Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார். 2 .

அகல் விளக்கு – 2

அத்தியாயம் 1
பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கைகோத்து உலாவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள். நானும் அவனும் ஒரே வயது உள்ளவர்கள்; ஒரே உயரம் உள்ளவர்கள். அந்த வயதில் எடுத்த நிழற் படத்தைப் பார்த்தால் நான் கொஞ்சம் தசைப்பற்று உள்ளவனாக இருந்தது தெரிகிறது. சந்திரன் அப்படி இல்லை, இளங்கன்று போல் இருந்தான். கொழு கொழு என்றும் இல்லாமல் எலும்பும் தோலுமாக இல்லாமல், அளவான வளர்ச்சியோடு இருந்தான். அப்படி இருப்பவர்கள் சுறுசுறுப்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். சந்திரனைப் பொறுத்தவரையில் அது உண்மையாகவே இருந்தது. அவன் மிகச் சுறுசுறுப்பாக இருந்தான்; என் தாய் என்னைப் பார்த்து அடிக்கடி கூறுவது உண்டு. “நீ சோம்பேறி, இந்தக் குடும்பமே அப்படித்தான். சந்திரனைப் பார். எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறான்! அவன் முகத்தில் இரண்டு நாள் விழித்து எழுந்தால் எந்தச் சோம்பேறிக்கும் சுறுசுறுப்பு வந்துவிடுமே. நீ நாள்தோறும் அவனோடு பழகுகிறாய்; உனக்கு ஒன்றும் வரவில்லையே!” என்பார். உடனே நான், “மெய்தான் அம்மா! பழகினால் வராது. நீ சொல்கிறபடி அவன் முகத்தில் இரண்டு நாள் விழித்து எழ வேண்டும். அதற்கு வழி இல்லை. ஒன்று, நானாவது அவன் வீட்டுக்குப் போய், அவன் பக்கத்தில் படுத்திருந்து அவன் தூங்கி எழுவதற்கு முன் எழுந்து அவன் முகத்தில் விழிக்க வேண்டும். அல்லது அவனை இங்கே நம் வீட்டுக்கு வரவழைத்து உறங்கச் செய்து, எனக்குமுன் எழாதபடி செய்ய வேண்டும்” என்று சொல்லிச் சிரிப்பேன்.
என் தாய் சொல்லியபடி உண்மையிலேயே சந்திரனுடைய முகத்தில் தனிக்களை இருந்தது. பால் வடியும் முகம் என்பார்களே, அதைச் சந்திரனிடம் கண்டேன். பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் எடுத்த நிழற் படங்களில் சந்திரன் மிக மிக அழகாகத் தோன்றுவான். என் முகமோ, என் பார்வைக்கே அழகாக இருக்காது. அப்போது சந்திரனுக்கு வயது பதின்மூன்று இருக்கும். அந்த வயதில் அவனுடைய முகம் ஒரு பெண்ணின் முகம்போல் அவ்வளவு அழகாக இருந்தது. அவனுடைய தங்கை கற்பகத்தின் முகத்திற்கும் அவனுடைய முகத்திற்கும் வேறுபாடு தெரியாதபடி அவ்வளவு அழகு அவனுக்கு இருந்தது. இரண்டு ஆண்டு கழித்து மீசை கரிக்கோடு இட்டு வளர்ந்த பிறகுதான், சந்திரனுடைய முகத்தில் மாறுதல் தோன்றியது.
அவன் நிறம் சிவப்பு, என் நிறமோ கறுப்பு. அந்த நிற வேறுபாட்டால் தான் அவன் அழகாகத் தோன்றினான் என்று அப்போதெல்லாம் எண்ணினேன். நாம் போற்றுகிற சிவப்புக்கும் தூற்றுகிற கறுப்புக்கும் அவ்வளவு வேறுபாடு இருப்பதாக ஐரோப்பியர் எண்ணுவதில்லை என்பதை வளர்ந்த பிறகு தெரிந்து கொண்டேன். நம் நாட்டுச் செம்மேனியர் கருமேனியர் ஆகிய இரு திறத்தாரையும் சேர்த்துக் கறுப்பர் என்று ஐரோப்பியர் குறிப்பிடுகிறார்கள். இது அந்த இளம் வயதில் எனக்குத் தெரியாது. ஆகையால், அவன் சிவப்பாகப் பிறந்தது அவனுடைய நல்வினை என்று எண்ணிப் பொறாமைப்பட்டேன். நான் என்ன தீமை செய்து கறுப்பாகப் பிறந்தேனோ என்று கவலையும் பட்டேன்.
