தமிழ்ப் பயிற்று மொழி – பேராசிரியர் சி.இலக்குவனார்
கல்லூரிகளிலும் தமிழைப்
பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று கல்விப் பெரியார்களும் நாட்டு நலனில்
கருத்துடைய நற்றமிழ்த் தலைவர்களும் மாணவ மணிகளும் ஓயாது வேண்டிக்கொண்டுதான்
உள்ளனர். ஆனால், மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் அற்றவர்கள், பதவிகளில்
அமர்ந்து கொண்டு தமிழ்ப்பயிற்று மொழித் திட்டத்தைத் தள்ளிப் போட்டுக்
கொண்டே வருகின்றனர்.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
கல்லூரி முதல்வர் களுக்கெல்லாம் தமிழைப் பயிற்று மொழியாக்குவது பற்றிக்
கடிதம் எழுதியதாகவும் எந்தக் கல்லூரி முதல்வரும் அதற்குச் சார்பாகக் கடிதம்
எழுதிலர் என்றும் ஒரு செய்தி வெளிவந்தது.
கல்லூரிப் புகுமுக வகுப்பின்
பிரிவுகளில் ஒன்றில் மட்டும் மனித இயல் பாடத்தைத் தமிழில் நடத்தலாம் எனத்
தமிழக முதலமைச்சர் பரிந்துரை நல்கியிருப்பதாகவும் சென்னை மதுரைப்
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் இதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள்
கூறுகின்றன.
தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தைப்
பாழ்படுத்தவே இவ்வாறு செய்கின்றனர் என்று கருதுகின்றோம். ஒரு கல்லூரியின்
புகுமுக வகுப்பின் பல பிரிவுகளில் (Sections) ஒரு பிரிவில் மட்டும் தமிழில்
பயிலலாமென்பது எங்ஙனம் பொருந்தும்? ஒரு பிரிவினர் தமிழில் பயிலலாம்
என்னும்போது அனைத்துப் பிரிவினரும் தமிழில் பயிலத் தடையென்ன? புகுமுக
வகுப்பில் பயிலும் மாணவர்கள் பள்ளியிறுதி வகுப்பில் தமிழில் பயின்று
தேர்ச்சி பெற்றிருப்பதனால், கல்லூரியிலும் தமிழில் பயில்வதைத் தான்
விரும்புகின்றனர். ஆசிரியர்களும் தமிழில் பாடங்களை விளக்கி விட்டுப்
பின்னர்தான் ஆங்கிலத்தில் எழுதிக் கொள்ளச் சொல்கின்றனர். கற்கும்
மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழ்ப்பயிற்றுமொழியை
விரும்புகின்றபோது பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும் கல்வியமைச்சரும்
அரசும் குறுக்கே நின்று தடுப்பது ஏன்? ஒரு பிரிவில் மட்டும் தமிழில்
பயிலலாமென்பது அறிவுக்கும் நடைமுறைக்கும் பொருத்தமற்றதாகும்.
தமிழ்ப்பயிற்றுமொழித் திட்டத்தைத் தோல்வியுறச் செய்வதாகும்.
ஆங்கிலம் வழியாகப் பயில்வதுதான்
உயர்வுக்கு வழி என்று கூறிப் பெரும்பான்மையினரை ஆங்கிலத்தின் வழியாகப் பயில
விடுத்துச் சிறுபான்மையினரைத் தமிழ் வழியாகப் பயில வருக என்றால் எவர்
வருவர்? தாழ்ந்த மனப்பான்மை, உண்மையாக விரும்புகின்றவரையும் தடுத்து
நிறுத்துமன்றோ? ஆகவே, ஒரு பிரிவில் மட்டும் தமிழ் என்பது ஒன்றுக்கும்
பயன்படாத திட்டமாகும். தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையைத் தாழ்வுபடுத்தும்
திட்டமாகும்.
இப்பொழுதுள்ள துணைவேந்தர்களும் தமிழக
முதலமைச்சரும் உண்மையான தமிழ்ப் பற்றும் மாணவர் நலனில் கருத்தும்
அற்றவர்கள் என்பதனை இதனாலும் வெளிப்படுத்தி யுள்ளனர்.
அன்பார்ந்த மாணவ மணிகளே! பெற்றோர்களே!
உண்மைக் கல்வி உயர்ந்தோங்க நாட்டு மக்கள் நல்லறிவாளர்களாக விளங்க நம்
தாய்மொழியாம் தமிழ்வழியாகப் பயில்வதே துணைபுரியும். ஆகவே, தமிழ் வழியாகவே
கற்பிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்து விடுங்கள். தமிழில்
பயில்வதை மாணவர்கள் விரும்பிலர் என்னும் பொய்க்கூற்றை அம்பலப்
படுத்துங்கள். தாய்மொழி வாயிலாகப் பயின்று தக்கோராக முன்வம்மின்.
- குறள்நெறி (மலர் 3 இதழ் 7): சித்திரை 2, 1997: 15.04.66
Comments
Post a Comment