சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 1: மறைமலை இலக்குவனார்
1
கட்டுரையின் நோக்கம்:
கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தராக விளங்கிய சங்கத் தமிழர், தம்மைச் சுற்றியும் ஒலிக்கும்
ஒலிகளையறிந்து அவ்வொலிகளின் வழித் தம் இயக்கத்தை அமைத்துக்கொண்டனர்.
வளியின் போக்கையறிந்து நீரில் கலன்களைச்
செலுத்தும் முறைமையையறிந்த தமிழர்,நிலத்தில் தம்மைச் சூழ்ந்தமையும்
ஒலிகளின் மாறுபாடுகளை வகைப்படுத்தியறிந்து ஊறு நேர வாய்ப்புள்ள வழிகளைத்
தவிர்த்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றிருந்தனர். இனிய ஓசைகளைச்
செவியாரத் துய்த்தும் இன்னா ஓசைகளை இனங்கண்டு பிறர்க்குரைத்தும் ஒலிகளை
ஒப்புநோக்கிக் கூறியும் தம்மைச் சூழ்ந்திருந்த ஒலிச்சூழலமைவை அவர்கள்
ஆய்ந்துரைத்த திறம் இக் கட்டுரைக்குத் தூண்டுகோலாக அமைந்தது.ஒலிகளையும்
பேரொலிகளையும் சங்கச் சான்றோர் தமது பாடல்களில் பதிவுசெய்த பாங்கினையும்
அவர்கள் விளக்கிய ஒலிவகைமைகளையும் தொகுத்துரைத்தலே இக் கட்டுரையின்
நோக்கமாகும்..
ஒலிச்சூழலமைவு-தேவையும் நோக்கமும்:
மனிதன், தன்னைச் சூழ்ந்துவிளங்கும்
உயிரினங்களையும் பயிரினங்களையும் ஆய்ந்தறிந்துகொள்வதைப் போன்றே,
வாழுமிடத்தின் ஒலிச்சூழலையும் கூர்ந்துநோக்கவேண்டும் எனக் கருதிய
சங்கச்சான்றோர், தாம் படைத்த இலக்கியத்தில் நிகழ்ச்சிகளையும்
கருத்துகளையும் வழங்கியது போன்றே ஒலிச் சூழலமைவையும் விளக்கியுரைத்தனர்.
சங்கப்புலவர்களின் தெளிந்த சமகாலச் சமூக விழிப்புணர்வையும், விரிந்துபரந்த
இயற்கையியல் அறிவையும் புலப்படுத்தும் வகையில் ஒலிச்சூழலமைவு சங்கநூல்களில்
சிறப்புற நவிலப்பட்டுள்ளது.
மலைபடுகடாம்-ஒலிக்களஞ்சியம்:
மலையில் ஒலிக்கும் பல்வேறு ஒலிகளையும்,தொகுத்துக் கூறும் ஒலிக்களஞ்சியமாக மலைபடுகடாம் விளங்குகிறது.
