தமிழ் வளர்கிறது! 16-18 

ஆங்கிலத்தைத் தமிழ்மொழியில் கலப்ப தாலே
அறிவுயரும் மொழிவளரும் நாட்டிற் கென்றும்
தீங்கிலேயே என மொழிவார்; தமிழில் எங்கும்
செஞ்சொற்கள் இலையென்றும் கூறி நிற்பார்.
தேங்கியுள்ள சாக்கடையின் தண்ணி ராலே
தேனாற்றில் பெருக்கெடுத்த தென்பார் போலே
பாங்கிலுள்ள வடமொழியும் சொற்கள் தந்து
பழந்தமிழை வளர்த்ததுவே சான்றா மென்பார் !  (16)

கற்கண்டைக் கடியாமல் விழுங்கிப் பல்லைக்
காப்பாற்ற வேண்டுமென்றும், அதனைப் போலே
கற்கண்டைக் கல்க்கண்டென் றெழுதி னாற்றான்
கடுந்தமிழைப் புரிந்துகொள்ள முடியு மென்றும்
சொற்களிலே எளிமையினைத் தோற்று விக்கத்
தோன்றிவந்தோம் நாமென்று சொல்லிக் கொண்டு
முற்கழகப் புலவர்தமை மூட ராக்கி
முன்னேறும் புதுப்புலவர் பல்லோர் வந்தார்:  (17)

தாய்போன்ற பெண்ணொருத்தி தன்னைச் சுட்டித்
தடித்தனமாய் அவள்வந்தாள் இவள்போ னாளென் றோயாமல்
எழுதுவதும், இலக்க ணத்தில் உள்ளபடி
தானெழுது கின்றோ மென்று
வாயாலே அடிப்பதுவும் சான்றோர் சொல்லை
மறுப்பதுவும் தொழிலான சிற்றி னத்தார்
தாயான தமிழ்நாட்டின் விடுத லைக்கே
தாமுழைக்க வந்ததுவாய்க் கூவு கின்றார் !   (18)

(தொடரும்)
பாவலர் நாரா. நாச்சியப்பன்:
தமிழ் வளர்கிறது