பண்பாளருக்குப் பரிசு -செல்வி
பல்கேரிய நாட்டுச் சிறுகதை
பண்பாளருக்குப் பரிசு
கதிரவன் மறைந்து நிலவு வந்தது. தன்
வருகையை மகிழ்வுடன் வரவேற்காமல் கதிரவன் மறைவிற்குப் பூமி வருத்தமாக
கருப்பு ஆடையை அணிந்து கொண்டு இருக்கிறதே என நிலா சினங்கொண்டு முகில்
கூட்டத்தில் மறைந்தது.
இருள் சூழ்ந்த இந்த நேரத்தில் ஏழ்மைத்
தோற்றத்தில் இருந்த முதியவர் ஒருவர் அந்த ஊருக்குள் நுழைந்தார். ஊரின்
தொடக்கத்தில் தெரிந்த பெரிய மாளிகை ஒன்றினுள் நுழைந்தார். அவ் வீட்டில்
இருந்த பெண்மணியிடம் ”அம்மா இன்று இரவு மட்டும் தங்கிக் கொள்கின்றேன்”
என்று கேட்டு இசைவு கேட்டார். ”நாங்கள் என்ன சத்திரமா கட்டி
வைத்திருக்கிறோம்” என்று கூறி விரட்டி விட்டார் செல்வப்பெண்மணி. உடனே அந்த
முதியவர் அந்த மாளிகையின் அருகே உள்ள ஒரு குடிசை வீட்டிற்குச் சென்று அங்கே
ஒரு நாள் இரவுமட்டும் தங்கிக் கொள்ள இசைவு கேட்டார். ”ஐயா, நாங்கள் ஐவர்
இங்கே உள்ளோம். இந்தச் சிறிய குடிசையில் தங்கிக் கொள்ள உங்களுக்கு
விருப்பம் என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சியே” என்றார் அந்தப் பெண்மணி.
”அம்மா! உங்கள் உள்ளம் பெரிது! எனவே, இங்கே தங்கிக் கொள்வதில் எனக்கு
மகிழ்ச்சியே!” என்றார் முதியவர்.
சிறிது நேரம் கழித்து அனைவருக்கும்
உணவாகக் கஞ்சி கொடுப்பதற்காக முதியவரையும் அப்பெண்மணி அழைத்தார். தான் உணவு
உண்டு விட்டு வந்து விட்டதால் தேவையில்லை எனக் கூறி ஓர் ஓரமாகப்
படுத்துக் கொண்டார் அம் முதியவர். அக் குடும்பத்தில் உள்ள அனைவருமே கிழிந்த
அல்லது நைந்த ஆடைகளைத்தான் அணிந்திருந்தனர். இருப்பினும் நல்ல மனம்
உள்ளவர்களாக உள்ளதைக் கவனித்தார். அவர்கள் பேச்சிலிருந்து, வெளியூர்
சென்றுள்ள அவர்கள் தந்தைக்கு ஒருவர் கூலியாக விலை உயர்ந்த துணியை
அளித்துள்ளதாகவும் அதில் யார் யாருக்குச் சட்டை தைக்க முடியும் என்று
திட்டமிடுதாகவும் புரிந்து கொண்டார்.
மறுநாள் காலை. கதிரவன் வருகையால் மனம்
மகிழ்ந்த பூமி கருப்பு ஆடையைக் கழற்றி விட்டு நீல ஆடையை அணிந்து
கொண்டிருந்தாள். முதியவரும் அவர்களிடம் விடை பெற்றார். அவ்வாறு செல்லும்
பொழுது ”அம்மா உங்கள் அனைவரின் நல்ல மனம் எந்தக் குறையையும் உங்களுக்கு
வைக்காது. நீங்கள் இன்று செய்யும் முதல் பணியே முழு நாள் பணியாகும்” எனக்
கூறி விட்டுச் சென்றார். அவர் என்ன சொல்கிறார் என்று யாருக்கும்
புரியாவிட்டாலும் ஏதோ வாழ்த்துகிறார் என எண்ணி மகிழ்ந்தனர்.
வேலைக்குச் செல்வதற்கு முன் துணியைத்
தைக்கக் கொடுக்க வேண்டும் என எண்ணிய அப் பெண்மணி மாளிகை வீட்டிற்குச்
சென்று அடிக்குச்சி (அளவுகோல்) தாருங்கள் எனக் கேட்டு வாங்கி வந்தார்.
பொதுவாக யாருக்கும் எதுவும் தராத செல்வப் பெண்மணி அளப்பதற்கு என்ன
வைத்திருக்கிறார்கள் என அறியும் ஆவலில் கொடுத்து உதவினார்.
குடிசைக்கு வந்தவுடன் தங்களிடம்
வைத்திருந்த துணியை அளந்து பார்த்தார். அளக்க அளக்க அந்தத் துணி வந்து
கொண்டே இருந்தது. அவர்கள் அனைவருக்கும் போதுமா போதாதா எனக் கவலைப்பட்டுக்
கொண்டிருந்த அவர்களுக்கு ஊருக்கே போதுமான அளவு துணி இருப்பதாக உணர்ந்தனர்.
