பூங்கோதை 5 : வித்துவான் மு. இராமகிருட்டினன்
‘‘கண்ணம்மா அவள் கைகளை நன்றாகப் பிடித்துக் கொள். அவள் உண்மையிலேயே ஒரு காட்டுப்பூனையாக மாறிவிட்டாள்.’’
‘‘வெட்கமில்லை’ ஒரு ஆண்பிள்ளையோடு சரியாக
மல்லுக்கு நிற்கிறாயா? அதுவும் எனக்குக் கஞ்சி ஊற்றி வளர்க்கிற அந்தப்
புண்ணியவதியின் மகனை அவர் தானே இந்த வீட்டுக்கே தலைவர்’’ என்று கூறினாள்
கண்ணம்மா.
‘‘தலைவர்! அவர் இந்த வீட்டுக்குத் தலைவராக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. நான் என்ன ஒரு பணிப்பெண்ணா?’’
‘‘இல்லை; அதை விட ஒரு படி கீழ்;
பணியாளராவது உழைத்து உண்கிறார்கள். உனக்குப் போடுவது வெட்டிச் சோறு தானே;
போ உள்ளே; அந்த மூலையிலே போய் உட்கார்ந்து உன்னுடைய போக்கற்ற நிலையையும்,
குறும்புத் தனத்தையும் நீயே எண்ணிப்பார்’’ என்று எக்காளமிட்டாள்.
இதற்குள் பூங்கோதையை அப்பணிப் பெண்டிர்
இருவரும் செங்கமலம் குறிப்பிட்ட அச்சிவப்பறைக்குள் தூக்கிக் கொண்டு வந்து
அங்குக் கிடந்த ஒரு முக்காலியில் உட்காரச் செய்தார்கள். பூங்கோதை
அங்கிருந்து திமிறிக் கொண்டு ஓடத்துணிந்திருப்பாள்; ஆனால் காளியையும்
கண்ணம்மாவையும் திமிறுவது பூங்கோதைக்கு அத்துணை எளிதன்று. காளி அவளை இறுகப்
பிடித்து முக்காலியோடு அழுத்துக் கொண்டு ‘‘கண்ணம்மா இந்தக்குட்டி அடங்கி
உட்கார மாட்டாள். ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு வா; முக்காலியோடு
சேர்த்துக் கட்டி விடலாம்’’ என்று கத்தினாள்.
கண்ணம்மாவும் கயிற்றை எடுத்துக் கொண்டு
வருவதற்காகப் புறப்பட்டாள். அதனைக் கண்ட பூங்கோதை மேலும் தன்னை,
துன்பத்திற்கும் இழிவிற்கும் உட்படுத்திக் கொள்ள விரும்பாமல் என்னைக் கட்ட
வேண்டாம்; நான் அசைய மாட்டேன்’ என்று தேம்பிக் கொண்டே கூறினாள்.
பூங்கோதை ஓரளவு அடங்கி வருவதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே காளி தன் பிடியைத் தளர்த்தினாள்.
பிறகு காளியும் கண்ணம்மாவும் சற்று
பின்னடைந்து பூங்கோதையை ஒரு கிறுக்கியைப் பார்ப்பது போல் ஐயமும் அச்சமும்
விரவ நோக்கினர்; ‘‘இதற்கு முன் இவள் இதுபோல நடந்து கொண்டவளே அன்று’’
என்றாள் காளி.
‘‘ஆனால் அந்த அடங்காப்பிடாரித்தனம்
எப்பொழுது அவளுக்கு உண்டு. நான் அம்மாவிடம் பன்முறை இதைத்
தெரிவித்திருக்கிறேன். அவர்களும் அதனை ஒப்புக் கொண்டுள்ளார்கள். முளைத்து
மூன்றிலைக் கொள்ளவில்லை; அதற்குள் இவ்வளவு கைகாரியாக இருக்கிறாளே. ஊம்…’’
என்று பெருமூச்சு விட்டாள் கண்ணம்மாள்.
காளி கண்ணம்மாவுக்கு விடையிறுக்காமலே
பூங்கோதையை நோக்கி ‘‘அம்மாக்கண்ணு பூங்கோதை நீ ஒன்று மட்டும் நன்றாக
நினைவிலே வைத்துக் கொள்; செங்கமலத்தம்மாள் ஏதோ போனால் போகிறதென்று உன்னை
அவர்களோடு இருக்கச் செய்து சோறும் துணியும் கொடுத்து வருகிறார்கள்;
இன்றைக்கு வெளியே போ என்று துரத்தினால் தெரியும்; திருவோட்டைத் தூக்கிக்
கொண்டு போக தெருத் தெருவாகப் போக வேண்டியது தான்,’’ என்று ஓர் அலைசு
அலசிவிட்டாள்.
