மொழித்திற முட்டறுத்தல் 3 – பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர்
இறந்த மொழிகள்
மேற்கூறிய இருவகை மொழிப் பாகுபட்டினையம்
உளத்திற்கொண்டு ஒரு சேர ஆய்வோமாயின் ஒருண்மை புலனாகின்றது. முதற்
பாகுபாட்டில் உள்ள 1. இந்திய ஐரோப்பிய மொழிகள், 2. செமிட்டிக்கம் என்ற
இனத்தைச் சேர்ந்த மொழிகள் இவையிரண்டும் இரண்டாம் பாகுபாட்டில் உள்ள உட்
பிணைப்பு மொழிகளாயுள்ளன. இவற்றிலேயே சிறந்த மொழிகள் நூற்றுக்கு ஐம்பது
விழுக்காடு காணப்படுகின்றன. வேர்ச்சொற்கள் இன்னதென அறியமுடியாதவாறு சொற்கள்
மாறுபாடடைதல் இம்மொழிகளிற் பல உலகவழக்கறுவதற்கு ஒரு காரணமாயிருக்கலாம்.
ஒரு காலத்தில் மக்களால் பேசப்பட்ட மொழிகளாயிருந்தவை பின்னர் பேசப்படாமல்
மறைந்தொழிதலே மொழிகளில் சிறப்பாகும். மூலமொழிகள் இவ்வாறு மறைந்தாலும்
அவற்றிலிருந்து வேறு மொழிகள் தோன்றுவதால் அவை வேறு பிறப்பெடுக்கின்றனவென்றே
கூற வேண்டும். மூலமொழிகள் எழுத்துருவம் பெற்ற மொழிகளாயிருந்தால்
அவற்றிலுள்ள இலக்கியங்கள் மறையா, சமசுகிருதம், கிரேக்கம், இலத்தீன், பழைய
ஆங்கிலம், இடைக்கால ஆங்கிலம் இவற்றின் இலக்கியங்கள் இன்றும் உள்ளன. இக்கால
ஆங்கிலேயர் தம் பழைய இலக்கியங்களைக் கற்க வேண்டுமானால் தம்பழைய மொழிகளைக்
கற்றாக வேண்டும்.
தமிழின் இளமைத் திறம்
எத்தனையோ மொழிகளுக்கு தாய்மொழிகளாய் நின்ற
சமசுகிருதம் கிரேக்கம். இலத்தீன் ஆகியவை பேச்சு வழக்கற்றுப்போக இவற்றிலும்
பழமையானதென ஆராய்ச்சியால் பெறப்படும் தமிழ் இன்றும் பேசப்படும் மொழியாய்
நிற்பதேன்? ‘மனோன்மணியம்’ ஆசிரியர், தமிழ்ப் பேரறிஞர், காலஞ் சென்ற
சுந்தரம்பிள்ளை அவர்கள் தமிழ் வாழ்த்தாகப்பாடியுள்ள செய்யுட்கள் ஒன்றில்,
‘பல்லுயிர்களையும், உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கின்ற இறைவன்
என்றும் அழியானாய் நிற்பது போல், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய
மொழிகளைப் பெற்றும், உலக வழக்கழிந்த ஆரியம்போல் சிதையாமல் நிற்கின்ற தமிழே
நின்னுடைய கட்டிளமைத் திறத்தை நினைத்து வியந்து, செயலற்றுக்
கருத்தொருப்பட்டு வாழ்த்துவம்’’ எனக் கூறியுள்ளது உயர்வு நவிற்சியன்று,
வெற்றுரையன்று. ஆதலின் இன்றும் குன்றா இளமைதாய் நிற்பதற்கேதுவான தமிழின்
சிறப்பியல்புகள் யாவை?
இவ்வாராய்ச்சியில் இதுவரை யாரும்
ஈடுபடவில்லை மேனாட்டறிஞர் மேற் குறைகூறுவதற்கில்லை. ஏனெனில் இன்றும்
அவர்கள் தமிழ் மொழியின் தொன்மையினையும் பெருமையினையும் உணர்ந்தவர்களாகத்
தோன்றவில்லை. தமிழ் ஒரு சிறந்த மொழி என்ற அளவிலேயே அவர்கள் நிற்கின்றனர்.
தமிழறிஞரும் மேனாட்டறிஞர் சுவடுபற்றியே செல்வதால் இத்துறையில் அவர்கள்
செல்லவில்லை. நம் அறிஞர்களிற் சிலர், ஒலியியலையும், சொற்பிறப்பியலையும்
ஆராய்வதாற் பயனில்லை; சொற்றொடரியலை ஆராய்ந்தாற்றான் மக்கள் கருத்து வளர்ந்த
வரலாற்றை யறியலாம் என்ற கருத்துடையவராயிருக்கின்றனர். உண்மையே, எனினும்
மொழிகள் எழுதப்படும் நிலைக்கு வந்த பிறகு நமக்குக் கிடைக்கும் சான்றுகள்
உரைநடைகளல்ல, செய்யுட்களே. செய்யுட்களிலிருந்து பேச்சுநடை சொற்றொடரமைப்பை
அறிவது அரிது. ஆதலின் இக்காலப் பேச்சுநடையின் சொற்றொடரமைப்பைக் கொண்டு
பண்டைய மக்கள் கருத்து வளர்ந்த வரலாற்றை அறிதற்சு வழியில்லை. இது எல்லா
மொழிகளுக்கும் பொருந்தும். மொழிகள் உலக வழக்கறுவதற்குக் காரணங்கள் பல
உண்டு;
1. ஒரு மொழி
எழுதப்படும் நிலைக்கு வராமல் பேச்சு மொழி நிலையில் இருந்த காலை அம்மொழியைப்
பேசும் மக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழ்தாலும் அங்கங்கே ஏற்படும்
புதுக் கூட்டுறவுகளாலும் மொழி மாற்றமடைகின்றது. சென்றவிடத்து மொழி
சென்றோர். மொழியை மாறச் செய்தலும் நிகழக்கூடியவையே.
