யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்


kannadasan02

யானோர் காலக் கணிதம்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!
பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்!
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்!
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறந் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
கல்லாய் மரமாய் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்ல!
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!
 kaalakanitham
– கவிஞர் கண்ணதாசன்
அகரமுதல 84, ஆனி 06,2046/ சூன் 21, 2015

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue