பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 26 – ஆ.வெ.முல்லை நிலவழகன்


Jpeg
(வைகாசி 10, 2046, மே 24, 2015 தொடர்ச்சி)

காட்சி – 26


அங்கம்    :     கவிஞர், அன்பரசன்
இடம்      :     குடிலின் முன்வாசல்
நிலைமை  :     (நகையைக் கண்டு நகைத்த கவிஞர்
நகைக்கோர் வழியை உரைக்கின்றார்)
கவி  :     தாலிக்குத் தவியாய் தவித்தே ஒருவன்
பாவியாய் இங்கே வாழ்ந்திடும் போது! பல
வேலிக்கு சொந்தக்காரனின் வீட்டில்
குவிந்தே கிடக்கும் கொடுமையைப் பாரேன்
அன் :     இந்நிலை எதனால் புலவீர்?
விந்தையுமன்றோ? கேட்க!
கவி  :     போர்முனை அறியா ஒருவர்! இங்கே!
இராணுவ அமைச்சராவார்!
ஏர் முனை அறியா ஒருவர்! இங்கே!
வேளாண் அமைச்சராவர்!
கண்ணில்லா ஒருவர்! இங்கே! பெரிய
நாட்டியத் தேர்வாளர் ஆவார்!
நன்செவியில்லா ஒருவர்! இசைக்
கலைஞரைத் தேர்ந்தே எடுப்பார்!
எவரெவர் எதற்குத் தகுதி
என்பதே இங்கு இல்லை!
தவறியே எவரேனும் உரைத்தால்
விடுதலை நாடு அன்றோ?
அனைவருக்கும் உரிமை உண்டு!
தகுதியே தேவை இல்லை
துணிந்தால் நீயும் வரலாம்!
முடிந்தால் வாயேன்! என்பார்!
முடியுமா? உன்னால் தம்பி!
நடிப்பு, பணமே தகுதி!
விடியுமா? ஏழைக்கு என்றும்?
இதனால் இந்நிலை தம்பி!
அன் :     உழைப்போர் சிலரின் வாழ்வே! சீரிய
அழைப்பாய் கொஞ்சம் உரைப்பீர்!
கவி  :     காலையில் எழுந்து கிடைத்ததை விழுங்கி
ஆலைக்குச் செல்லும் பணிமகனொருவன்
மாலையில் சங்கு ஊதிய பின்பு
ஆலையை விட்டு வெளியினில் வந்து
வெற்றிடப் பாலமோ கூடமோ அமர்ந்து
இரவிலே நீண்ட கதைகளைப் பேசி

இல்லம் சொல்வார்! அறிவாய் நீயே!

அன் :     உழைப்பிற்கு உயர்வென்று கிடைத்திடுமோ?
உழைப்போர் மனமென்று மலர்ந்திடுமோ?
கவி  :     மலரத்தான் போகுது ஓர் நாளில்
உழைப்போர் அரசு
நிலைக்கத்தான் போகுது பாரெங்கும்!
கவிஞனின் வாக்குதவறாது!

(காட்சி முடிவு)
+++
இடைவேளை)
(பேடையும் சிட்டும் பேசியே களித்து
ஊடல் கொண்டு! கூடல் நிகழ்த்தி
வாடைக்காற்றில் இன்பமே கண்டு
வாய்ப்பேசாதங்கே இன்பத்திலிருக்க!
அன்புவும் சென்று வெற்றிலைப்பாக்கு
வாங்கியே வந்து கவிக்குக் கொடுக்க!
சுண்ணாம்பு தடவ வெற்றிலையில்
காட்சியும் ஆங்கே தொடங்கியது!…)
- பாடும்
– ஆ.வெ.முல்லை நிலவழகன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்