சங்க இலக்கியங்கள் மங்கா இனிமை பயப்பன – புலியூர்க் கேசிகன்

puliyurkesigan01
அகத்தெழும் உணர்வுகள் அனைத்தும் உலகிடை
முகிழ்த்திடும் காதலில் முதிர்ந்தே தோன்றிடும்;
பருவத்து மலர்ச்சியும் பாவையின் வனப்பும்
செறிவுற்று இலங்கும் சேயிழை நல்லாள்
மறத்தின் மாண்பும் மலர்தமிழ்ப் பண்பும்
திறத்தில் உருவாய்த் திகழுமோர் காளையைக்
கண்டதும் அவனிற் கலந்திடத் துடிப்பாள்;
நாணும் மடமும் நற்குலப் பண்பும்
தாமே அகன்றிடத் தளர்வாள் காதலால்;
ஆண்மையும் சிறப்பும் அந்நிலை அகன்றிடப்
பெண்மையை நாடிப் பித்தெனும் நிலையில்
அவனும் தளர்வான் அங்கவர் கலப்பார்;
இங்கிவர் தம்முட் களவிற் கண்டிடும்
இன்பமே குறிஞ்சியாம்; இருந்தவள் இரங்கிடல்
முல்லையாம்; முதல்வன் ஒழுக்கம் இழுக்கிட
மனையாள் தன்னுள் மருள்வதும் சினப்பதும்
மருதமாம்; மற்றவன் பிரிந்திட்ட காலையில்
தனித்திருந் தேங்குத் தலைவியின் துயர
நினைவே பாலையாம்; அவன்துணை வேண்டியாள்
அதுதனைப் பெறாதே எண்ணி இரங்குதல்
நெய்தலாம்; எனவிவர் ஒழுக்கம் நிகழும்
இங்கிந் நிலைகளில் இவர்மனத் தெழுந்தே
பொங்கும்; உணர்வெலாம் பொருந்தியே நினழ்வதும்
இவர்தம் வாழ்வை இனித்திடச் செய்தலைக்
கருதிக் கழறிடும் பல்லோர் உரைகளும்
தமிழினச் சால்பைத் தாம்நிலை பெறுத்தும்
தகவுடை யனவவை தமிழ்அக நூல்களாம்
அவற்றுட் சிறந்தது அகநா னூறெனும்
செழுந்தமிழ்த் தேறல் நம்சிந்தை பிணிப்பது;
அதுதான் மூவகைப் பகுப்பாம்; அதனுள்
முதற்பகுப் பாகுமிக் களிற்றியா னை நிரை.
புலமைச் செறிவும் பொங்கிடு தமிழின்
இனிமைச் செறிவும் இணைந்தநற் சான்றோர்
தமிழ்நிலம் நிலைக்கச் சாற்றிய பாக்கள்;
கன்னலின் சாற்றொடு நற்றேன் கலந்தே
பின்னரும் பசுப்பால் பெய்திட்ட செவ்வியில்
இனிமை பயப்பன; இன்றமிழ் மனையறம்
என்றும் மணக்கச் செய்யும் மாண்பின்;
கற்பவர் தமிழின் செவ்வியிற் கலந்தே
உயர்ந்திடச் செய்யும் ஒளிர்நெறி காட்டித்
தமிழே றென்னச் செம்மாந்து தமிழின்
வளத்தை நாடிடும் வகையெலாம் மேற்கொளத்
தமிழ்நலம் என்னும் தகையொடு சேர்ப்பன.
அன்பர் யாவரும் அகங்கொளக் கற்றே.
தமிழ்வழி தமிழறம் தம்நிலை என்னந்
தம்மளம் தமிழாய்த் திகழ்ந்தே
மகிழ்க. உயர்கவிம் மலர்தலை உலகே.

Comments

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்