Skip to main content

எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 4

எங்கே போகிறோம்? – 4

 கோசல நாட்டில் இராமனுக்கு முடிசூட்டப் போகிற செய்தியறிந்தபோதும் மக்கள் மகிழ்ந்தார்கள். இராமன் காட்டுக்குப் போகிறபோதும் அழுதார்கள். அது நாட்டு அரசோடு மக்கள் சேர்ந்து இயங்கிய, இயக்கத்தினுடைய விளைவு. இன்றைக்கு நம்முடைய நாட்டு அரசியலில், ஆட்சியில் அந்த இயக்கத்தோடு மக்கள் சேர்ந்து இயங்குகிறார்களா? இல்லையில்லை. நாடு கடன் வாங்கினால் நம்முடைய நாட்டு மக்கள் கவலைப்படுகிறார்களா? அழுகிறார்களா? நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்காக ஒருவேளை சாப்பாட்டைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்களா? சாப்பாட்டைத் தியாகம் செய்ய வேண்டா. ஒரு தேநீரைத் தியாகம் செய்வார்களா? அப்படிப்பட்ட புரட்சி எண்ணத்தை நாட்டு மக்களுக்குக் கொடுத்தாக வேண்டும். மக்களை அரசு காப்பாற்றக் கூடாது. அரசை மக்கள் காப்பாற்ற வேண்டும்.
மக்களாட்சி என்பது ஒருமுறை மட்டுமல்ல அஃது ஒரு வாழ்க்கை முறை. அஃது உணர்வு செறிந்தது. ஒழுங்கு செறிந்தது. ஒழுக்கம் செறிந்தது. இன்று எங்கு பார்த்தாலும் போட்டா போட்டிகள் தலைமைக்கும் பெருமைக்கும் போராட்டங்கள்! இலட்சியத்தைப் பறிகொடுத்து விட்டுக்கூட பெருமை தேடுவார்கள்போலத் தெரிகிறது. இலட்சியம் பெரிது. இலட்சியம் தூய்மையானது. இலட்சிய வாழ்க்கை உயர்ந்தது. பதவிகளும், பெருமையும் வரலாம் -போகலாம். இலட்சியத்தைத் தியாகம் செய்துவிட்டுத் தயவு செய்து பதவிகளைத் தேட வேண்டா! பெருமைகளைத் தேட வேண்டா!.
இளைய பாரதமே! எழுந்திரு புதிய பாரதமே! எழுந்து வா; உனக்குத் தேவையான கல்வி எது என்று வரையறு! தற்சார்பான கல்வியைப் பெறு! வேலையைத் தேடாதேவேலையை உருவாக்கு! கை வருந்தி உழைப்பவர் தெய்வம் என்று நம்பு. நோம்பு நோற்று உழைத்து வாழ்க! புதிய வரலாறு படைத்திடுக! வரலாற்றுப் போக்கோடு ஓடி விடலாம் என்று நினைக்காதே! நீ வரலாற்றை நிகழ்த்தி, நின்று போராடிப் புதிய வரலாற்றைப் படைத்து சாதனை செய்! உன்னுடைய காலம் இந்த நாட்டினுடைய வரவலாற்றில் பொன்னேடாக அமைய வேண்டும்.
எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? அன்பு கூர்ந்து சிந்தனை செய்யுங்கள். இன்று இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? எங்குப் பார்த்தாலும் வன் முறைகள் மொழிச் சண்டைகள்! சாதிச் சண்டைகள் மதச் சண்டைகள்! ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டு அவல மனத்தோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள், யாருக்கும் மனநிறைவில்லை. எங்கும் மனநிறைவின்மை! இதற்கென்ன மாற்று? இதற்கென்ன வழி? இதற்கு யார் வழி சொல்ல முடியும்? வேறுயாரும் சொல்ல முடியாது.
இளைய பாரதம் ஒன்றுதான் சொல்ல முடியும். அவர்கள் எழுத்தால், எழுந்து நடந்தால், அவர்களால் இந்த நாட்டுக்கு வெற்றி வாய்ப்புகளைக் குவிக்க முடியும். புதிய வரலாற்றைப் படைக்க முடியும். புதிய பாரதம் பொலிவோடு விளங்கும். அதை நினைத்து, எண்ணிப் பார்த்து, முடிவு செய்வதற்காக எங்கே போகின் றோம் என்று சிந்தனை செய்யுங்கள்! எங்கே போக வேண்டும். என்று முடிவு செய்யுங்கள்! போக வேண்டிய இடத்திற்கு, போகவேண்டிய வழி, முறை, தொலைவு ஆகியவற்றையும் முடிவு செய்யுங்கள். தைரியமாக, துணிவாக, நடைபோடுங்கள்! வெற்றி பெறலாம்.
எங்கே போகின்றோம் என்ற கேள்விக்கு மாற்றாக நாம் எங்கே போக வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கப் போகின்றோம். ஆம்! மனிதனை முதலில் உருவாக்க வேண்டும். படிப்பாளிகளை உருவாக்கி இருக்கிறோம். ஆனால் படைப்பாளிகளை உருவாக்குகின்ற கல்வி, படைப்பாளிகளை உருவாக்குகின்ற அறிவு, திசைநோக்கி நாம் இனிப் போகவேண்டும். உழைப்பு என்பது உயர்ந்தது. மதிப்பில் உயர்ந்தது. தவமனை யது. அந்த உழைப்பை அலட்சியம் செய்யக் கூடாது. ஒரு நாட்டு மக்கள் கடுமையாக உழைத்தால் அந்த நாடு வளரும் வாழும்!
எந்த ஒரு நாட்டிலும் எளிதாக மாற்றத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாற்றம் என்பது வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாதது. எங்கு வளர்ச்சி இருக்கிறதோ அங்கு மாற்றம் இருக்கும். மாற்றம் இருக்கின்ற இடத்தில் வளர்ச்சி இருக்கும். இவற்றைநோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும்.
இந்த நாடு பரம்பரை பரம்பரையாக வேளாண்மையில் சிறந்து விளங்கிய நாடு. “உழவுக்கும், தொழி லுக்கும் வந்தனை செய்வோம்” என்பான் பாரதி. ஆனால் இந்த நாட்டில் கோடிக்கணக்கான காணி(ஏக்கர்) நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. சாதாரணமாக  ஊர்ப் புறங்களில் பெண் சிரித்தால், பலருக்கு, ஆண்களுக்குக் கோபம் வரும், பெண் சிரித்துவிட்டாளே என்று கோபப் படுவார்கள். ஆனால் இந்த நாட்டில் நீண்ட நாட்களாக ஒரு பெண் சிரித்துக்கொண்டே இருக்கிறாள். அதிலும் பரிகாசமாக நம்மைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண் யார்? நிலமகளாகிய பூமி தேவி.
(தொடரும்)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்:
எங்கே போகிறோம்?

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue