சுந்தரச் சிலேடைகள் 13 – உழவனும் ஆசானும்
சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 13
உழவனும் ஆசானும்
சீர்திருத்தித் தாள்வணங்குஞ் சிற்பியெனப் பாரதனிற்கார்போல் மகிழ்வுதருங் கன்னலவர் – பார்போற்றும்
மெல்லியராய் மேலாகி மேதினியை மேம்படுத்தும்
நல்லுழவர் ஆசானுக் கொப்பு .
பொருள்:
உழவன்
1) களைமண்டிய நிலத்தைச் சீர்படுத்துகிறான்.
2) பின்னாளில் விளைந்த பயிரின் தாள் செழிப்புற்ற நிலையினைக் கண்டு ஒவ்வொரு நாளும் வணங்குவான்.
3) ஒரு சிற்பிபோலப் பயிரைப் பல நிலைகளில் நின்று விளைவிக்கிறான்.
4) வான் தருமழை போல் உலகிற்கு உணவு தருகிறான்.
5) உலகிற்குச் சுவைதரு உணவுப் பொருட்களைத் தன் உழைப்பால் தந்து கரும்பாய் இனிக்கின்றான் .
6) ஆடம்பர உடையின்றி எளிமையுடன் வாழ்கிறான்.
7) உலகை பசிப்பிணியிலிருந்து மீட்கிறான்.
ஆசான்
1) மாணவர்களைச் சீர்படுத்தி வாழவைப்பவன்.
2) மாணவர்கள் தன் நல்ஆசானின் பாதத்தை வணங்குவார்கள்
3 ) கரடு முரடான மாணவர்களை நல்வழிப்படுத்துஞ் சிற்பி ஆசிரியர்.
4) தன் ஆற்றல் நிறைந்த கல்விதனை வஞ்சகமில்லா வான்போல் அளிப்பார் ஆசிரியர் .
5) பின்னாளில் இனிக்கும் கரும்பு ஆசிரியர்.
6) மேதினி எனும் உலகைச் சீர்படுத்த மாணவர்களை உருவாக்குபவர் .
7) எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் தன்னை மென்மையராய்க் காட்டிக் கொள்பவர் ஆசிரியர்
பாரே போற்றக் கூடிய தன்மை இவர்களிருவருக்கும் ஒன்றாக இருப்பதால்
உழவனும் ஆசானும் ஒன்றாவர்.
உழவனும் ஆசானும் ஒன்றாவர்.
கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி
Comments
Post a Comment