Skip to main content

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8

வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8

3.இல்லறத் துணைவர் இனிதே சேர்தல்

 உலகியல் வாழ்வை உவப்புறத் துய்க்க இல்லறமே இனிதெனக் கண்டோம்; இல்லறத்தை இனிதே நடத்த இனிய துணைவி இன்றியமையாதவள் என்று தேர்ந்தோம். இனிய துணைவியை எவ்வாறு அடைவது?
 இன்று பெற்றோரும் உற்றோரும் துணைவனுக்குத் துணைவியையும் துணைவிக்குத் துணைவனையும் ஓடி ஆடி நாடிச் சேர்க்கின்றனர். சேர்க்கும் போது எல்லாப் பொருத்தங்களையும் இனிதே காண முயல்கின்றனர். ஆனால், உள்ளப் பொருத்தம் உளதா என உசாவுவதை ஒதுக்கி விடுகின்றனர். இதனால் துயருறுவோர் ஆண்களினும் பெண்களே பெரும்பான்மையர் ஆகிவிடுகின்றனர். தம் மகளுக்கு வேண்டும் துணிகளையும் நகைகளையும் படுக்கைகளையும் ஏன் செருப்புகளையும்கூட மகளின் கருத்தறிந்து அவள் விருப்படியே தேர்ந்தெடுக்கின்றனர். சில ஆண்டுகள், சில திங்கள்கள், சில நாட்கள் பயன்படக்கூடிய பொருள்களைப் பெறுங்கால் மகளின் கருத்தையறியும் பெற்றோர், வாழ் நாள் முழுவதும் துணையாய் இருந்து வாழ்க்கைத் தேரைச் செலுத்துதற்குரிய கடப்பாட்டுடன் உடலும் உயிருமாய் ஒன்றி இயைந்து வாழவேண்டிய ஒருவரைத் தேட வேண்டியபோது மகளைப் புறக்கணிப்பது கொடுமையினும் கொடுமையன்றோ? ஆனால், பண்டு தமிழ்நாட்டில் தம் துணைவரைத் தேர்ந்தெடுப்பதில் மகளிர்க்கு முழுஉரிமை அளிக்கப்பட்டிருந்து. இதனைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் நன்கு வெளிப்படுத்துகின்றன.
  தொல்காப்பியத்தின் பொருட் படலம் இலக்கிய இலக்கணம் கூற எழுந்தது. இலக்கியம் என்பது வாழ்க்கை அடிப்படையில்தான் தோன்றும். அதனால் இலக்கியத்தை வாழ்க்கைக் கண்ணாடி என்று கூறுவர் இலக்கிய ஆராய்ச்சியாளர். பண்டைத் தமிழிலக்கியம் மக்கள் வாழ்க்கையையும் இயற்கைப் பொருள்களையும் கொழுகொம்பாகக் கொண்டே வளர்ந்துள்ளது. தொல்காப்பியமும் அதனையே சுட்டிச் செல்கின்றது. இலக்கியத்தில் வாழ்க்கையை எவ்வாறு சொல்லோவியப்படுத்த வேண்டும் என்பதனை வரையறுத்துக் கூறுகின்றது அது. திருமணத்திற்குரிய வயதினை அடைந்த தலைவனும் தலைவியும் தம்மில் தானே கண்டு விரும்பி, நட்புப் பூண்டு, காதல் கொண்டு, ஒருவர்க்கொருவர் இன்றியமையாதவர் எனும் உணர்வு கொண்டு இணைந்து வாழ்ந்து இல்லறத் தேரைச் செலுத்துவது என முடிவு செய்து, பெற்றோர்க்கறிவித்து வாழ்க்கைத் துணைவர் ஆயினர்; பெற்றோர் உடம்படாவிடின் பெற்றோரின்றியும் மண வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.
   இவ்வாறு மணவாழ்க்கையை மேற் கொள்வதன் முன்னர்த் தலைவனும் தலைவியும் கண்டு தெளிந்து ஒன்றுகூடும் நிலையையும், ஒன்றிவாழும் நிலையையும், அவ்வமயங்களில் இருவரிடையேயும் உண்டாகும் நிலை வேறுபாடுகளையும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் அஃதாவது புணர்ச்சி, பிரிவு, இருத்தல், ஊடல், இரங்கல் எனும் திணை வகைகளாக இலக்கியங்களில் எழில் மிகக் கூறியுள்ளனர். திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கண இலக்கிய மரபை ஒட்டி அக வாழ்வை அழகுறத் தீட்டியுள்ளார். வாழ்வைப் புலப்படுத்தும் இலட்சியமாகவும் இலக்கியம் வெளிப்படுத்தும் வாழ்வாகவும் கூறப்பட்டுள்ள இன்பத்துப்பால் தமிழர் காலதலறத்தின் நெறிமுறையேயன்றி, வடவர் முறையைப் பின்பற்றியதன்று. இது வடமொழி நூலான “காம சூத்திர’  மொழி பெயர்ப்போ தழுவிய ஒன்றோ அன்று. திருக்குறள் இன்பத்துப்பாலையும் வடமொழியின் காமசூத்திரத்தையும் ஒப்ப நோக்குவார்க்கு இவ்வுண்மை எளிதிற் புலனாகும்.
   திருக்குறள் இன்பத்துப்பால் ‘பால்'(Sex)பற்றிய நூலாயினும், ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கூடியுள்ள அவையில் கூறுவதற்குக் கூசும் ஒரு சொல் கூட அதில் இடம் பெறவில்லை.
   இன்பத்துப் பால் காதலரின் உறவு முறையை விளக்கப் போந்ததாயினும், காதலர்கள் இன்னின்ன வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று விதிமுறையில் கூறாது, அவர்களையே நம்முன் நிறுத்தி ஒழுகச் செய்து விடுகின்றது. அதனாலேயே, இப்பகுதி ஒப்புயர்வற்ற இலக்கியக் காட்சிகளாகவும் அமைந்து கற்போர் உள்ளத்தைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும் பான்மையதாய் உள்ளது.
       திருவள்ளுவர், முதலில் தலைவனும் தலைவியும் காண நேரும் காட்சியை நிறுத்துகின்றார்.
(தொடரும்)
குறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்