அவனுடைய அழகுக்குக் காரணம் நிறம் மட்டும் அல்ல, அவனுடைய முகத்தில் இருந்த ஒரு பொலிவு பெரிய காரணம். அந்தப் பொலிவு அவனுடைய பெற்றோர்களின் நோயற்ற நல்வாழ்விலிருந்து அவன் பெற்ற செல்வம் எனலாம். பிற்காலத்தில் அவனுடைய பெற்றோர்களைப்பற்றியும் பாட்டனைப்பற்றியும் பிறர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவை எல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன. அவர்கள் ஊர்ப் பெரியதனக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்; காட்டிலும் மேட்டிலும் முரட்டு உழைப்பு உழைக்காமல் நிழலில் இருந்து அளவாக உண்டு அறிவாக வாழ்ந்தவர்கள்; உழுவித்து உண்பவராகையால், மென்மையான உடலுழைப்பு மட்டும் உடையவராய், உடலின் மென்மையும் ஒளியும் கெடாமல் காத்துக் கொண்டவர்கள். பாட்டனார் ஊர் மணியக்காரர். தகப்பனார் ஊர் மன்றத்துத் தலைவர்; நிலபுலத்தை மேற்பார்வை பார்த்தலே தொழிலாகக் கொண்டவர். தாயாரும் அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைச் சார்ந்த அழகான அம்மையார். அதனால் அந்தக் குடும்பத்தில் எல்லோருமே அழகாக விளங்க முடிந்தது.
என் குடும்பத்தை அப்படிப்பட்டதாகச் சொல்ல முடியாது. என் தாய்வழிப் பாட்டனார் உழுது பாடுபட்ட உழைப்பாளி, என் தந்தைவழிப் பாட்டனார் செல்வ நிலையில் வாழ்ந்தவர் என்றாலும், இளமையில் ஒழுங்காக வாழ்க்கை நடத்தாமல் குடியிலும் காமக் கொள்ளையிலும் ஈடுபட்டு, பொல்லாத நோய்க்கு ஆளானவர். ஆகையால் குடும்பத்தில் இருந்த அழகும் இழக்கப்படுவதற்குக் காரணம் ஆயிற்று. தவிர, குடும்பம் அவ்வப்போது உற்ற இடுக்கண்கள் பல. அதனால் உடலுக்கு ஏற்ற நல்லுணவு கொடுத்து மக்களை வளர்க்கும் வாய்ப்புப் போயிற்று. இளமையிலேயே அரைகுறை அழகுடன் பிறந்தவர்களைத் தக்க உணவின் மூலமாகவாவது திருத்தலாம். அதுவும் இல்லாமற் போகவே, இட்ட வித்திலும் குறைவளர்த்த நிலத்திலும் குறை என்ற நிலைமை ஆயிற்று.
இவ்வளவு உண்மைகளையும் உணரக்கூடிய அறிவு எனக்கு அந்த இளமைக்காலத்தில் இல்லை. பதின்மூன்று வயதுள்ள சிறுவனாக இருந்த எனக்கு இவ்வளவு பெரிய உண்மைகளை யாரேனும் சொல்லியிருந்தாலும் விளங்கி இருக்க முடியாது. அதனால், சந்திரனை என் தாய் பாராட்டிய போதும் ஏங்கினேன்; மற்றவர்கள் பாராட்டிய போதும் பொறாமைப்பட்டேன்.
