பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கமா? – ஆரூர் தமிழ்நாடன்
பிணம் மிதக்கும் கங்கையிடம் இரக்கமா?
உழவர்களின் கண்ணீரில்
கரைந்துகொண்டிருக்கிறது
தேசத்தின் மீதான
நம்பிக்கை.
இங்கே
அதிகாரத்தில் பாலை.
அதனிடம்
நீதிகேட்டுப் போராடுகிறது
எங்கள் வண்டல்.
கழனிகளுக்குப் பாலூட்டும்
கருணைக் காவிரி
பிணம் மிதக்கும் கங்கையிடம்
இரக்கத்தை எதிர்பார்க்கலாமா?
வடக்கத்தி கோதுமை
தெற்கத்தி அரிசியை
எள்ளி நகையாடுவது
உயிரியல் அவமானம்.
வேளாண் தோழனே!
பசிக்குச் சோறிடும் உன்னைப்
பசியோடு அலையவைக்கிறது
தேசம்.
கதிர் அறுக்கும்
உன் அரிவாளைப் பிடுங்கி
உன் கழுத்தை அறுக்கிறது தேசம்
நாட்டின் மானம் காக்கப்
பருத்தி கொடுக்கும் உன்னை
அம்மணமாக்கி
நிலைகுலையவைக்கிறது
தேசம்.
கவலையோடு எழும்
கடைசிக் கேள்வி இதுதான்;
நமக்கு மோசம் செய்யும்
பேரமைப்பைத்
தேசம் என்று
தெரியாமல் அழைக்கிறோமா?
ஏனெனில் இங்கு
அதிகாரக் கோட்டைகளில்
கள்ளிச் செடிகள்;
நச்சுப்பால் சுரக்கும்
அரக்க மார்போடு
அன்னைத் தேசம்.
தோழா
மோசம் செய்கிறது தேசம்;
இனி என்னசெய்வதாய்
உத்தேசம்?
போக்கிடம் இனி நம்
வாக்கிடம்தான் உள்ளது.
வேளாண் தோழனே!
உணர்ச்சி செத்த நாங்கள்
உனக்காகவும்
ஒருமுறை சாகிறோம்.
– ஆரூர் தமிழ்நாடன்
Comments
Post a Comment