குடிப்பீரா உழவனின் கண்ணீர்? 


அதிகார மேடையில் சதிராடும் பேய்களே
அநியாயம் செய்யலாமா? – உங்கள்
அலட்சிய வேள்விக்கு வேளாண் தோழர்கள்
விறகாக எரியலாமா?

விதியற்றுக் கதியற்று உழவனும் துயரிலே
வெந்துபோய்க்  கதறலாமா? -எங்கள்
வேளாண் தோழர்கள் படும்பாட்டை இன்னமும்
வேடிக்கை பார்க்கலாமா?

நதிநீரைக் கேட்பதும் கடன்நீக்கச் சொல்வதும்
நாட்டோரின்   உரிமைதானே! -தீய
நரிகளே உழவனின் கண்ணீரைக் குடிக்கவா
நாற்காலி ஏறினீர்கள்?

சதிகாரக் கும்பலே கதியற்ற உங்களைச்
சடுதியில் விரட்டுவோமே! -சற்றும்
வெட்கமே இல்லாத வேதாந்தக் கூட்டமே
விரட்டியே துரத்துவோமே!

– ஆரூர் தமிழ்நாடன்