இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 11– சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 10 தொடர்ச்சி]
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 11
உணவு, ஆறலைத்தனவும் சூறைகொண்டனவும் என்றும்; மா, வலியழிந்த யானையும் புலியும் செந்நாயும் என்றும்; மரம், வற்றின இருப்பையும் ஞமையும் உழிஞையும் ஞெமையும் என்றும்; புள், கழுகும் பருந்தும் புறாவும் என்றும்; பறை, சூறைகோட்பறையும் நிரைகோட்பறையும் என்றும்; தொழில், ஆறலைத்தலும் சூறைகோடலும் என்றும்; யாழ், பாலை யாழ் என்றும்; ஊர், பறந்தலை என்றும்; பூ, மராவும் குராவும் பாதிரியும் என்றும்; நீர், அறு நீர்க் கூவலும் சுனையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பாலைநிலத்திற்குரிய மக்கள் எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர் எனவும், மீளி, விடலை, காளை எனவும் கூறப்படுவர்.
அவர்கட்குரிய தொழில் வழிப்பறி செய்தலும், கொள்ளையடித்தலும் என்று கூறுவது பொருத்தமுடைத்தன்று. சூழ்நிலை காரணமாகச் சிலர் அத் தொழிலில் ஈடுபட்டிருந்திருக்கக் கூடும். ஆனால், அவ்வாறு ஈடுபடுதலை நாட்டு மக்கள், குறிப்பிட்ட பகுதிக்குரிய தொழிலென ஏற்றுக்கொண்டனர் என்று கூறுதல் இயலாது.
“ உள்ளத்தால் உள்ளலும் தீதே, பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் ” ( குறள் – 282)
என்று அறநெறி வகுத்த வள்ளுவர் வாழ்ந்த நாட்டில் ஒரு பகுதி மக்கட்கு “ ஆறலைத்தலும் சூறை கோடலும் தொழில்கள்” என்று கூறுவது அடாது.
இனி இந் நால்வகை நிலத்து மக்களையும் இலக்கியங்களில் தலைமக்களாகக் கொண்டு பாடுங்கால், முல்லை நிலத்துக்குரியோர்க்கு அண்ணல், தோன்றல், குறும் பொறை நாடன் என்றும், குறிஞ்சிநிலத்துக்குரியோர்க்கு வெற்பன், சிலம்பன், பொருப்பன் என்றும், மருத நிலத்துக்குரியோர்க்கு மகிழ்நர், ஊரன் என்றும் நெய்தல் நிலத்துக்குரியோர்க்குக் கொண்கன், துறைவன், சேர்ப்பன், மெல்லம்புலம்பன் என்றும் பெயர்கள் வழங்கியுள்ளன.
இங்குக் கூறப்பட்ட நாட்டுப்பிரிவும் மக்கட்பிரிவும் அவைபற்றிய செய்திகளும் கி.மு. பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகத்திற்குரியன. வழி வழியாக இலக்கியத்தில் கொள்ளப்பட்டு வந்தனவேயன்றி இவைதாம் அக் கால நிலைமை என்று கருதி விடுதல் கூடாது. சங்கக் காலத்தில் மிகவும் வளர்ச்சியுற்ற மன்பதையே இருந்துள்ளது. தொழில்வகையாலும் சிறப்புவகையாலும் மக்களிடையே பல பிரிவுகள் ஏற்பட்டுவிட்டன. அரசர், வணிகர், உழவர், படைவீரர், அமைச்சர், காவலர், அறுவையர், மருத்துவர் என்பன தொழில்வகைப் பிரிவுகளாகும். அந்தணர், அறிவர், பார்ப்பார், ஆசிரியர், புலவர் முதலிய பிரிவினர் மக்களிடையே மதிப்பும் செல்வாக்கும் பெற்றவராவார். நிலம், குடி, முறை, கொள்கை முதலின பற்றியும் மக்கள் அழைக்கப்பட்டனர்.
சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
(தொல்.சொல். கிளவி-41)
எனும் நூற்பாவால் மக்கள் அவர்தம் சிறப்பால் பெயர் பெற்றனர் என்றும் அப் பெயரை அவர்தம் இயற்பெயருக்கு முன்னர்ச் சேர்த்து வழங்குதல் வேண்டும் என்ற முறைமை இருந்தது என்றும் அறியலாம்.
நிலப்பெயர், குடிப்பெயர், குழுவின் பெயரே
வினைப்பெயர், உடைப்பெயர், பண்புகொள்
பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடுஇயற் பெயரே
இன்றுஇவர் என்னும் எண்ணியற் பெயரோடு
அன்றி அனைத்தும் அவற்றுஇயல் பினவே 1
என்னும் நூற்பாவால் அக்கால மக்கள் பெற்றிருந்த பெயர் வகைகள் வெளிப்படுகின்றன.
நாளடைவில் தொழில்களுள் உயர்ந்தன, தாழ்ந்தன என்ற பிரிவுகள் உண்டாயின. தொழில்கள் அடிப்படையில் உண்டான பிரிவுகள் பிறவி அடிப்படையில் வலுப்பெறலாயின. பிறவி அடிப்படையில் வேற்றுமைகளை நிலைநாட்டிக்கொண்ட வடவர் கூட்டுறவு தமிழர்க்கு ஏற்பட்டது. அவர்கள் வகுத்துக்கொண்டிருந்த “ பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர ” என்ற நால்வகைப் பிரிவுகட்கு ஏற்பத் தம்முடைய தொழில்வகையில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனும் பிரிவுகளைமட்டும் மதிக்கத் தொடங்கினர். ஆயினும், பிறவி வகையால் வடவர்போல் உயர்வு தாழ்வு கருதாது ஒழுக்கம், புலமை முதலிய சிறப்பு வகையால் உயர்வு தாழ்வு கொண்டனர்.
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனும் அவன்கட் படுமே
(புறநானூறு-183)
மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார்; கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு (குறள்-409)
என்பன பிறப்பால் உயர்வு தாழ்வு ஏற்பட்ட பின்னரும் சிறப்புக்கு மதிப்புக் கொடுத்த நிலையை எடுத்துக்காட்டுகின்றன.
சாதிப்பிரிவுகளும் சமயப்பிரிவுகளும் தோன்றி நிலைத்துவிட்ட போதிலும் அவை காரணமாக மக்கள் போரிட்டுக் கொண்டாரிலர். எல்லோரும் ஒருவரோடு ஒருவர் உறவாடிக் கலந்து மகிழ்ந்து வாழ்ந்தனர். “ ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”, “ யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற கொள்கைகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த காலமே சங்கக்காலம்.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
அடிக்குறிப்பு :
- தொல்.சொல்.பெயர் 11
Comments
Post a Comment