Skip to main content

பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 – முனைவர் நா.இளங்கோ

(பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4  தொடர்ச்சி)

பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4

    மானிடத்தின் மகத்துவம் பேசும் கவிஞன், சமத்துவத்தின் தேவையை, உயர்வைப் பேசும் கவிஞன், உழைக்கும் மக்களின் உன்னதத்தைப் பேசும் கவிஞன் என்பதோடு நில்லாமல்,
புதியதோர் உலகம் செய்வோம்- கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்
என்று புதிய உலகம் அதுவும் பொதுவுடைமை உலகம் அமைக்க விரும்புகிறார் பாவேந்தர். மேலும் உலகப்பன் பாடலில் ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவர் என்று வருக்கப் போராட்டத்தின் தேவையை வெளிப்படையாகவே வலியுறுத்துகின்றார். சமத்துவ சமுதாயம் காண விழையும், வழிகாட்டும் பாடல்கள் பலவற்றைப் பாவேந்தர் பாடியிருந்தாலும் பாவேந்தர் தம்மை ஓர் பொதுவுடைமை இயக்கக் கவிஞராக வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினாரா? என்பது ஒரு சிக்கலான கேள்வி.
  பாரதியின் அறிமுகத்திற்கு முன்பே பாவேந்தர் கவிதைகள் எழுதும் பயிற்சி உடையவராயிருந்தார். ஆனால் அந்தக் கவிதைகள் எல்லாம் தேய்ந்த பாட்டையில் செல்லும் சராசரிக் கவிதைகளாகத்தான் இருந்தன. பாடலில் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாய்ச் சுப்பிரமணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்.  என்று பாவேந்தரே பாரதியால் தாம்பெற்ற புதுமுறை புதுநடைபற்றிக் குறிப்பிடுகின்றார்.
    பாரதியின் நட்புக்குப் பின்னர் பாரதிதாசன் ஆன கனக.சுப்புரத்தினம் தொடக்கக் காலங்களில் தேச விடுதலைக்குக் காளியை வேண்டுவது, பாரத தேசத்தை வாழ்த்திப் பாடுவது, காந்தி, இலசபதிராயைப் பகழ்ந்து பாடுவது எனப் பாரதியின் சிந்தனைத் தடத்தை ஒட்டியே தம் கவிதைகளை யாத்துக் கொண்டிருந்தார். பாரதி மறைவுக்குப் பின்னர்- 1930 க்குப் பிறகே பாவேந்தர் பாடல்கள் புதிய படிநிலைகளைப் பெற்றன. தமிழக அரசியலில் சிங்கார வேலரும் தந்தை பெரியாரும் ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வு நெருப்பு பாவேந்தரிடமும் பற்றிக்கொண்டது. இந்தக் காலக் கட்டங்களில் பாரதிதாசன் படைத்த படைப்புக்களில் பொதுவுடைமைச் சிந்தனைகளும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களும் பின்னிப் பிணைந்து காணப்பட்டன. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி இதற்குத் தக்கதோர் சான்று.
    மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் புதுவையின் மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய போராட்டமும், அதன் உச்சகட்டமாக 1936 சூலை 30 அன்று நடந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள்- பிரஞ்சு இராணுவம் இடையிலான வீரப்போரும், அன்றைய துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் பலியானதுமான புதுவையின் முதல் சுதந்திரப் போரை,
பார்க்கப் பரிதாபமே மில்லில் பாடுபட்டோர் சேதமே – உளம்
வேர்க்கும் அநியாயமே மக்கள் வீணில் மாண்ட கோரமே
என்று தொடங்கும் நீண்ட கவிதையாகப் பாவேந்தர் உள்ளம் உருக வடித்துத் தந்துள்ளார்கள்.
(தொடரும்)
 முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி – 8.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்