அருவியாடும் தெய்வமகளிர் அதனைக்
குடைதலான் எழும் ஓசை, தினைப்புனத்தில் புகுந்த யானையைப் பிடிக்க
முற்படுகையில் யானை எழுப்பும் ஒலி, எய் எனும் பன்றியின் கூரிய முள் பட்டு
வலி பொறாது கானவர் அழும் அழுகையொலி, கணவர் மார்பில் புலி பாய்ந்ததால்
ஏற்பட்ட புண்ணை ஆற்றுதற்காகக் கொடிச்சியர் பாடும் பாட்டொலி, வேங்கைப்
பூவைச் சூடுதற்கு மகளிர் ‘புலி புலி’ என்று எழுப்பும் ஆரவாரம்,
களிற்றின்துணையொடு வந்துகொண்டிருந்தபோது, வலிமை மிக்க புலி பாய்ந்தமை கண்டு
பிடி தன் கிளையோடு சேர்ந்து இடி போன்று எழுப்பிய பேரொலி, தாய்க்குரங்கின்
பிடியிலிருந்து நழுவிக் குரங்குக்குட்டி மலைப்பிளவில் விழுந்தமை கண்டு
குரங்குகள் பூசலிடும் ஒலி, நெடிய மலையுச்சியில் அமைந்த தேன்கூட்டைக்
கைப்பற்றித் தேனை எடுத்த மகிழ்ச்சியால் கானவர் எழுப்பும் ஆரவாரம்,
நன்னனுக்குக் கையுறையாகக் கொடுப்பதற்குப் புதிதாகப் பொருள்கள் ஈட்டும்
நோக்குடன் அரிய குறும்புகளை வென்று அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் கானவர்
எழுப்பும் ஆரவாரம்,குறவர் தம் பெண்டிருடன் குரவையாடுதலால் ஏற்படும்
ஆரவாரம்,சிறுகற்கள் நிறைந்த வழியில் தேர் செல்லும்போது கேட்கும் ஒலி போன்று
ஆற்றுவெள்ளம் மலைப்பிளவுகளில் ஒலியெழுப்பியவாறு செல்லும் இரங்கொலி,
யானையைப் பயிற்றுவிக்கும் பாகர்கள் பல்வேறு ஒலிகளும் விரவியமொழியால்
பயிற்றுவிக்கும் ஓசை, மூங்கிலைக் குறுக்கே பிளந்து செய்த தட்டையைப்
புடைத்தவாறு கிளிகளை ஓட்டும் மகளிர் எழுப்பும் பூசல் ஒலி,வரையாட்டுக் கடா
நல்ல ஏற்றுடன் மோதிப் போரிடும் போரொலி, கோவலரும் குறவரும் சேர்ந்து
ஆர்க்கும் ஒலி, எருமையேறுகள் குளவியும் குறிஞ்சியும் வாடும்படி ஒன்றோடொன்று
போரிடும் ஓசை, பலாச்சுளைகளிலிருந்து கொட்டைகளைப் பிரித்தெடுப்பதற்காகக்
கன்றுகளைப் பிணைத்துக்கட்டிச் செலுத்தும் சிறுவர்கள் மணம் கமழும் காந்தள்
மடலால் அவற்றை அடித்து ஓட்டும்போது எழுப்பும் ஓசை, கரும்பாலைகளில் கரும்பை
ஒடித்துச் சாறு பிழிவதால் ஏற்படும் ஓசை, தினை குற்றும் மகளிர் பாடும்
வள்ளைப் பாட்டொலியும், நிலத்தைத் தோண்டிச் சேம்பையும் மஞ்சளையும்
பாழாக்கிவிடும் பன்றிகளை விரட்டுவதற்காக அடிக்கப்படும் பன்றிப்பறையோசை,1
இத்துணை ஒலிகளையும் வாங்கிக்கொண்டு எதிரொலி எழுப்பும் மலையின் எதிரொலி ஆகிய
ஒலிகள் அனைத்தும் ஒன்றோடொன்றிணைந்தும் தனித்தும் மலையின்
மேற்பகுதியிலிருந்தும் கீழ்ப்பகுதியிலிருந்தும் கேட்டுக்கொண்டிருந்தன2 என
மலைபடுகடாம் இயம்புகிறது.
இத்துணை ஒலிகளையும், அவை எழும்
சூழல்களோடு,அவற்றை எழுப்பிய நிலமாந்தர்,,உயிரினங்கள் ஆகியவற்றையும்
விளக்கித் தொகுத்துவழங்கிய பெருங்கௌசிகனாரின் திறம் தனித்தன்மை வாய்ந்த
ஒன்று என்பதில் ஐயமில்லை.
