வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6.
வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது
காதல் வாழ்க்கை
ங. களவியல்
(வரிசை எண்கள் / எழுத்துகள்
‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)
பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின் (54)
பெண்ணின்=மனைவியைவிட,பெருந்தக்க=பெருமை மிக்கவை, யாவுள=எவை உண்டு, கற்பு என்னும்=கற்பு என்று சொல்லப்படும், திண்மை=கலங்கா நிலைமை, உண்டாகப் பெறின்=இருக்கப்பெறுமானால்.
நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக் கூடியவள் மனைவியேயாவாள். அவள் தான் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும். தன் கணவனைவிட அழகிலோ, செல்வத்திலோ, ஆண்மையிலோ, கல்வியிலோ, இன்னும் பிற சிறப்புகளிலோ சிறந்த வேறு ஓர் ஆடவனைக் காணுமிடத்து, அவன்பால் மனம் செல்லுதல் கூடாது. அவ்விதம் செல்லாமல் இருக்கும் நிலைமையே திண்மை நிலை, உளங்கலங்கா நிலை. தமிழ் நாட்டில் உளங்கலங்கும் நிலை என்பது நினைக்கக் கூடாத ஒன்று. ஆனால், மேனாடுகளில் ஒருவனை மணந்த பெண் பிறிதோர் ஆடவனை ஏதேனும் ஒரு காரணத்தால் விரும்பி முன்பு மணந்தவனிடம் விலக்குப் பெற்றுப் புதியவனை மணந்து கொள்ளுதல் மன்பதை வழக்குக்கும் அறநெறிக்கும் உட்பட்டதாகவே உளது. ஆனால், இவ்வாறு உளங்கலங்கி, மறுமணம் செய்து கொள்ளுதலால் இல்லற வாழ்வில் பல இடர்ப்பாடுகள் தோன்றும். இம் முறைக்கு இடம் கொடுப்பின், நினைந்தவுடன் மணந்து சினந்தவுடனேயோ, முந்தையவரினும் சிறப்பு மிக்கவரைக் கண்டவுடனேயோ பிரிவது என்றால் இல்லற வாழ்வு உடைகலம்போல் உறுதி பயவாது. ஆதலின், காதலித்து மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது. அதற்கு உளத்திண்மைதான் வேண்டும். அதுதான் கற்பு எனப்படுகின்றது.
இக் கற்பு ஆடவர்க்கு வேண்டியதின்றோ எனின் வேண்டியதுதான். ஆடவனும் தன் மனைவியைவிட அழகு முதலிய சிறப்புக்களில் மிக்காள் ஒருத்தியை விரும்பி உளங்கலங்குவானேயானால் அப்பொழுதும் இடர்ப்பாடு தோன்றும். அவள் சீறியெழுதல் கூடும். செற்றமும் கலாமும் மிகுந்து இல்லற இன்பம் சிதைந்து விடும். ஆகவேதான் திருவள்ளுவர் “கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்” எனப் பொதுப்படக் கூறியுள்ளார். இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்.
“ஆணின் அருந்தக்க யாவுள’ எனத் திருவள்ளுவர் கூறவில்லையே எனின், வாழ்வியலில் காலப்போக்கில் ஆணுக்கே தலைமை ஏற்பட்டு விட்டமையின், ஆணைத் தலைமையாக வைத்து அறநெறி கூறுவது எல்லா நாட்டிலும் இயல்பாகிவிட்டது.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (55)
தெய்வம்=கடவுள், தொழாஅள்=வணங்காதவளாகி, கொழுநன்=கணவனை, தொழுது எழுவாள்=வணங்கிப் படுக்கையைவிட்டு எழுகின்றவள், பெய்யென=பெய் என்று சொல்ல, பெய்யும் மழை=மழை பெய்யும்.
கணவனிடத்தில் ஆழ்ந்த பற்று கொண்டு அவன் நினைவாகவே இருக்கின்ற மனைவியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தவே அவள் மழையைக் கூட ஏவல் கொள்வாள் என்று கூறப்பட்டுள்ளது. அங்ஙனமாயின் ஆணின் உறுதிப்பாட்டை வலியுறுத்த வேண்டாவோ எனின், அஃதும் வேண்டற் பாலதே. ஆடவனுக்கு முதன்மை என்ற நிலை ஏற்பட்ட பின்னர் ஆடவனை முதன்மையாக வைத்துக் கூறுதல் இயல்பாகிவிட்டது. அது பெண்ணுக்கும் பொருந்தும். ‘நஞ்சுண்டவன் சாவான்’ என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்’ என்பது வெள்ளிடைமலை. ‘திருடியவன் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’ என்பது தானே போதரும். அவ்வாறே இவ் விடத்தும் கருதுதல் வேண்டும். “தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்.
“பெய்யெனப் பெய்யும் மழை” என்பதற்குப் “பெய்யெனப் பெய்யும் மழை போன்றவள்” என்றும் பொருள் கூறுவர்.
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)
தற்காத்து=பல்வகை இடர்ப்பாடுகளினின்றும் தன்னைக் காத்துக்கொண்டு, தற்கொண்டான் பேணி=தன்னைக் கொண்ட கணவனையும் நல்லுண்டி முதலியவற்றால் புரந்து, தகைசான்ற=பெருமை பொருந்திய சொல்=புகழுரைகளை, காத்து=தன்னைவிட்டு நீங்காமல் காப்பாற்றி, சோர்விலாள்=தன் கடமைகளில் அயர்வு இலாதவள், பெண்=மனைவியாவாள்.
இக் குறட்பாவால் இல்லறத்தில் மனைவியின் பொறுப்பு இதுவென நன்கு தெளிவாக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. தலைவியாவாள் தன்னையும் காத்துக் கொண்டு தலைவனையும் விரும்பிக் காத்தல் வேண்டும். உண்டியமைக்கும் பொறுப்பு தலைவியின்பாற்பட்டது. உண்டி ஒழுங்காக அமையாவிட்டால் தலைவனுடல் தளர்ச்சியடையும். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.” ஆகவே, தலைவன் நெடிது நன்னலத்துடன் உயிர் வாழ்தல் தலைவியின் புரப்பைப் பொறுத்துள்ளது. தலைவனுக்குத் தன்னை உரிமையாக்கி இருந்தாலும் தலைவனுக்குத் தான் அழிய வேண்டா. தானும் நன்கு வாழ வேண்டும். அவள் இல்லையானால் அவன் இல்லையன்றோ?
இல்லறம் நடத்தும் முறையாலும், கணவனை ஓம்பும் முறையாலும், பிறருடன் நடந்து கொள்ளும் முறையாலும் மனைவிக்குப் புகழ் சான்ற உரைகள் உண்டாகும். கண்ணும் கருத்துமாக இருந்து இப் புகழுரைகளுக்கு இலக்காக இல்லையானால் இல்லறப் பெருமை இல்லயாகிவிடும். ஆடவன் தீயவழியில் சென்றாலும் அதàல் வரும் பழி மனைவியையே சாரும். ஆதலின், மனைவியின் மாண்புறு பொறுப்பு மட்டற்றதாகி விடுகின்றது.
(தொடரும்)
குறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
Comments
Post a Comment