Skip to main content

உன்னிதழில் என் சொற்கள்! – ஆரூர் தமிழ்நாடன்

உன்னிதழில் என் சொற்கள்!


உன்காட்டு முட்களினால் பாதந் தோறும்
உண்டாகும் பரவசத்தை என்ன வென்பேன்!
உன்னம்பு  துளைக்கின்ற இதயத் திற்குள்
உயிர்க்கின்ற காதலினை என்ன  வென்பேன்!
உன்மூலம் வருகின்ற மரணம் என்றால்
உயிர்கசிய வரவேற்றுப் பாட்டி சைப்பேன்!
இன்னும்நீ வெறுமையினைக் கொடுப்பா யானால்
என்னுலகை நலமாக முடித்துக் கொள்வேன்!

வரையாத சித்திரமாய் வந்தாய்; எந்தன்
வாழ்வினது சுவரெல்லாம் ஒளிரு கின்றாய்!
கரையோரம் கதைபேசும் அலைகள் போலக்
கச்சிதமாய் உயிர்ப்பாகப் பேசு கின்றாய்!
அரைஉயிராய்க் கிடக்கின்ற போதும்; என்னை
அரைநொடிநீ நினைத்தாலும் பிழைத்துக் கொள்வேன்!
திரையெதற்கு? நமக்கிடையே சுவரெ தற்கு?
திருநாளே, கொண்டாட அழைக்கின் றேன்வா!

கனவுகளைத் தருகின்றேன்; உறக்கம் தாயேன்.
கவிதைகளைத் தருகின்றேன்; சொற்கள் தாயேன்.
நினைவுகளைத் தருகின்றேன்; மறதி தாயேன்!
நிலவுதனைத் தருகின்றேன்; வெளிச்சம் தாயேன்!
வனங்களினைத் தருகின்றேன்; கனிகள் தாயேன்!
வைகறையைத் தருகின்றேன்; கிரணம் தாயேன்!
எனக்கான இசைதருவேன்; மெளனம்  தாயேன்!
என்னுலகம் தருகின்றேன்; உன்னூர் தாயேன்!

நீயில்லா உலகத்தில் திசைகள் இல்லை;
நிலமில்லை; நடப்பதற்கு வழிகள் இல்லை!
நீயில்லா ஊரென்றால் காற்று மில்லை;
நிறமில்லை; காட்சிகளும் ஏது மில்லை!
நீயில்லாப் பொழுதுகளில் நொடிகள் இல்லை;
நிமிடங்கள் மணிகளென எதுவு மில்லை!
நீயின்றி எனக்கெதுவும் தேவை யில்லை;
நீயெனது நானாக இருப்ப தாலே!

உன்கிளையில் என்பூக்கள் இமைதி றக்கும்!
உன்னிதழில் என்சொற்கள் அழகாய்ப் பேசும்!
உன்விரலில் என்னெழுத்து கவிதை யாகும்!
உன்விழிமேல் என்னிமைகள் இமைத்துப் பார்க்கும்!
உன்திசையில் என்திசையும் அமர்ந்து கொள்ளும்;
உன்பெயரில் என்பெயரும் ஒளிந்து கொள்ளும்!
உன்தேகத் தமணிகளில் எனது இரத்தம்;
ஓடுமடி தேனாக இனித்த வாறு!

முத்தம்நான்; கன்னம்நீ; அறிவா யாநீ?
மோகம்நான்; தேகம்நீ; உணர்வா யாநீ?
போர்நான்; களம்நீ; மகிழ்வா யாநீ?
உகங்கள்நான்; காலம்நீ; இணைவா யாநீ?
இத்தனையும் சொல்லுகிறேன் தயங்க லாமா?
இதயத்தில் வெயில்பெய்து எரிக்க லாமா?
உத்தரவாய்ச் சொல்லுகிறேன்; என்னை நீதான்
உகஉகமாய் நலமாக ஆள வேண்டும்!

-ஆரூர் தமிழ்நாடன்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue