Skip to main content

எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. அணிந்துரையும் பதிப்புரையும்

எங்கே போகிறோம்? 
1.அணிந்துரையும் பதிப்புரையும்

அணிந்துரை – 
முனைவர். த. பெரியாண்டவன்

நிறைமொழி மாந்தராக விளங்கும் தவத்திரு குன்றக் குடி அடிகளார் சைவத்தையும், தமிழையும் இரண்டு கண்களாகக் கொண்டொழுகும் செந்தண்மையாளர், சமயமும், தமிழும் சமுதாயத்தை வளர்ப்பதுடன் தமிழும் வளர வேண்டும் என்னும் கொள்கையர். மொழி வளர்ச்சி என்பதையே பண்பாட்டின் வளர்ச்சி என்பதை பறைசாற்றி வரும் பண்பாளர்.
ஒழுக்கத்தில் குன்றின் மேல் இட்ட விளக்காக இலங்கி வரும் அடிகளார் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் தொண்ணுற்று நான்காம் ஆண்டு பல்வேறுநாட்களில் விடுதலைநாள் விழாச் சிந்தனைகள், கல்விச் சிந்தனைகள், உழைப்புச் சிந்தனைகள், வளர்ச்சி மாற்றம், பொருளாதாரச் சிந்தனைகள், வேளாண்மைச் சிந்தனைகள், கால்நடைப் பொருளாதாரச் சிந்தனைகள் உட்பட பனிரெண்டு வெவ்வேறு பொருண்மைகளில் எங்கே போகிறோம் என்னும் வினாவை எழுப்பிக் கொண்டு விடை கண்டு மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் சமுதாயத்தின் மீது அறிவுக் கதிர் ஒளி பாய்ச்சி எழுப்ப முயன்றிருக்கும் சொற்பொழிவுகள் எங்கே போகிறோம்? என்னும் மலர்த் தோப்பாக வெளிவருகிறது. ‘தன் மாணாக்கன் அணிந்துரை வழங்கலாம்” என்னும் மரபுப்படி தவத்திரு அடிகளார் அவர்களின் மாணாக்கன் நிலையிலுள்ள நான்” இதற்கு அணிந்துரை வழங்குவதை பெரும் பேறாக கருதுகிறேன்.
காலால் நடக்கும் மனிதன் பிற கால்நடைகளிலிருந்து சிந்தனையாலும், கருத்தாலும், அறிவாலும், நாகரிகத் தாலும், பண்பாட்டாலும், படைப்பாற்றலாலும் நடந்து வேறுபடுகிறான் என விளக்கும் பாங்கு போற்றி பாராட்டிற்குரியது. (பக்கம் 10).
விடுதலைநாள் விழாபற்றி விளக்கும்போது, விடுதலைநாள் விழா என்பது கொடியேற்றுதல் மட்டுமன்று நேற்று. என்ன நடந்தது. இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது. நாளை என்ன நடக்கும், நாளை என்ன நடக்குமாறு செய்யவேண்டும்? இந்தக் கணக்காய்வு செய்யாமல் போனால் விடுதலைநாள் விழாவிற்கு என்ன பொருள் என வினவுவதை விடுதலை நாளில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய விளக்க உரையாகும்.
தாம் நரகத்திற்குப் போனாலும் கோடான கோடி பேர் வைகுண்டத்திற்குப் போகவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட இராமானுசர் பிறந்த மண்ணில்  தன்நலம் வளர்ந்து வருகிறதே என அடிகளார் சோர்வு கொள்கிறார். இளைஞர்களின் உணர்வுகளை புறக்கணிக்காது வளர்க்க வேண்டுமெனவும் மக்களை அரசு காப்பாற்றக் கூடாது. அரசை மக்கள் காப்பாற்ற வேண்டும் எனவும் இவர் கூறும் அறிவுரைகள் பொன்னேட்டில் வைரங்களால் பதிக்கப்பட வண்டிய எழுத்துகள்.
கல்விச்சிந்தனைகள் என்னும் பொருளில் படிப்புவேறு, என அறிவு வேறு தெளிவுபடுத்தி தகவல்கள் நிறைய வைத்திருப்பவர்கள், நிறைய படித்தவர்கள், பட்டம் பெற்றிருப்பவர்கள் இவர்கள் எல்லாம் அறிஞர்கள் என்று பிழையாக கருதிக் கொண்டிருக்கிறோம். இவர்களில் அறிஞர்கள் இருக்கலாம், தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கல்வியே அறிவுடைமையல்ல; கற்றவர்கள் எல்லாம் அறிவுடையவர்களும் அல்லர்; கல்வியும், கேள்வியும் அறிவு பெறுவதற்குரிய வாயில்களே ஆகும் எனவும் கூறி கல்விக்கு இலக்கணம் கூறுகிறார்.
இயற்கை வழங்கும் கொடைகளில் ஒன்று தாய் மொழி. தாய்மொழியே சிந்தனை மொழி, உணரும் மொழி எனத் தாய்மொழி வழிக் கல்விக்கு வித்திடும் பாங்கு புகழத்தக்க வகையில் அமைந்துள்ளது. உழைப்புச் சிந்தனைகள் என்னும் பொருளில் சோம்பலுடனும், சோர்வுடனும், “நூறாண்டுகள் வாழ்வதைவிட பெரு முயற்சி, கடின உழைப்புடன் ஒருநாள் வாழ்ந்தால் கூடப்போதும்” என்னும் பொன்மொழி போற்றிப் பாது காக்கப்பட வேண்டிய ஒன்று.
உழைப்பு: அறிவு உழைப்பு, உடல் உழைப்பு என இரண்டாகப் பகுத்து அறிவு உழைப்பு எவ்வகையிலும் உடல் உழைப்பைத் தாழ்த்தக்கூடாது என வரலாற்றுச் சிறப்புகளுடன் நிறுவும் பாங்கு நிலை பேருடையது. வளர்ச்சி மாற்றம் என்னும் பொருளில், வளர்ச்சி, முன்னேற்றம் என்பது நிற்பதும் அல்ல, பக்கவாட்டில் அசைந்து கொடுப்பதும் அல்ல, எதிர்காலத்தை நோக்கி நடை போடுவதுதான். முன்னேற்றம், வளர்ச்சி, மாற்றம், என விளக்கும் பாங்கு சிறந்தது.
பொருளாதாரச் சிந்தனைகள் என்னும் பகுதியில் உண்மையான சம்பளம் என்றால் அது பணத்தின் அளவு அன்று, வாங்கும் சக்தியே ஆகும் எனக் கூறும் வரையரை, வறுமை என்பது வசதிகள் அற்ற வாழ்க்கை எனவும், ஏழ்மை என்பது உணவுக்குப் போராடும் நிலை எனவும் இவர் வகுக்கும் இலக்கணம் வானுயர நிற்பதாகும். வேளாண்மைச் சிந்தனைகள் என்னும் பொருளில் இப்போது விவசாயம் செய்யப்பெறும் நிலங்களைத் தவிர வரப்புகளே அதிகம் என நம்முடைய ஒருமைப்பாட்டின்மையை உணர்த்துகிறார்.
கால்நடைப் பொருளாதாரச் சிந்தனைகள் என்னும் பகுதியில் கால்நடைகள் இல்லையேல் வேளாண்மை இல்லை, உணவு இல்லை, ஏன் மனிதகுல வாழ்க்கையின் கால் தடைகள் என்றால் மிகையாகாது. அதனாலேயே செல்வத்திற்கு மாடு என்று பெயர் சூட்டியது வள்ளுவம், எனக் கூறும் பகுதி சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு வாரம் என்பது ஏழு நாள்களைக் கொண்டது. இறைவன் ஏழிசையாய் உள்ளான் எனச் சைவ சமயம் கூறுகின்றது. செயற்கரிய செய்து வரும் பெரியார் ஆகிய தவத்திரு அடிகளார் அவர்கள் தமிழ்ச் சமுதாயம், இந்தியச் சமுதாயம் கை கொள்ள வேண்டிய அரிய பொருள்களை அள்ளித் தந்துள்ள பாங்கு சால்புடையது.
அடிகளார் அவர்கள் வானொலி வழி நிகழ்த்திய உரை காற்றோடு காற்றாய் கறைந்து போகாமல் நிலையாக மக்கள் உள்ளங்களில் உறைந்து போகின்ற வகையில் வரி வடிவில் அச்சேற்றி பதிப்பித்துத் தந்துள்ள பதிப்பாசிரியர் சீனி திருநாவுக்கரசு அவர்களையும், சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ள கலைவாணி புத்தகாலயத்தையும் மிகவும் பாராட்டுகிறேன். தவத்திரு அடிகளார் அவர்கள் தமிழுலகம் விழிப்புற காலம் தம் கருத்துக்களை ஓயாது ஒலிக்கவும் தமிழன்னை போல் தரணியில் நிலைத்த புகழுடன் வாழவும் அன்னை ஆதிபராசக்தியை இறைஞ்சுகிறேன்.
த.பெரியாண்டவன்
சென்னை
5-2-94  

