தலைப்பு-மொழிமானக்காவலர் தமிழமல்லன் - thalaippu_mozhimaanakaavalar_thamizhamallan

மொழிமானக் காவலர் தமிழமல்லன்

தமிழுணர்வு குன்றாத தகையாளர்
தன்மானம் நின்றோங்கும் நெறியாளர்
உமியாக அயற்சொற்கள் கலப்பதையே
உரக்க எதிர்க்கின்ற வீராளர்
மல்லனுடை பாக்கள் என்றால்
அனல்பறக்கும்
நல்லொழுக்கம் கருத்துவளம்
அணிவகுக்கும்
கன்னலென தேன்பாக்கள்
கரும்பினிக்கும்
நன்னெறியில் பிறழ்வோரை
சுட்டெரிக்கும்
மின்சாரம் பாய்ந்ததுபோல்
வீச்சிருக்கும்
தென்னிலங்கை மண்பெருமை
மூச்சிருக்கும்
மண்மானம் மொழிமானம்
காத்திருக்கும்
எதுகையும் மோனையும்
எழுந்துநிற்கும்
எழுதென்று உவமையெலாம்
ஏங்கிநிற்கும்
தொடைவந்து தோள்சாய்ந்து
காத்திருக்கும்
தோதான இடம்கேட்டு
பார்த்திருக்கும்
படையெடுத்துச் சொல்லெலாம்
படியிருக்கும்
மடைதிறந்த வெள்ளம்போல்
கவிசிறக்கும்
பாவேந்தர் புகழ்பரப்பும் பண்பாளர்
பாடாற்றி தமிழ்காக்கும் அன்பாளர்
தூவலிலே துளிகலப்பும் இல்லாமல்
தூயதமிழ் வளர்க்கின்ற தாளாளர்
பகுத்தறிவு பரப்பிடுவார் இதழ்வழியே
பண்ணித்தமிழ் ஏசிடுவார் உரையினிலே
வகுத்தநெறி வழுவாமல் நடந்திடுவார்
வாய்திறந்தால்  தமிழொன்றே பேசிடுவார்
முழக்கம்
முழக்கம் கையில் நான்பெற்றேன்
முழுதாயப் படித்துத் தெம்புற்றேன்
வழக்காய் செய்யுள் செய்யாமல்
வரம்பை உடைத்த கவிகற்றேன்
இழுக்கை இகழ்ந்த திறம்கண்டேன்
ஈழம் போற்றும் விதம் கண்டேன்
எழுச்சி பொங்கும் பாக்களிலே
எள்ளல் துள்ளல் யான்கண்டேன்
தனித்தமிழே பாக்களிலே மிளிர்கிறது
தன்மானம் ஒன்றேதான் ஒளிர்கிறது
கனிச்சுவையாய்ப் பாட்டுவளம் இனிக்கிறது
கயமைகளைத் தீயிட்டு எரிக்கிறது
நடப்புகளை நன்றாக ஆய்கிறது
நரித்தனத்தை வீரோடு எதிர்க்கிறது
இடமறிந்து கொள்கைகளை விதைக்கிறது
இன்பத்தமிழ் சிறந்திடவே எழுகிறது
கையில் மல்லன் பாட்டோடு
காணும் இளைஞர் கூட்டத்தை
மெய்யாய்க் காண்போம் பின்னாளில்
மேன்மை எய்தும் தமிழினமே
ஐயா வாழ்க நீடூழி!
அடுத்தும் படைப்பீர் பலநூல்கள்
கையைக் கூப்பி வாழ்த்துகிறேன்
கன்னித் தமிழ்போல் வாழ்ந்திடுக!
 மு.பாலசுப்பிரமணியன்
செயலர்,
புதுவைத் தமிழ்ச் சங்கம்