Skip to main content

நான்தான் கடவுள்! – ஆரூர் தமிழ்நாடன்




தலைப்பு-நான்தான்கடவுள்- ஆரூர்தமிழ்நாடன் :thalaippu_naanthaankadavul

நான்தான் கடவுள்!

நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்;
நான்தான் பூமியை நடத்தும் கடவுள்!
நம்ப மறுக்கும் நண்பர்க ளேஎனைக்
கூர்ந்து பார்த்தால் கும்பிடு வீர்கள்!
எங்கும் நான்தான் இல்லா திருக்கிறேன்;
எங்கும் ஆசையாய் இறைந்து கிடக்கிறேன்;
மழையோ வெயிலோ மயக்கும் பொழுதோ
மனமொன் றாமல் மரத்துத் திரிகிறேன்;
வாழ்வின் மகிழ்வை வசீகர சுகத்தை
உணர்ந்து நெகிழ ஒருபொழு தில்லை;
வலிகள் என்று வருந்திய தில்லை;
நிறைவென நெஞ்சம் நெகிழ்ந்ததும் இல்லை;
நான்தான் கடவுள்; நான்தான் கடவுள்;
நான்தான் பூமியை நடத்தும் கடவுள்!
இசைக்கென உயிரும் இளகுவ தில்லை;
வசைகேட் டாலும் வதங்கு வதில்லை;
சிலையாய் நிற்பதும் செயலற் றிருப்பதும்
கடவுளின் தொழிலெனில் கடவுள் நானே!
என்கண் முன்னே எதுநடந் தாலும்
வெறுமையாய் நானும் வேடிக்கை பார்ப்பேன்;
கொள்ளைகள் கோரக் கொலைகள் என்முன்
அரங்கேறி னாலும் அமைதி காப்பேன்!
அன்பை உணரேன்; அறிவை உணரேன்;
கல்லாய்ச் சமைந்த காரணத் தால்நான்
கச்சித மாகக் கடவுள் ஆனேன்!
அரசியல் உலகில் அறம்பிழைத் தோர்க்கும்
வாக்கினை வரமாய் வழங்கி மகிழ்கிறேன்!
வெட்கம் மானம் வேதனை சுரணை
இவைகள் இன்றி இருக்கிறேன் கல்லாய்!
உழைப்பில் லாதோர் உயர்வதைப் பார்த்தும்
உழைப்போர் இருளில் உழல்வதைக் கண்டும்
மனம்பதைக் காமல் மவுனம் நோற்கிறேன்;
போர்க்களம் காணாப் புழுவாய்த் திகழ்கிறேன்!
புன்னகை இதழ்களை; கண்ணீர் விழிகளை;
பெரிதாய்க் கருதாப் பேராண்மை கொண்டவன்!
எனக்கெனக் கடமைகள் ஏதும் இல்லை;
பழமை இருளில் பதுங்கி வாழ்கிறேன்!
ஈழத்தில் நடந்த இழவின் போதும்
இதயத் துடிப்புடன் இருந்து தொலைத்தேன்;
வேழத் தமிழர் வீழ்ந்த போதும்
உணர்ச்சி களற்ற உயிராய் நின்றேன்!
எதற்கும் அசையாது இருக்கும் என்னை
இறைவன் என்றே இப்போ துணர்ந்தேன்!
பிணம்போல் வாழும் பெருமிதன் என்னை
இறைவனாய் ஏற்க எவர்தான் மறுப்பார்?
அரூர் தமிழ்நாடன்02 " aarurthamizhnaadan02
ஆரூர் தமிழ்நாடன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்