சந்திரன் சுறுசுறுப்பாக இருந்ததாக என் தாய் அடிக்கடி பாராட்டிக் கூறினார். உண்மையான காரணம் சுறுசுறுப்பு அல்ல; என்னுடன் படித்த வேறு சில மாணவர் சுறுசுறுப்பாக இருந்தார்கள். அவர்களும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்தார்கள். அம்மாவிடம் அவர்களுக்குப் பழக்கம் உண்டு. அவர்களைப் பற்றி அம்மா பாராட்டிக் கூறியதே இல்லை. ஆகையால் சந்திரனுடைய அழகின் கவர்ச்சியே அம்மாவின் பாராட்டுக்குக் காரணம் என்று சொல்ல வேண்டும். அம்மாவுக்கு என்மேல் இருந்த அன்புக்குக் குறைவில்லை. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல்அழகு குறைவாக இருந்தாலும் சுறுசுறுப்புக் குறைவாக இருந்தாலும் என்னைத்தான் தம் உயிர் போல் கருதிக் காப்பாற்றினார்அன்புமழை பொழிந்தார். சந்திரனுடைய இளமையழகு எவ்வளவு கவர்ச்சியாக இருந்தது, என் தாயின் மனத்தையும் அந்த அழகு எப்படிக் கவர்ந்தது என்பதைப் பிறகு நன்றாக உணர்ந்தேன்.
என் தாய் மட்டும் அல்ல, சந்திரனோடு பழகிய எல்லோருமே அப்படி இருந்தார்கள் என்று சொல்லலாம். ஒருநாள் சந்திரனும் நானும் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய போது, வழியில் நெல்லிக்காய் விற்பதைக் கண்டோம். ஓர் ஏழை சாலையோரத்தில் ஒரு கோணிப்பையின் மேல் நெல்லிக்காய்களைக் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தாள். காலணாவுக்கு எட்டுக்காய்கள் என்று விற்றுக்கொண்டிருந்தாள். தோப்பு நெல்லிக்காய்கள் சத்து மிகுந்ததுஎன்று அதற்கு முந்திய வாரம் தான் வகுப்பில் ஆசிரியர் சொல்லியிருந்தார். அது நினைவுக்கு வந்தது. நெல்லிக்காய் வாங்கலாம் என்றேன். சரி என்று சந்திரனும் வந்தான். என் சட்டைப் பையிலிருந்து ஒரு காலணா எடுத்தேன். சந்திரனும் எடுத்து நீட்டினான். கூடைக்காரி என்னிடம் எட்டுக் காய்களை எடுத்துத் தந்தாள்; சந்திரனிடமும் அவ்வாறே கொடுத்தாள். பிறகு ‘கொசுறு’ என்றேன். என் கையில் ஒரு சின்னக் காயைக் கொடுத்தாள். சந்திரன் கேட்கவில்லை, அவனுடைய முகத்தைப் பார்த்தாள் கூடைக்காரி, உடனே தனியே ஒரு மூலையில் மூடி வைத்திருந்த காய்களிலிருந்து ஒரு நல்ல நெல்லிக்காயை – தேறிய காயைப் – பொறுக்கி எடுத்து “இந்தா! குழந்தை!” என்று சந்திரன் கையில் கொடுத்து, அவனுடைய முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள். “உன்னைப் போல் எவ்வளவு அழகாக இருக்கிறது பார் இந்த நெல்லி” என்று பாராட்டும் மொழிந்தாள். “எனக்கும் அப்படி ஒன்று கொடு” என்றேன். “ஐயோ! விலை கட்டாது அப்பா!” என்றாள்.
திரும்பி வந்தோம். என் வாய் காய்களைத் தின்பதில் ஈடுபட்டபோதிலும், சந்திரனுக்கு ஏற்பட்ட சிறப்பை நோக்கி மனம் வெட்கப்பட்டது. அவனைக் குழந்தை என்று அன்போடு அழைத்த கூடைக்காரி என்னை அப்பா பட்டியலில் சேர்த்து விட்டாள். கேட்டாலும் எனக்குக் கிடைக்கவில்லை. அவனுக்குக் கேளாமலே கிடைத்தது. அதுவும் அருமையான ஒன்று கிடைத்தது. இவற்றை எல்லாம் எண்ணி வெட்கப்பட்டேன்.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார்
அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்