10. உடம்பை வளர்த்தல்
- உடம்பெலாஞ் செய்யு மொப்பிலாக் கருவி.
உடல் என்பது எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒப்பற்ற கருவி ஆகும்.
- உடம்பை வளர்த்தலஃ துரமுறச் செய்தல்.
உடம்பை வளர்த்தல் என்பது உடலை வலிமை உடையதாக மாற்றுவது ஆகும்.
- உடம்புநல் லுரமுறி னுலகெலா மெய்தும்.
உடல் நல்ல வலிமை பெற்றால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ளும்.
- உரனிலா வுடம்பு வரனிலா மங்கை.
வலிமையற்ற உடல் என்பது வாழ்க்கைத் துணையற்ற வாழ்வு போன்றது.
- உளந்தொழில் செயற்கு முடலுரம் வேண்டும்.
நாம் எண்ணும் செயலைச் செய்வதற்கு உடல் வலிமை வேண்டும்.
- வளியன னீரதி லளவி னுறச்செயல்.
காற்று, அனல், நீர் ஆகியவை உடலில் சரியான அளவுடன் இருக்குமாறு செய்தல் வேண்டும்.
- மாறுபா டிலாவூண் மறுத்துமுப் பொழுதுணல்.
உடலுக்குப் பொருந்துகின்ற உணவை அளவுடன் மூன்று முறையாக உண்ண வேண்டும்.
- சிலம்பமெய்ப் பயிற்சிக டினந்தொறுஞ் செய்க.
சிலம்பாட்டம் போன்ற உடற்பயிற்சிகளைத் தினமும் செய்தல் வேண்டும்.
- பிணியுறி னுடன்பல தீர்த்தான் மருந்துணல்.
நோயுற்றால் உடனடியாக (பல நோய்களைக் குணமாக்கிய) அநுபவமுள்ள மருத்துவரிடம் வைத்தியம் செய்தல் வேண்டும்.
- நினைந்த படியுடல் வளைந்திட வளர்க்க.
நாம் எண்ணியதைச் செய்யும்படி உடலை வளர்த்தல் வேண்டும்.
வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment