Skip to main content

அப்பாவைப் போல் யார் இருக்க முடியும்..? – நவீன் பிரகாசு


appaa_kavithai_padam

அப்பாவைப் போல் யார் இருக்க முடியும்..?

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா…
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை…
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது
உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என…
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
இலேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளாத் துயிலில்…
அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?
எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவைப் போல்
யார் இருக்க முடியும்..?
சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டா எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை…
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்…
– காதல் சொல்லி நவீன் பிரகாசு, 2008
naveen_prakasu01

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்