.
எப்படியோ இன்னும் ஒரிரு மாதங்களுக்கு அந்த அணிற் பிள்ளை இந்த இளம்பிள்ளைகளுடனேயே இருக்கும். கோடை முழுக்கக் கொண்டாட்டம்தான்!
– பொறி. தி.ஈழமலர்
Comments
Post a Comment