திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : வெ. அரங்கராசன்
3. காமத்துப் பால்
15. கற்பு இயல்129. புணர்ச்சி விதும்பல்
பிரிந்து கூடிய காதலர்,
கலந்து இன்புறத் துடித்தல்.
(01-08 தலைவி சொல்லியவை)
- உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும்,
கள்ளுக்(கு)இல், காமத்திற்(கு) உண்டு.
நினைத்த, பார்த்த உடனேயே,
மகிழ்விப்பது கள்இல்லை; காதலே.
- தினைத்துணையும் ஊடாமை வேண்டும், பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
பனைஅளவுக் கூடல் ஆசைவரின்,
தினைஅளவும் ஊடல் வேண்டாம்.
- பேணாது பெட்பவே செய்யினும், கொண்கனைக்
காணாது, அமையல கண்.
மதிக்காமல் நடந்தாலும் கணவரைக்
காணத்தான் கண்கள் துடிக்கும்.
- ஊடல்கண் சென்றேன்மன், தோழி! அதுமறந்து,
கூடல்கண் சென்ற(து)என் நெஞ்சு.
ஊடுவதற்கே சென்றேன்; உள்ளமோ,
கூடுவதற்குச் சென்றது, தோழி!
- எழுதும்கால் கோல்காணாக் கண்ணேபோல். கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
கண்மை தீட்டும்போது, கோல்காணேன்;
கணவரைக் காணும்போது, பழிகாணேன்..
- காணும்கால், காணேன் தவ(று)ஆய; காணாக்கால்,
காணேன் தவ(று)அல் லவை.
காணும்போது, தவற்றைக் காணேன்;
காணாப்போது, தவற்றையே காண்பேன்.
- உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்,
பொய்த்தல் அறிந்(து)என் புலத்து?
மூழ்கடிக்கும் வெள்ளத்துள் பாய்தல்போல்,
பொய்த்துப்போம் ஊடல்தான் ஏனோ?
- இளித்தக்க இன்னா செயினும், களித்தார்க்குக்
கள்அற்றே கள்வ….!நின் மார்பு.
இழிதுயர் செய்தாலும், கள்ளையே
விழைவார்போல், எனக்கு உன்மார்பு.
(09-10 தலைவன் சொல்லியவை)
1289. மலரினும் மெல்லிது, காமம்; சிலர்,அதன்
செவ்வி தலைப்படு வார்.
மலரைவிடக், காதல் மெல்லியது;
சிலர்தான், பதம்உணர்ந்து நுகர்வார்.
- கண்ணின் துனித்தே கலங்கினாள், புல்லுதல்,
என்னினும் தான்விதுப்(பு) உற்று.
கண்களால் ஊடித் தழுவுதற்கு,
என்னைவிடப் பெரிதும் துடித்தாள்.
Comments
Post a Comment