அப்பொழுதுதான் காலையில் முதியவர் வாழ்த்தியதன் பொருள் புரிந்தது. ஒரு
வழியாக மாலைவரை அளந்த பின்புதான் துணி வருவது நின்றது.
துணியை விற்றுச் செல்வர்கள்ஆகலாம் என
மிகவும் மகிழ்ச்சியுடன் அடிக்குச்சியை மாளிகை வீட்டில் கொண்டுபோய்க்
கொடுத்தார் அந்தப் பெண்மணி. அடிமையாய் இருப்பவர் விடுதலை பெற்றதும்
மகிழ்வது போல் மலர்ந்த முகத்தைப் பார்த்த மாளிகைப் பெண்மணி வேலைக்குச்
செல்லாமல் என்ன அளந்து கொண்டிருந்தார் எனக் கேட்டார். அப்பொழுது முதியவர்
தங்குவதற்கு இடம் கொடுத்ததையும் அவர் வாழ்த்திச் சென்றதால் இன்று காலையில்
துணியை அளந்து பார்த்த வேலை முடியாமல் மாலை வரை நீண்டு இடம் கொள்ளாத அளவு
துணி வந்ததையும் இதை விற்பனை செய்து வசதியாக வாழ முடியும் என்ற
மகிழ்ச்சியில் உள்ளதையும் குறிப்பிட்டார்.
அடடா! பிச்சைக்காரர் என எண்ணி
விரட்டினால் அம் முதியவர் பெரிய மந்திரவாதியாக இருக்கிறாரே என எண்ணிய
மாளிகைப் பெண்மணி உடனே தன் வேலையாளைக் கூப்பிட்டு, உடனே ஊருக்குள் சென்று,
நேற்று இரவு வந்த முதியவரை என்ன சொல்லியாவது வீட்டிற்கு அழைத்து வர
வேண்டும் என்று கட்டளையிட்டார். வேலையாள் அலைந்து திரிந்து முதியவரைக்
கண்டு வீட்டிற்குக் கட்டாயம் விருந்தினராக வரவேண்டும் என்று மன்றாடி
அழைத்தார். தனக்கு இந்த ஊரில் இனித் தங்க வேண்டிய தேவையில்லை எனக் கூறி
முதியவர் மறுத்தார். தான் தனியாகத் திரும்பினால் மாளிகைப் பெண்மணி தன்னைக்
கடுமையாகத் தண்டிப்பார் எனக் கூறித் தன்னைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.
சரி என முதியவரும் உடன்பட்டு மாளிகைக்கு வந்தார்.
தான் நேற்று உடல்நலக்குறைவாக
இருந்தமையால் அவரைக் கவனிக்காமல் அனுப்பி விட்டதாகவும் எவ்வளவு நாட்கள்
வேண்டுமானாலும் தன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும் கூறி முதியவரை
வரவேற்றார் மாளிகைப் பெண்மணி. அமைதியாகக் கேட்டுக் கொண்ட முதியவர்
உறங்குவதற்கு இடம் அளித்தால் போதும் எனக் கூறித் தனக்கு ஒதுக்கிய அறையில்
படுத்து உறங்கினார்.
மறுநாள் காலை எழுந்து தான்
விடைபெறுவதாகக் கூறினார். ஒன்றும் சொல்லாமல் போகிறாரே என எண்ணிய மாளிகைப்
பெண்மணி ”ஐயா ஒன்றும் சொல்லாமல் போகிறீர்களே!’ என்றார். ’முதலில் செய்யும்
வேலையே முழுநாள் வேலையாகட்டும் ’ எனக் கறி அவர் சென்றார். மாளிகைப்
பெண்மணிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. தான் சேமித்து வைத்துள்ள தங்கக்
கட்டிகளை எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் இவை நாள் முழுவதும் பெருகி
நாட்டிலேயே மிகுதியான செல்வம் உடையவளாக மாற வேண்டும் என்றும் ஆசைப்பட்டுக்
கொண்டே தங்கக் கட்டி வைத்திருந்த அறைக்குச் சென்றார். அங்கு அவருக்குத்
தும்மல் வந்தது; தும்மல் வந்தது; தும்மல் வந்தது; தும்மல்களாக வந்து கொண்டே
இருந்தன. சிநிது நேரம்கழித்துத்தான் மாளிகைப் பெண்மணிக்குக் காரணம்
புரிந்தது. அன்பு உள்ளத்தால் குடிசைப் பெண்மணி உயர்ந்து நிற்பதையும் தன்
அற்பச் செயலாலும் பேராசையாலும் தனக்குத் தண்டனை கிடைத்துள்ளதாகவும்
உணர்ந்தார். அந்நாள் முதல் யாராக இருந்தாலும் அன்பாக நடந்து கொண்டு நற்
பெயர் எடுத்தார்.
-செல்வி
வளர்நிலா(சிங்கப்பூர்):
ஆனி 2041 / சூன் 2010: பக்கங்கள் 36-38
Comments
Post a Comment