மதுரைக்காஞ்சி:
மதுரைக்காஞ்சியில் குறிஞ்சிநில
ஒலிச்சூழலமைவுடன் மருதநில ஒலிச்சூழலமைவும் நகருக்கேயுரிய ஒலிச்சூழலமைவும்
விளக்கப்பட்டிருப்பதனை மற்றொரு வளர்ச்சிநிலை எனலாம். தமது தொடர்நிலைச்
செய்யுளின் நிகழிடத்திற்கேற்ப மாங்குடி மருதனார் பல்வேறு
ஒலிச்சூழலமைவுகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். எனினும் மலைப்பகுதிக்குரிய
ஒலிச்சூழலமைவாகப் பெருங்கௌசிகனார் பாடிய விரிவான செய்திகளை வேறெந்த
நூலிலும் காண இயலாது என்பது மலைபடுகடாம் நூலின் தனிச்சிறப்பு ஆகும்.
இயற்கையெழில் நலன் சற்றும் சிதையாமல் மக்கள் வேட்டையாடியும் இயற்கைப்
பயன்களைத் துய்த்தும் உணவுப்பொருள் தொகுப்பாளர்களாக வாழ்ந்த சமூகநிலையை
மலைபடுகடாம் காட்டுகிறது. காடுகொன்று நாடாக்கி, நகர்மயமான சூழலும் உணவுப்
பொருள் ஆக்கமும், அங்காடி விற்பனையும் பெருகி இன்றைய காலம் போல்
ஏற்றுமதி-இறக்குமதி வாணிக முறை செழித்திருந்த காலச்சூழலை மதுரைக்காஞ்சி
காட்டுகிறது. எனவே ஒலிச்சூழலமைவும் அவ்வக்காலச் சமூகச் சூழலுக்கேற்பவே
அமைந்துள்ளமையை இவ்விரு நூல்களும் தெற்றெனச் சொல்லோவியப்படுத்தியுள்ளன
எனலாம்.
மதுரைக்காஞ்சியில் குறிஞ்சி
நிலத்திற்குரிய ஒலிச்சூழலமைவாகத் தினை விளைநிலத்தில் கிளியை ஓட்டும்
ஆரவாரமும் அவரைத் தளிரைத் தின்னவரும் காட்டுப்பசுவை விரட்டும் கானவர்
ஆரவாரமும் குறவன் குழியில் விழுந்த ஆண்பன்றியைக் கொன்றதனால் உண்டன
ஆரவாரமும் வேங்கை மரத்தில் பூப்பறிக்க வரும் மகளிர் ‘புலி புலி’ என்று
கூவியதனால் ஏற்பட்ட ஆரவாரமும் பன்றியைக் கொல்லுகின்ற புலியின் பூசலால்
ஏற்பட்ட பேரொலியும் அருவி முழக்கும் இத்தகைய ஒலிகளால் மலையில் ஏற்பட்ட
எதிரொலியும் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன.3
மருதநிலத்தில், மீன் பிடிப்பவர்கள்
மருதநிலத்து மீனைக் கொன்றுகுவித்தலால் ஏற்பட்ட ஓசையும், கரும்பைப் பிழியும்
எந்திரம் .இயங்கும் ஓசையும், முதுமையினால் சேற்றில் விழுந்த எருதினைக்
கள்ளையுண்ணுங் களமர் தூக்கிக் கரை சேர்க்கும்போது நிகழும் ஆரவாரமும், நெல்
முற்றிய கழனிகளில் நெல்லை அறுப்பார் முழக்கும் பறையோசையும்,
திருப்பரங்குன்றத்தில் திருவிழாக் கொண்டாடும் ஆரவாரமும், மகளிர் தம்
கணவரோடு நீராடும் ஆரவாரமும் பாணர் குடியிருப்பில் பாடலாலும் ஆடலாலும்
எழுந்த ஓசையும் கலந்த ஒலிச்சூழலமைவைக் காண்கிறோம்.4 இங்கே இன்னும் ஒருபடி
மேலே சென்று, இவ்வோசை”அனைத்தும் அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப”
என்கிறார், மாங்குடி மருதனார்.5
