அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! – செயபாசுகரன்
அகரமுதல 137, வைகாசி 23, 2047 /சூன் 05,2016
பாடல் வரிகள் : நன்றி கருஞ்சட்டைத் தமிழர் மலர் 6 இதழ் 10 சூன் 1-15
தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர்
நா.அருணாசலம், வாழ்வின் விளிம்புக்குப் போனதையறிந்த தமிழ்ச்சுற்றங்கள்,
கவலையோடு அவர் இல்லத்தில் குழும… தேனிசை செல்லப்பா, புட்பவனம் குப்புசாமி
போன்ற பாவாணர்கள், ஆனாரூனாவுக்குப் பிடித்த இன எழுச்சிப் பாடல்களை, அவர்
காதுபடப் பாடினர்.
புட்பவனம், ஆனாரூனா அவர்களைப்பற்றி
செயபாசுகரன் எழுதிய “தமிழ்மொழியின் வேரில் பாயும்’’ எனத்தொடங்கும்
பாடலைத், தேம்பலுடன் பாடியபோது, அதைக் கேட்டபடியே ஆனாரூனா அவர்களின்
இதயத் துடிப்பு கரைந்துவிட்டது.
அப்பாடல் வருமாறு:
அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்!
தமிழ் மொழியின் வேரில் பாயும்
தஞ்சை ஊற்று நீ – என்
தமிழினத்தின் மீது தவழும்
தென்றல் காற்று நீ!
இருள் படர்ந்த காலத்திலே தமிழர்கள் மேலே – நீ
எழுகதிராய் கண் சிவந்தாய் பூமியின் மேலே
தமிழர் கூட்டம் தத்தளிக்கும் அலைகடல் மேலே – நீ
தவழ்ந்து சென்று துயர்சுமந்தாய் தோணியைப் போலே – நீ
தவழ்ந்து சென்று துயர்சுமந்தாய் தோணியைப் போலே!
– தமிழ் மொழியின்
தந்தை பெரியாருக்குத் தொண்டன் ஆனவன் – என்றும்
தலை நிமிர்ந்து அவரை ஏற்றுப் பயணம் செய்தவன்
தமிழிசையால் மன்றம் கண்டாய் பெரியாருக்கு –
தமிழ் நிலத்தில் அந்தப் புகழ் வேறு யாருக்கு? – இந்த
தமிழ் நிலத்தில் அந்தப் புகழ் வேறு யாருக்கு?
– தமிழ் மொழியின்
இல்லையென்று சொன்னதில்லை உனது வாய்மொழி – ஐயா
எத்தனையோ குடும்பங்களில் உனது விளக்கொளி!
கோடி கோடியாய்க் கொடுத்த கண்ணபுரத் தாய் – தமிழை
கோபுரத்தில் ஏற்றி வைக்கக் கொட்டிக் கொடுத்தாய் – தமிழை
கோபுரத்தில் ஏற்றி வைக்கக் கொட்டிக் கொடுத்தாய்!
– தமிழ் மொழியின்
தானுயர்ந்து தமிழுயரக் கொடுத்த பெருமகன் – திரு
நாராயண – ஞானாம்பாள் பெற்ற திருமகன்
ஆனா ரூனா என்பதொரு வாழ்வியல் வேதம் – எங்கள்
அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும் – எங்கள்
அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்!
– தமிழ் மொழியின்
– கவிஞர் செயபாசுகரன்
அப்பாடல் காணொளி இணைப்பு
Comments
Post a Comment