பூங்கோதைக்கு இந்தக் கொக்கரிப்பெல்லாம்
புதிதன்று; ‘வெட்டிச் சோறு தின்பவள்’ என்பதும், ‘விரட்டி விடுவதென்பதும்’
நாள்தோறும் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்தான். உள்ளத்தின் அடியில்
உறுத்தல் ஒடுங்கிக் கிடந்தாலும், அச்சொற்கள் முற்றும் பொருள்
தருவனவாகவில்லை.
காளியும் கண்ணம்மாவும் பூங்கோதையிருந்த
அறைக்கதவை இழுத்துப் பூட்டி விட்டுப் போய் விட்டார்கள். தீச்செயல் செய்தாரை
மீளா இருளில் தள்ளிவிட்டுச் செல்லும் நரகக் காவலர் என்றே அவர்கள் தம்மைப்
பற்றி நினைத்துக் கொண்டு சென்றனர்.
பூங்கோதை அடைபட்டுக் கிடந்த அறை செந்நிறம்
ஊட்டப்பட்டு அச்சந்தருவதாக இருந்தது. அந்தப் பெருமனையில் அந்த அறைதான்
மிகப் பெரியது. அங்கிருந்த இருக்கைப் பொருட்களும் எழில்தரு பொருட்களும்
அந்த அறைக்குப் பெருமிதக் காட்சியைத் தந்திருக்க வேண்டும். தோதகத்தியில்
வேலைப்பாடுகளோடு செய்யப்பட்ட கட்டிலின் மேற்கட்டியும், புனை தொங்கல்களும்
வியப்பைத் தருவனவாகவிருந்தன. அறையின் இருபுறத்தும் அமைக்கப்பட்டிருந்த
மான்கட் காலதரின் வழியே குளிர் காற்றும் இடையிடையே மின்னல் ஒளியும்
நுழைந்து வந்தன. ஆடை நிலைப் பேழையும் ஆடி நிலைப்பேழையும் ‘துவாரபாலகரைப்’
போல் மின்னல் ஒளியால் இடையிடையே அச்சுறுத்தின. அறையின் நடுவ ண் வட்டப்
பலகையும் அவற்றைச் சூழ இருக்கைகளும் கிடந்தன. இருக்கைகளுக்கு நடுவணதாக
அமைக்கப்பட்டிருந்த ஒன்று, அரியாசனம் போல் காட்சி தந்தது. அவையாவும்
குருதியன்ன செந்நிறத் துணிகள் துன்னப் பெற்றுத் துணுக்கத்தை ஊட்டின.
தப்பி ஓடுவதற்கும் வழியில்லை. சோறும்
நீருமின்றி அணு அணுவாகச் சோர்ந்து சாக வேண்டியதுதான் முடிவு போலும் என்று
எண்ணினாள். அவ்வாறு எண்ணிக்கொண்டே மீண்டும் தான் உட்கார்ந்திருந்த
முக்காலியை நோக்கி நடந்தாள். அப்பொழுது தன்னுடைய குருதி தோய்ந்த உருவத்தை
மங்கலாக எதிர்ப்பட்ட நிலையாடியில் கண்டாள். அவளுடைய துன்ப அலைகள் மேலும்
மேலும் எழுந்து மோதின. அவ்வாறு தான் துன்புறுவதற்குத் தான் எவ்வளவில்
பொறுப்பாளி என்று நினைத்து நினைத்துக் கரைந்தாள்;
பகலிலேயே அந்த அறையில் போதுமான வெளிச்சம்
கிடையது. அதிலும் இரவு நெருங்க நெருங்க இருளும் கவ்விக் கொண்டு வந்தது.
பூங்கோதைக்கிருந்த ஓரளவு துணிவும் குறைந்துவிட்டது. தன்னுடைய மாமனார்
சிவக்கொழுந்து உயிருடன் இருந்திருந்தால் தனக்கு இத்துணை இடுக்கண்
ஏற்பட்டிருக்குமா என்று எண்ணினாள். அவளுடைய கண்கள் இருண்டன; தலை சுழன்றது.
என்ன நிகழ்கிறதென்றே அவளுக்குத் தெரியவில்லை; சோர்வுற்று விழுந்தாள்.
சிறிது நேரத்தில் ஓர் உருவம் அங்கு ஊசலாடுவது போல் தென்பட்டது. துணிகள்
துன்னப்பெற்று துணுக்கத்தை ஊட்டின.
அந்த அறையில் வெளிச்சமோ வெப்பமோ கிடையாது;
ஆள் நடமாட்டம் அடிக்கடி கிடையாது. ஒரே அமைதி – அச்சந்தரும் அமைதிதான் அங்கு
நிலவியது. வாரத்திற்கு ஒரு முறை பணிச்சிறுமி வந்து அங்குள்ள
பொருள்களின்மேல் படிந்து கிடந்த தூசியைத் துடைத்துவிட்டுச் செல்வாள்.
குறள்நெறி : பங்குனி 2, 1995 / மார்ச்சு 15, 1964
Comments
Post a Comment