2. எழுதப்படும்
நிலைக்கு வந்த மொழியில் இலக்கியங்கள் ஏற்பட்ட பிறகு அம்மொழியையும்
இலக்கியங்களையும் வரையற¬ப்படுத்திக் காப்பாற்ற ஒழுங்கான இலக்கணங்கள்
ஏற்படாத குறையினால் அம்மொழி நாளடைவில் மாறும் இயல்பை அடைகின்றது.
3. ஒரு மொழியின்
அடிப்படையான எழுத்துக்களை ஒலியின்படி முறைப்படுத்தி அவற்றிற்கு வேண்டிய
உருவங்களை அமைக்காமையாலும், அவற்றின் தொகையை அறுதியிடாமையாலும்
எழுத்துக்களின் ஒலிகள் காலப்போக்கில் பல்வேறு மாறுதல்களுக்குள்ளாகின்றன.
அதனால் மொழியும் மாறுகின்றது.
4. பேச்சொலிகளின்
இயற்கை விதிகளைப் பின்பற்றாது, அவற்றிற்கு மாறான ஒலிகளை வலிந்து
புகுத்துவதாலும், பிறமொழிச் சொற்களை வரையறையின்றிப் புகுத்தி மொழியை
வளம்படுத்த முயலுவதாலும் மொழி மாறுகின்றது.
5. பேச்சு மொழிக்கும் இலக்கிய மொழிக்கும் உள்ள வேறுபாடு பெரிதாகாதவாறு தடை செய்யாமையால் மொழி மாறுகின்றது.
தமிழின் இளமைக்குக் காரணம்
மேற்கூறிய காரணங்களை விரிவாக விளக்குவதற்கு
இக்கட்டுரை இடந்தராமையின் இன்றியமையாதனவெனயாம் கருதும் மொழியின்
ஒலியியல்பு இரண்டை விளக்கி இக்கட்டுரையை முடிப்பாம். தமிழ் மொழியில் மிக
மிகப் பழங்காலத்தில் ஒலியெழுத்துக்கள் உண்டாயின. அவற்றிற்கு உருவங்கள்
பின்னர் அமைக்கப்பட்டன. தமிழ்மொழியிற்றான் ஒலியெழுத்துக்களுக்கு முதன்முதல்
உருவங்கள் அமைக்கப்பட்டன என்று கொள்வதற்குச் சான்றுகள் பல உள்ளன. அவற்றை
ஈண்டு விரித்தல் வேண்டாம். உருவங்கள் ஏற்பட்ட பிறகு தமிழ் இலக்கியங்கள்
எழுதப்படும் நிலைக்கு வந்தன. இவ்விலக்கியங்களை முறைப்படுத்தி அளவைக்
கட்டுப்படுத்த அகத்தியம், தொல்காப்பியம் ஆகிய பேரிலக்கணங்கள் பின்னர்த்
தோன்றின. ‘‘மொழி முதற் காரணமாம். அணுத்திரன் ஒலி எழுத்து’ என்பது
வியக்கத்தக்க எழுத்திலக்கணமாகும். ‘பவணந்தி என்னும் பல்கலைக் குரிசில்’
கூறிய ஒலியெழுத்திலக்கணம் இது. இவர்க்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
ஆசிரியர் தொல்காப்பியனார், தமிழ் எழுத்து முப்பத்து மூன்றென
வரையறைப்படுத்தி, அவை பிறக்கு மாற்றையும், அவற்றின் ஒலிகள் உலக மொழிகளின்
எழுத்தொலிகளுக்குப் பொதுவாய் நிற்கும் தன்மையினையும் முதல் இரண்டு
இயல்களில் பொதுவாகவும், பிறப்பியலில் சிறப்பாகவும் நுண்மாண் நுழைபுலங்
கொண்டு விளக்கியுள்ளார். இவற்றின் விரிவை எமது ‘உலகப் பொது தமிழ்
எழுத்தொலி’ என்ற நூலிற் காண்க.
தமிழ் மொழியில் உள்ள உயிர் பன்னிரண்டும்,
மெய் பதினெட்டும் பேச்சுக் கருவிகளின் எளிய இயற்கையான முயற்சியால்
உண்டாகும். அடிப்படை எழுத்துக்களாம். இவற்றிற்கு மாறுபட்ட ஒலிகளையுடைய
ஆங்கில ஐரோப்பிய உயிரெழுத் தொலிகளும், சமசுகிருதத்தின் மெய்யெழுத்து
வருக்கங்கள் போன்றவையும், அரபி மொழியின் மிடற்றொலி எழுத்துக்களும்,
பேச்சுக் கருவிகளின் கடு முயற்சியால் உண்டாகும் கலப்பொலி எழுத்துக்களாம்.
கலப்பொலி எழுத்துக்களை உண்டு பண்ணுவதற்கு வேண்டிய முயற்சியும் மூச்சும்
அடிப்படை எழுத்துக்களை உண்டு பண்ணுவதற்கு வேண்டிய முயற்சி. மூச்சு இவற்றை
விட அதிகமாகும். ஆதலின் முயற்சிச் செட்டு(Econamy of Effort), எழுத்துச்
சுருக்கம்(Syncope) ஆகிய ஒலியிலக்கண விதிகள் இம்மொழிகளை விரைவில்
மாறுபாட்டுக்குள்ளாக்கும்.
(தொடரும்)
(குறள்நெறி: சித்திரை 19, 1995 / மே 1, 1964)
Comments
Post a Comment