முள்ளிநிலத்தில் கள்ளக் கொலையாளிகள்! – – கவிஞர் தணிகைச் செல்வன்




kavijnar_thanikaichelvan
முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய
 வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி
கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ…!
 பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம்
 முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ…!
 கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற
 வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வியர்க்கலையோ…!
 ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோற்றுக்கும்
 இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரைக் காண்கிலையோ…!
 ஐயோ உலகே! ஐயகோ பேருலகே!
 பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ?
 கையேந்தி வந்தாரைக் கரமேந்தி காத்த இனம்
 கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும்.
 எல்லாம் இழந்தோம் இழப்பதற்கு ஏதுமில்லை…
 கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்
 துணியதனை இழந்ததாலே துரோபதி சபதம் நியாயம்
 தனதுமண் இழந்ததாலே தருமனின் யுத்தம் நியாயம்
அனைத்தையும் இழந்த எங்கள் ஆவேசம் நியாயம் ! நியாயம் !
தாக்குண்டால் புழுக்கள்கூட தரைவிட்டுத் துள்ளும் , கழுகு
 தூக்கிடும் குஞ்சுகாக்க துடித்தெழும் கோழி; சிங்கம்
 மூர்க்கமாய் தாக்கும்போது முயல்கூட எதிர்த்து நிற்கும்…
 சாக்கடைப் கொசுக்களா நாம் ? சரித்திர சக்கரங்கள் !
 சரித்திரம் சுழலும்போதும் சமுத்திரம் குமுறும்போதும்
 பொறுத்தவன் பொங்கும்போதும் புயல்காற்று சீறும்போதும்
 பறித்தவன் ஆதிக்கத்தைப் பசித்தவன் எதிர்க்கும்போதும்
 மறித்தவன் வென்றதுண்டா ? மறுத்தவன் நின்றதுண்டா?
புவியோடிப் படர்ந்திருக்கும் நவகோடித் தமிழினமே !
 நீ, இழக்கப்போவது அடிமைச் சங்கிலிகளைத்தான்-
 பெறப்போவதோ ஒரு பேருலகம் ! ஒரு பொன்னுலகம் !
 அதுதான் தமிழுலகம்…!
- கவிஞர் தணிகைச் செல்வன்

eezham massacre01

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue