நாணுத்தக உடைத்தன்றோ? – பேராசிரியர் சி.இலக்குவனார்
இளங்கலை வகுப்புக்களில் தமிழ் வழியாகப்
படித்தற்கு மாணவர்கள் முன்வரவில்லையாம். அதனால் தமிழ் வழியாகப் படிக்கும்
திட்டத்தைச் சில கல்லூரிகளில் கைவிடப் போகின்றனராம். தமிழ்நாட்டில்,
தமிழர்கள் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டுள்ள அரசில் தமிழ்வழியாகப் படிக்க
மாணவர்கள் விரும்பவில்லையென்பது காணுங்காலை நாணுத்தகவுடைத்தன்றோ?
மாணவர்கள் ஏன் விரும்பிலர்?
பள்ளியிறுதித் தேர்வு வரையில் தமிழ் வழியாகப் படிக்கும் மாணவர்கள்
கல்லூரியில் சென்றவுடன் தமிழ் வழியாகப் படித்தலை வெறுப்பார்களா? மாணவர்கள்
வெறுக்கவில்லை; அதனை விரும்புகின்றனர். அங்ஙனமாயின் தமிழ் வழிப் பயிலும்
வகுப்புகளுக்கு அவர்கள் ஏன் சென்றிலர்?
தமிழ்நாட்டு அரசு, தமிழை ஆட்சிமொழியாகக்
கொண்டிருப்பினும் தமிழ்ப் புலமை யுடையோரையும் தமிழ் வழியாகப் பயின்றோரையும்
பிற தகுதிகள் இருந்தும் இன்னும் மதித்திலது. தமிழக அரசில்
பணிபுரிவோருக்குத் தமிழறிவு வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று
அறிவித்துள்ளது. தமிழ் வழியாகப் பயின்றோர், ஆங்கிலம் வழியாகப் பயின்றோர்
எனும் இரு சாராரினும் ஆங்கிலம் வழியாகப் பயின்றோர்க்கு மதிப்பு தரும்
மனப்பான்மை நிலவுகின்றது. ஆகவே அரசுப் பதவியை நாடிப் படிக்க வருகின்றவர்கள்
அரசு பதவியை அடைவதற்கு உதவியாக இருக்குமென்று நம்பிக்கையில் ஆங்கிலம்
வழியாகப் படிக்க முன்வருகின்றனர். ஆகவே தமிழ் வழியாகப் படித்தோர்க்கே
தமிழை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்நாட்டு அரசில் முதலிடம் உண்டு
என அறிவிக்க வேண்டும். அன்றியும் ஆங்கிலம் வழியாகக் கற்பித்தலையும் கலைப்
பாடங்கள் பொறுத்தவரையிலாவது நிறுத்திவிட வேண்டும். பல்கலைக் கலைக் கழகப்
புகுமுக வகுப்பிலும் தமிழ் வழியாகப் படிக்க விரும்புவோர்க்கு எனச்
சிலபிரிவுகளேனும் இருக்குமாறு செய்தல்வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வர்கட்குத்
தமிழ்ப்பற்றும் தமிழ்ப் பாடமொழிக் கொள்கையில் ஆர்வமும் இருத்தல் வேண்டும்.
ஒரு சில கல்லூரியில் அதன் கல்லூரி முதல்வர் விடுமுறையில் இருந்தபோது அக்
கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முதல்வராகப் பணியாற்ற வேண்டிய நிலை
ஏற்பட்டது. அக் காலம் கோடை விடுமுறைக்குப் பின்னர்க் கல்லூரி திறக்கப்பட்டு
மாணவர்களைப் புதிதாகச் சேர்க்கும் பருவமாக இருந்ததனால், அக்கல்லூரியில்
பொருளியல் வகுப்பில் தமிழ் வழியாகப் படிப்பதற்கு இருபது மாணவர்கள் சேர்ந்து
விட்டார்கள். எங்ஙனம் சேர்ந்தார்கள். தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப்
பேராசிரியர்கள் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்ததனாலன்றோ?
தமிழர்களே எண்ணிப் பாருங்கள்? தமிழைப்
பாடமொழியாக்கி கொள்ள மாணவர் விரும்பிலர் என்பது உண்மைக்கு மாறுபட்டதாகும்.
ஆட்சியாளர்க்கும் கல்லூரியை நடத்துகின்றவர்கட்கும் இயற்கையோடியைந்த
நெறியாம் தமிழைப் பாட மொழியாகக் கொள்ளும் முறையில் உண்மைப் பற்று
இருக்குமேல், தமிழ்ப்பாட மொழி வகுப்பில் மாணவர் சேரா அவலநிலை தோன்றாது.
புண் வைத்துப் புறம்பொதிதல் வேண்டா. தமிழ்ப் பாடமொழி வகுப்பில் சேர
மாணவர்க்கு விருப்பம் இருந்தும், சேரா முடியாதிருக்கும் சூழ்நிலையை அகற்ற
உடனே முன் வருதல் வேண்டும். ஆங்கில ஆட்சி அகன்றபிறகும், தமிழை ஆட்சி
மொழியாக ஏற்றுக் கொண்ட பின்னரும், இன்றைய மாணவரே நாளைய ஆட்சியாளர் என்பதை
அறிந்து வைத்தும், ஆங்கிலத்தையே பாடமொழியாகக் கொள்ளுதல் அறிவுடைச்
செயலாகாது.
குறள்நெறி (மலர் 1 இதழ் 12): ஆனி 18,1995: 01.07.1964
Comments
Post a Comment