பதிப்புரை 
உலக மக்கள் அனைவரும் மகிழ்வான வாழ்க்கையையே விரும்புகின்றனர். அவ்வாறு விழைவதே “உலக இயல்பு. உலக மக்கள் அனைவரும் தம் வாழ்க்கையில் நல் ஒழுக்கங்களைக் கொண்டு ஒழுகினால், உலகம்” அனைத்துமே மகிழ்வாக வாழும் பேற்றினைப் பெறும்.
பால் நினைந்தூட்டும் தாயினும் பரிந்து, அறிவியல் உணர்வினை அருளும் தவத்திரு அடிகளார் அவர்கள் மதுரை வானொலி வழி வழங்கிய அருட்கொடையே ‘எங்கே போகிறோம்’ என்னும் இந்நூல்.
தவத்திரு அடிகளார் அவர்கள் இறையருளாலும் தவத்தின் சிறப்பாலும், பன்னூல் புலமையாலும் வழங்கிய அரிய கருத்துக் களஞ்சியம், இன்றைய மக்கட் சமுதாயத் திற்கு மிகவும் பயன்தரும் எனில் மிகையன்று.
உலக அரங்கில் தமிழகம் தலைசிறந்து விளங்கச் செய்வதே நாம் தவத்திரு. அடிகளார் அவர்களுக்குச் செய்யும் சிறந்த கைம்மாறாகும்.
உலகெலாம் ஒருமைப்பாடும் பண்பாடும் திறந்து விளங்கத் துணையாகச் செயலாற்றி மகிழும் உழுவலன்பு நண்பர் மரு.பரமகுரு அவர்கட்கு என் இதய நன்றி.
அணியெனஅணிந்துரை அளித்து மகிழும் முன்னைத் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர்த.பெரியாண்டவன் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றி.
தமிழ்கூறும் நல்லுலகம் இவ் அரிய நூலைப் பயன் கொண்டு மகிழ கலைவாணியின் திருவருளை வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்,
சீனி. திருநாவுக்கரசு
சென்னை-17

6-12–94
(தொடரும்)
  தவத்திரு குன்றக்குடி அடிகளார்:
எங்கே போகிறோம்?

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue