வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3 – முனைவர். ப. பானுமதி
வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்!
கவிதை என்பது தம்மின், தம்
நாட்டின், மொழியின், பெருமை பேசுவதோ, சிறுமையைக் கண்டு கொதிப்பதோ
மட்டுமல்ல. அது தன் வேகம் நிறைந்த, விவேகம் நிறைந்த, எழுச்சி மிகுந்த
கருத்தால் சிறுமையைக் களையும் பக்குவத்தோடு வெளிப்படல் வேண்டும்.
எதிர்காலப் புலனோடு மட்டுமன்றி சமுதாயத்தைக், குறிப்பாக இளைய சமுதாயத்தை
முன்னேற்றப் பாதை நோக்கி இயக்கக் கூடிய விசையாக இருக்க வேண்டும். தனக்கான பாதையில் மட்டுமன்றி தான் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஒர் அடையாளத்தை விட்டுச் செல்வதாக இருக்க வேண்டும். “முடியும் வரை சரித்திரம் படி, முயன்று சரித்திரம் படை. முடிந்தால் சரித்திரமாக வாழ்” என்பார் தமிழறிஞர் க. ப. அறவாணன் அவர்கள்.
“நாங்களெல்லாம்
வாழும்போதே
வரலாறு படைக்கத் துடிப்பவர்கள் ……”
என்று வரலாறு படைக்கத் துடித்துக் கொண்டு இருப்பவர் அன்பு நண்பர் பிரகாசக்கவி அன்வர். அரசியல், வாழ்வியல், சமுதாயம், நிலையாமை என்னும் பல்வேறு தளங்களில் தடம் பதித்துள்ள இவரது கவிதைகளே இதற்குச் சான்றாகின்றன.
பணத்தின் அடித்தளத்தில்தான் மனித வாழ்க்கை அமைகிறது. பணம் இல்லாதவன் பிணம் என்பர். பணத்தைத் தேடி தூரத்தேசம் செல்லும் இளைஞர்கள் பொறுப்பு அற்றவர்கள் அல்லர்.
தங்கை, தம்பி, திருமணம் கல்வி என்று குடும்பச் சுமையைத் தந்தையிடமிருந்து
தோள் மாற்ற மீசை அரும்பும் பருவத்தில் வேற்று நாட்டுக்குச் செல்கின்றனர்.
இவர்கள் திரும்பும் போது,
ஒருவேளை
அம்மாவும் அப்பாவும்
செத்துப்போயிருக்கலாம் …..!
மனைவி பிள்ளைகள்
நோயினால்
நொந்து போயிருக்கலாம் ….!
நானும் என் கனவுகளும்
முடிவிலியாய் ………………
பணமெனும் பள்ளத்தாக்குகளை நோக்கி
என்று வீட்டில் என்னென்ன நடந்திருக்குமோ
என்று இவர்தம் கவிதையில் படைத்துள்ள இக்கொடுமைகள் பலரும் சந்திக்கும்
நடப்பு. என்னதான் இலட்சியங்களைச் சுமந்து சென்றாலும் வேற்று நாடு செல்லும்
இளைஞர்களின் மனம் கடந்தேற முடியாத துன்பப் பள்ளத்தாக்கில் அமிழ்ந்து போவதை
அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது இவரது இக்கவிதை.
இருபத்து ஆறே வயது நிரம்பிய இவருள் நிலையாமை குறித்த ஆழமான சிந்தனை
வேரூன்றி இருப்பது நம்மை வியப்பில் விழிகளை விரிக்க வைக்கிறது. நிலையாமையை
செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை என்று பட்டியல்
இடுவார்கள் சித்தர்கள். இளமை நிலையாமையை,
“விறு விறுவென விற்று தீர்கிறது வாலிபம்!”
என்று கூறும் இவ்விளைஞரை மிகப்பெரிய சித்தர் என்றே கூறத் தோன்றுகிறது.
“காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;
என்றன் காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்”
என்று பாரதியும்,
மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரிட்சித்துப் பார்.
என்று முன்னாள் பாரதத் தலைமையாளர் திரு. வாசுபாயும்
மரணத்தோடு பேசுவார்கள். கவிஞர் அன்வரின் கவிதையில் மரணம் மனிதனோடு
பேசுகிறது. மரணம் தேடி வரும் காலம் வரை ஒருவரும் மரணம் என்று ஒன்று உள்ளது.
அது எப்போது வேண்டுமானாலும் வரும் என்னும் நிலையாமையை நினைத்துப்
பார்ப்பதே இல்லை. மனைவியென்றும் பிள்ளைகளென்றும் அவர்களுக்காக உழைப்பு
என்றும் முதுமையென்றும் முடங்கிப் போய்விட்டு மரணத்தேவன் கதவைத் தட்டும்
போது மட்டும் அழுது புலம்பும் மனிதர்களைப் பார்த்து,
“என்னை நீ
நினைக்க மறந்தபோதும்
உன்னை நான் மறப்பதில்லை
உன்னோடு
இணைந்து கொள்ளும்
பொழுதுகளில்மட்டும் ஏன் அழுகிறாய் ?”
என்று மரணம் கேட்பதாக வாழ்க்கையின் முடிவுநாளை நினைவூட்டுகிறார். இக்கவிதையைப் படிக்கும் தருணம்
பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்,
பயனில் மூப்பின், பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது ; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.
என்று வலியுறுத்திய சங்கச் சான்றோன் நம்
கண் முன் வந்து போவதை மறுக்க முடியவில்லை. இக்கவிதையின் மூலமாக இக்கவிஞர்
மறைமுகமாக, மக்கள் நல்லறம் செய்து வாழ வேண்டிய தேவையை வலியுறுத்துவதையும்
உணர முடிகிறது.
எழுத்தாளர், முனைவர். ப. பானுமதி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி
அண்ணாநகர் கிழக்கு,
சென்னை 600 102
99412 98850
Comments
Post a Comment