க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 5/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை
அகரமுதல 137, வைகாசி 23, 2047 /சூன் 05,2016
க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 5/5
பெண்ணுக்கு ஒரு சிறு குறையிருந்தாலும்
அதைப் பெரிதாக்கி அவளை மூலையில் முடங்க வைத்துவிடுவதும், ஆணுக்கு
உடலளவிலும், மனத்தளவிலும் எவ்வளவு பெரிய குறை இருந்தாலும் அதை மூடி மறைத்து
அவனுக்கு அழகிய இளமங்கையைத் திருமணம் செய்து கொடுத்து அவளது வாழ்வைப்
பாழாக்குவதும். அதற்கு, “ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்”
என்று விளக்கம் கூறுவதும் நம்மிடையே வேரூன்றியிருக்கும் கொடுமையான மூட
மரபல்லவா? இதைத் தீர்க்கவேண்டுமென்று பாவலர் அறைகூவல் விடுகிறார். நாம்தான்
திருந்த வேண்டும். மேற்கூறிய சுவைகள் ஒருசில என்றே நீங்கள் கொள்ளலாம்.
ஏனெனில், இந்நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் வாழை இலையாக்கிப் பந்தி பரிமாறியிருக்கின்றார் ஐயா அவர்கள்.
கட்டிப்பொன் உருக்காமல் நகைகள் உண்டா?
கடையாத மரத்துண்டில் சிற்பம் உண்டா?
மொள்ளுதற்கு நீரில்லாக் கிணறா யானேன்!
போன்ற அழகான வரிகளும், நாப்பேழை, இளநாற்றுச் சிலிர்ப்பாக போன்ற அழகான சொல்லாட்சிகளும் பக்கத்துக்குப் பக்கம் உள்ளன. படித்து இன்புறுங்கள்.
எத்தனையோ கதைக்கருக்கள் இருக்க. ஐயா அவர்கள் ஒரு தமிழச்சியின் மானத்தை நடுமைப்படுத்தி, அத்துடன் பல்வேறு சிக்கல்களை இணைத்து ஒரு மிகச்சிறந்த பாவியத்தைப் படைத்துள்ளதை நினைக்கும்பொழுது பாவேந்தர் பாரதிதாசனின் பாடிய கீழ்வரும் வரிகள் என் நெஞ்சில் வந்து குதிக்கின்றன:
ஏடெடுத்தேன் கவியொன்று வரைந்திட
என்னை எழுதென்று சொன்னது வான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
ஆடும் மயில்நிகர்; பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க என்றார்!
என்று சொல்லிக்கொண்டு வருபவர், இறுதியில் ,
இன்னலிலே தமிழ்நாட்டினிலே உள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்
அன்னதோர் காட்சி இரக்க முண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும் வீரம்வரும்!
என்று தன்னுடைய தமிழ்மக்கள்
இன்னலுற்றிருக்கின்ற காட்சிதான் என்னைப் பாடத் தூண்டியது என்று சொல்வாரே,
அந்தப் பாடல் வரிகள், ஐயா தமிழமல்லன் அவர்களையும் எனக்கு மற்றொரு பாவேந்தராகப் பார்க்க வைக்கிறது.
பொதுவாகவே தாய்க்குலத்தை
நடுமைப்படுத்திப் படைக்கப்பட்ட படைப்புகள் எதுவும் சோடை போவதில்லை. இது
திரைப்படம் முதல் சிறுகதை வரை அனைத்துவகைப் படைப்புகளுக்கும் பொருந்தும்.
‘அண்ணல்’ பாவியமும் ஒரு பெண்ணின் கற்பைக் கருவாக வைத்து
எழுதப்பட்டிருக்கும் வலிமையான படைப்பு. படைப்பில் இருக்கும் பாடல் ஒவ்வொன்றும் சுவை சொட்ட, சொட்ட இருக்கின்றது. வெற்றுச் சொற்கள், வீணான காட்சிகள், தேவையற்ற பாத்திரங்கள், சிக்கலான கதைப்போக்கு எதுவும் இல்லை.
ஒரு தெளிந்த நீரோட்டம்போலக் கதை செல்கிறது. தொடக்கம் முதல் இறுதிவரை எந்தத் தடங்கலும். மடங்கலும் இல்லாமல் கதையிருப்பதால் படிப்போருக்கு இடையில் நிறுத்த மனமிருக்காது.
மொத்தத்தில் ஒரு சிறந்த பாவியப் படைப்புக்கான அத்தனைத் தகுதிகளும் பெற்று ‘அண்ணல்’ கன்னலாய் இனிக்கிறது. ஒரு சிறப்புமிக்க பாவியம் நம் இலக்கிய உலகில் இடம்பெறப்போகிறது என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பெருமை கொள்கிறது.
அதற்காக உழைத்த ஐயா தமிழமல்லன் அவர்களை
நம் தமிழ்கூறும் நல்லுலகம் போற்றாமல் விடாது. வெற்றிகரமான இந்த நூலுக்கு
என்னுடைய கருத்தை வழங்க வாய்ப்பு பெற்றதை ஒரு பேறாகவே நான் கருதுகிறேன்.
படிக்கத் துடிக்கும் உங்களுக்குப் பாதை விடுகிறேன். நன்றி!
(நிறைவு)
பாவலர் ஆறு.செல்வன்
Comments
Post a Comment