நாளங்காடியில் எழும் ஓசைகளாக பொருள்களை
வாங்கிச்செல்ல வந்த பல்வேறு மொழிகளையும் பேசும் மாந்தர் தம் கூட்டத்தின்
ஆரவாரத்தையும்,கடல் போல முழங்குகின்ற முரசங்களை முழங்கி மக்களுக்கு
அறிவிக்கும் பேராரவாரத்தையும் விளையாட்டாகக் குளத்தைக் கையால் குடைந்தால்
ஏற்படும் ஒலிகளைப் போல ஒலியெழுப்பும் இசைக்கருவிகளை முழக்கியும், இவற்றைக்
கேட்டுக் களித்து ஆடுவாருடைய ஆரவாரத்தையும் குறிப்பிடுகிறார்.6
மதுரை நகரில் நால்வேறு தெருவிலும்
உண்டாகும் ஆரவாரத்திற்கு உவமையாகச் சேரனின் நாள் ஓலக்கத்தில் அனைத்துக்
கலைகளையுமுணர்ந்தோர் கூடித் தருக்கஞ் செய்யுங்கால் ஏற்படும் ஆரவாரத்தைக்
குறிப்பிடுகிறார்.7
அல்லங்காடியில் மிகப் பேராரவாரம்
ஏற்பட்டதாகக் கூறும் மருதனார், பறவைகள் மாலைநேரம் வந்ததும்
இருப்பிடத்திற்குத் திரும்பும்போது தம் இனத்தைச் சேர்ந்த மற்ற பறவைகள்
ஒன்றுதிரள்வதற்காக ஒலி எழுப்புவது போல அந்த ஆரவாரம் இருந்தது எனக்
குறிப்பிடுகிறார்.8
காவிரிப்பூம்பட்டினத்தில் காற்றால்
செலுத்தப்படும் பாய்மரக்கப்பல்களிலிருந்து பல்வேறு பண்டங்களை இறக்குமதி
செய்யும்போது எழுப்பப்படும் மகிழ்ச்சி ஆரவாரம் போல மதுரை நகர
அல்லங்காடியில் பேராரவாரம் காணப்பட்டது என்று இன்னொரு உவமையின் மூலம்
விளக்குகிறார்.9 வள்ளல் நன்னன் அரியணையேறிய நாளைப் ‘பெரும்பெயர் நன்னாள்’
என ஒவ்வோர் ஆண்டும் அவன் மக்கள் சிறப்புறக்கொண்டாடுவர் என்றும் ஆண்டுதோறும்
அந்த நாளில் நன்னன் மக்களிடம் காணப்படும் ஆரவாரம், நாள்தோறும் மதுரை
நகரின் முதல் யாமத்தில் (மாலை 6 மணி முதல் இரவு 8மணி வரை) காணலாம் என்றும்
மருதனார் கூறுகிறார். 10
பெருமகிழ்ச்சியும் பேராரவாரமும்
தமிழகத்தின் எந்தப்பகுதியில் எந்தச் சூழலில் நிலவும் என்பதனை மாங்குடி
மருதனார் அறிந்து தம் பாடலில் பதிந்துவைத்துள்ளமை அவரது விரிந்து பரந்த
அறிவையும், சங்கப்புலவர்கள் தத்தம் நாட்டு எல்லைக்குள் முடங்கிவிடாமல்
தமிழ்கூறுநல்லுலகம் தழுவிய பார்வையைப் பெற்றிருந்தனர் என்பதையும்
தெளிவாக்குகின்றன.
அடிக்குறிப்புகள்:1.மலைபடுகடாம்: அடிகள்- 294-344
2.மலைபடுகடாம்: அடிகள்- 345-348
3.மதுரைக்காஞ்சி: அடிகள்-291-299
4.மதுரைக்காஞ்சி: அடிகள்-254-266
5.மதுரைக்காஞ்சி: அடி-267
6.மதுரைக்காஞ்சி: அடிகள்359-364
7.மதுரைக்காஞ்சி: அடிகள்-523-526
8.மதுரைக்காஞ்சி: அடிகள்-543-544
9. மதுரைக்காஞ்சி: அடிகள்-536-538
10.மதுரைக்காஞ்சி: அடிகள்-618-619
(தொடரும்)
– முனைவர் மறைமலை இலக்குவனார்
செம்மொழி மாநாட்டுக் கட்டுரை
Comments
Post a Comment