வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 3/3 – முனைவர். ப. பானுமதி
வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 3/3 – முனைவர். ப. பானுமதி
3
சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக
இழைக்கப் படும் வரதட்சணைக் கொடுமை, வரதட்சணை கொடுப்பதற்காகவே வேலைக்குப்
போகும் பெண்கள் ஆங்காங்கு படுகொலைச் செய்யப்படும் கொடுமை முதலியவற்றைக்
கண்டு மனம் கொதிக்கும் இக்கவிஞர் ஆண் என்பதால் கண்ணீர்த் துளிகளுக்கு
மாற்றாகக் கவிதைத் துளிகளைச் சிந்தியுள்ளார். அந்தத் துளிகளில்,
கருவுக்குக்
கருவான சமாச்சாரத்தின்
கார்காலங்கள்
நிசப்தப்பட்டுக்
கிடக்கிறது !
பாதம் சுமக்கும்
பாதரட்சைகளின்
பரதேசி வாழ்வு போல
என்று தீண்டாமை என்று ஒதுக்கப்படும்
பெண்களின் மாதவிடாய்ச் சிக்கலும் ஒன்று. இதுவரை பெண்கள் மட்டுமே பேசி வந்த
இச்சிக்கலைக் கையில் எடுத்துள்ள முதல் ஆண் கவிஞர் இவராகத்தான் இருக்க
முடியும். இந்தக் கவிஞரின் இந்தப் போக்கு பெண்கள் மீதான கரிசனையும்
பெண்ணியத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் தார்மீகப் பொறுப்பும் உள்ளவர்
என்பதை பறை சாற்றுகிறது.
தேர்தல் காலம் எல்லா நாடுகளிலும் ஒரே போலத்தான் இருக்கும் என்பதைக் காட்டுகிறது பின்வரும் இக்கவிதை
பசுத்தோல் போர்த்திய
புலிகளின்
பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து விட்டால்
அரசியலில்
அபிலாசைகளை மட்டுமல்ல
அப்பத் துண்டுகளைக்கூட பெறமுடியாது
என்று புத்தி சொல்லும் போது தம் மக்கள்
மீது உள்ள கருணையும் அவர்களை ஏமாற்றும் அரசியல் எத்தர்களின் மீது
கவிஞருக்கு உள்ள ஆற்றாத சினமும் வெளிப்படுகிறது. நாட்டின் மீது பற்றும்
அக்கறையும் கொண்டவர்களால்தான் நல்லன கண்டு போற்றவும் அல்லன கண்டவிடத்து
அறச் சீற்றம் கொண்டு தூற்றவும் முடியும்.
கச்சான் காற்றடித்து
கழுதைக்கும்
காமம் வரும் !
மந்திக்கும்
மசக்கை வந்து
மாங்காய்
மரம் கேட்கும் !
இக்கவிதையில் அரசியல் கோமாளிகளின் அலங்கோல ஆட்சியை அங்கதமாகச் சுட்டும் நிலை இவர் கைவண்ணத்தில் விளைந்த அழகுக் கலை.
நீ
அமைதியின்
சின்னமா?
இல்லை
அழுகையின்
கிண்ணமா?
என்று கடலைப் பார்த்துக் கேட்கும்
கேள்வியின் போது நெஞ்சில் நின்று அலைமோதுகிறது கடல்கோளின் –சுனாமியின்-
சொல்லவியலாச் சோகக் காட்சி.
கடற்கரையில்
கனீபா
காக்காவைக் காணோம்
கச்சான்
கொட்டையைக் காணோம்
கஞ்சி
மாமாவைக் காணோம்
ஓட்டல்
சாதிக்கீனைக் காணோம்
என்று இக்கவிஞர் ஒவ்வொருவர் பெயராகச் சொல்லிப் புலம்பும் போது நம் கண்களில் ஊற்றெடுக்கிறது ஊழிப் பேராழி.
மேலே காட்டிய கவிதைகளன்றி அங்கதமும்
இக்கால நடைமுறையும் இணைந்து நடைபோடும் கவிதை ‘பொன்னாடை’. செலவுக்குள்
அடங்காத வறுமைக் கோட்டுக்குள் வாழும் ஒரு சராசரியின் வருவாயை ‘யானைப்
பசியும் சோளப் பொரியும்’ என்னும் கவிதையில் இயல்பாகச் சுட்டிக் காட்டுவது
அழகு. சமுதாயச் சிந்தனைக் கவிதைகளில் இனவாதம், மதவாதம், ஈழம் என்று
சற்றேறக்குறைய வரிசையாக எல்லாச் சிக்கல்களிலும் ஒரு வலம் வந்து விடுகிறார்
இக்கவிஞர்.
“இந்த உலகம் காற்றால் நிரப்பப் படவில்லை. காதலால்தான் நிரப்பப் பட்டிருக்கிறது” என்பார் திரைப்பட பாடலாசிரியர் பழநிபாரதி.
ஆனால் இந்த இளைஞனின் மனம் முழுவதும் சமுதாயச் சிந்தனையால் நிரப்பப்
பட்டிருக்கிறது. மொத்தம் 56 கவிதைகள் இடம் பிடித்துள்ள இந்தத் தொகுப்பில்
காதல் கவிதைகள் இரண்டே இரண்டு என்பதே இதற்குச் சான்று. இவரது மனத்தில்
காதல் பிடித்த இடம் வெறும் 3.5 விழுக்காடு. “யாருள்ளித் தும்மினீர்” என்று
கேட்கும் வள்ளுவனின் தலைவியை நினைவூட்டுகிறது இரண்டில் ஒன்றான ‘விக்கல்’
என்னும் அழகிய காதல் கவிதை.
நிறைவாக…
“உண்மையே அழகு; அழகே உண்மை” என்று கவிஞர் கீட்சு
கூறுவார். இக்கவிஞரின் கவிதைகள் காலத்தை முற்றும் தெளிவாகக் காட்டும்
உண்மைக் கவிதைகளாகச் சொலிக்கின்றன. இன்றைய இளைஞர்களை வெட்டியாகச்
சுற்றுகிறார்கள் என்று கூறுவதெல்லாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய
கூற்று அல்ல. குடும்பச் சுமையைச் சுமக்கும் இந்த ஒட்டகங்களிடம் வாழும் போதே
வரலாறு படைக்கத் துடிக்கும் ஆற்றலும் ஆர்வமும் ஆறா உழைப்பும் இருப்பதைக்
கண்ட பின் அவ்வாறு கூற எப்படி மனம் வரும். இந்த இளங்கவிஞரின் சொற்களில் வரலாறு வாழ்ந்து கொண்டிருக்கிறது. என்றும் வாழும் வரலாறாய் வாழ்வார் என்று வாழ்த்தி அன்புடன்…
எழுத்தாளர், முனைவர். ப. பானுமதி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி
அண்ணாநகர் கிழக்கு,
சென்னை 600 102
99412 98850
Comments
Post a Comment