பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – முனைவர் நா.இளங்கோ

பாவேந்தரும் பொதுவுடைமையும்

3/4

1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம் காண விரும்பும் குமுகாயமாக அவர் சமத்துவக் குமுகாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை. பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள். ஆனால் திராவிட இயக்கத் தலைவர்கள் அப்படிப்பட்ட திட்டம் எதனையும் முன்மொழியவேயில்லை. சாதி வேறுபாடுகளுக்குக் காரணமாயிருந்த ஆரிய புராணிக(பௌராணிக)க் கருத்துகளே வருக்க வேறுபாடுகளுக்கும் காரணம் என்ற தொனியிலேயே பாவேந்தர் வருக்கமுரண்பற்றிச் சிக்கல்களை வெளிப்படுத்தினார்.
   1960 வரை பாவேந்தர், திராவிடத் திருநாடு அமையும் என்ற கனவிலேயே எல்லா இயக்க உள்முரண்களோடும் தம் பாட்டுப்பயணத்தைத் தொடர்ந்தார்.
  இடையில் புதுவையின் முதல் தேர்தல் 1955 ஆம் ஆண்டு நடந்தது. பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் அமைந்த மக்கள் முன்னணியின் சார்பில் பாரதிதாசன் காசுக்கடைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மக்கள் தலைவர் சுப்பையாவும் பாரதிதாசனும் இணைந்து நின்று தேர்தல் களத்தில் பணியாற்றினர். மக்கள் முன்னணி எதிர்க்கட்சியாகப் பணியாற்றிய அந்தச் சபையில் வ.சுப்பையா எதிர்க்கட்சித் தலைவர், பாவேந்தர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர். புதுவையில் ஓர் பல்கலைக் கழகம் ஏற்படுத்த வேண்டும், அதற்கு பாரதியார் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற மக்கள் முன்னணியின் தீர்மானத்தை முன்மொழிந்து பாவேந்தர் பேசினார். சபை இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.
தனித் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையும் இந்தி எதிர்ப்பும் பாவேந்தரின் பாடல்களில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த நேரத்திலும் பாவேந்தர் உலக நடப்புகளை ஊன்றிப் பார்த்து அவ்வப்போது தம் எதிர்வினைகளைப் பாடல்களில் பதிவுசெய்யத் தவறியதில்லை. இரசிய நாடு வான்வெளி ஆய்வுகளில் ஈடுபட்டு நிலவுக்கு ஏவுகணை ஏவத் திட்டமிடுவதை, இரசியத் தொழிலாளி ஒருவர் குறைசொல்வதாகக் கவிதை எழுதினார்.
  “ஒன்றை இயற்றுதற்குச் செலவிடும் பெருந்தொகை இருந்தால் உலவும் ஏழை மக்களுக்கு உதவுமே”  இது அத்தொழிலாளியின் குமுறல். வியட்நாம் மீது அமெரிக்கா ஏகாதிபத்தியத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் போது , வியத்துநாம் மக்களின் வீரம் அமெரிக்காவின் இடுப்பை ஒடித்துப் போடும் என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார் நம் பாவேந்தர். அமெரிக்காவைச் சாடும் அதே வரிகளில் இந்திய எல்லையில் கால் நீட்ட நினைக்கும் சீனாவுக்கும் ஒரு குட்டு வைக்கிறார்; குமுறுகிறார்.
கோணல் மன அமெரிக்காவே!
குடியரசின் பேராலே அடிமை கொள்ளல்
இமயத்தின் எல்லையிலே காலை நீட்டும்
சீனரைப்போல் இழிவெதற்கு? படைவிலக்கு.. .. ..

ஈன்றவரும் வெறுக்கும் வண்ணம், வியத்துநாம் வீரம்
இடுப்பொடித்துப் போடும் உனை எச்சரிக்கை.
இப்படி, உலகு தழுவிய பொது நோக்கு என்பதைப் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல். சரியான நிறைகுறைகளையும் கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் பதிவு செய்து மானிட சமுத்திரம் நான் என்பதை நிறுவுகிறார்.
(தொடரும்)
முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி – 8

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue