Skip to main content

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 9

(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் :  8 தொடர்ச்சி)

வள்ளுவர் கண்ட இல்லறம் – 9

தகையணங்குறுத்தல்
  தலைமகன் தலைவியைக் காணுங்கால் அவள் அழகால் உந்தப்பட்டு அதனால் உளம் வேறுபடுதல். அமைதியாக இருந்த ஆடவனின் உள்ளம் பெண்ணின் தோற்றத்தால் வருந்தத் தொடங்குதல். “தகை அணங்குறுத்தல்’  என்றால் “அழகு வருத்தத்தை அடைவித்தல்’  என்பதாகும். தலைவியைக் கண்ட தலைவன் கூறுகின்றான்:
                அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை      
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு             (1081)
       அணங்குகொல்=வருத்தும் அழகுத் தெய்வமோ?; ஆய்மயில் கொல்லோ= ஆராய்ந்தெடுக்கப்பட்ட அழகிய மயிலோ?; கனங்குழை மாதர்கொல்=கனத்த காதணியை அணிந்துள்ள பெண்தானோ?; என் நெஞ்சு= என் உள்ளம்; மாலும்=ஒன்றும் அறிய இயலாது மயங்கும்.
   ஒரு பெண்ணை ஓர் ஆடவன் விரும்புவதற்கு முதல் துணையாக அமைவது அவள் அழகே! அழகிய பெண்ணைக் கண்ட தலைமகன் அவன் அழகு நலத்தில் மயங்கிக் கூறுகின்றான்
   “கனங்குழை=கனவிய குழைய உடையாள்” எனக் கூறி ஆகுபெயர் என்பர் பரிமேழகர். “கனங்குழை மாதர் என்பது பொருத்தமுற அமைந்திருக்கும் போது “கனங்குழை என்று பிரித்துப் பொருள் கூறுவதன் சிறப்பு ஒன்றுமில்லை.
   ‘கொல்’  என்பது ஐயத்தையும் வினாவையும் உணர்த்தி நிற்கின்றது. பண்டைத் தழிழர் வியப்பு, வினா, ஐயம் முதலியவற்றை உணர்த்த இடைச் சொற்களையே பயன்படுத்தினர். !,?, இவ்வடையாளங்கள் பிற்காலத்தில் கொண்டனவே.
                நோக்கினாள்; நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
                 தானைக்கொண் டன்ன துடைத்து (1082)
  நோக்கினாள்=என்னைப் பார்த்தாள்; நோக்கு=என்  பார்வைக்கு, எதிர்நோக்குதல்=எதிராகப் பார்த்தல், தாக்கு அணங்கு=வருத்தும் தெய்வம், தானை=படையையும் கொண்டன்னது உடைத்து=உடன் கொண்டு வந்துள்ள தன்மையை உடையது.
  அவன் நோக்கினாள்; அவளும் நோக்கினாள். அவன் நோக்கும்போதே அவளும் எதிர் நோக்குதலைக் கண்டு அப் பார்வையால் கவரப்பட்ட அவன், இயல்பாகவே அழகால் வருத்தக்கூடிய அவள் கூர்ந்து நோக்கியமையான், வெல்வதற்குப் படையையும் கொண்டு வந்து விட்டாள் எனத் தான் அவளுக்கு அடிமையாகிவிட்டதை அறிவிக்கின்றான்.
     பண்டறியேன் கூற்றென் பதனை; இனிஅறிந்தேன்
    பெண்தகையால் பேரமர்க் கட்டு     (1083)
   கூற்று என்பதனை=உயிருண்ணும் ‘எமன்’  என்று சொல்லப்படுவதனை, பண்டு அறியேன்=முன்பு அறியாதவனாய் இருந்தேன். இனி அறிந்தேன்=இனிமேல் அறிந்தவனாகி விட்டேன். பெண் தகையால்=அது பெண் தன்மையுடன், பேரமர்க் கட்டு=பெரியனவாய் அமர்த்த கண்களை உடையது.
 கூற்று என்பது உயிரைக் கொண்டு செல்லும் ஒன்Ùகக் கதைகளில் கூறப்படும் கற்பனையின் பாற்பட்டது.
    தலைமகளைக் கண்டவுடன் வருந்தத் தொடங்கியதால் தன்னைக் கொல்ல வந்த கூற்று எனப் புனைந்து கூறுகின்றான் தலைமகன். தலைமகள் வடிவில் வந்துள்ள கூற்று பெண்ணழகுடன் பெரிய கண்களையும் கொண்டுள்ளது என்கின்றான்; கண்கள் அங்குமிங்கும் அசைந்து கொண்டேயிருப்பதனால் அமர்த்த  பொருகின்ற தன்மையுள்ள கண்கள் என்கின்றான்; இவ்வாறு அவள் அழகின்பால் கவர்ச்சியுற்று வருந்துவதனை வெளிப் படுத்துகின்றான்.
                கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
                பேதைக் கமர்த்தன கண்     (1084)
  பெண்தகை=பெண்ணிற்சிறந்த. பேதைக்கு=இளம் பெண்ணிற்கு, கண்=கண்கள், கண்டார் உயி ருண்ணும்=தம்மைப் பார்த்தவர் உயிரைக் கொண்டு செல்லும், தோற்றத்தால்=வடிவத்தோடு, அமர்த்தன=பொருந்தி இருந்தன. (அல்லது தம்முள் பொருதுகொண்டு இருந்தன.)
   காதலியின் கண் பார்வையே காதலனை வயப்படுத்த வல்லது. அவளை அடையும்வரை அவன் தன்னைச் செயலற்றவனாகவே கருதுவான்; ஆகவே. உயிர் உளதோ இலையோ என்று ஐயுற்று வருந்துவான். அவள் கண்கள் தன் உயிரைக் கொண்டு சென்றதாகவே கருதித் தலைவன் வருந்துகின்றான்.
                கூற்றமோ கண்ணோ பிணையோ  மடவரல்
                 நோக்கம்இம்  மூன்றும் உடைத்து            (1085)
 கூற்றமோ=(என் உயிரைக் கொண்டு செல்ல உள்ளன போல் காணப்படுவதால்) எமன்தானோ? கண்ணோ=என்னைக் காண்பதனால் கண்கள்தாமோ? பிணையோ=அங்கும் இங்கம் நாணி ஓடுவதனால் பெண்மானோ? மடவரல்=அழகிய இப் பெண்ணின், நோக்கம்=கண்பார்வை, இம் மூன்றும்=இம் மூன்றன் தன்மைகளையும், உடைத்து=பெற்றுள்ளது.
       தன்னை வருத்தும் தன்மையால் கூற்றம் என்றும், மான்போல் ஓரிடத்தில் நிலைத்து நில்லாது ஓடிக் கொண்டுள்ளமையின் பிணையென்றும் கண்களைச் சிறப்பித்துக் கூறுகின்ற நயம் பாராட்டத்தக்கது.
(தொடரும்)
குறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்