வேண்டாக் கிளர்ச்சி வென்றது! விரும்பும் தாய்மொழி விலகியது! – பேராசிரியர் சி.இலக்குவனார்
பயிற்று மொழியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை
மாணவர்க்கு வேண்டும் என்று சிலர் கிளர்ச்சி தொடங்கினர். தமிழ்நாட்டுக்
கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி வாயில்களாக மாணவர்கள்
கற்றுவரும் நிலை உள்ளது. ஆங்கிலத்தின் வழியாகக் கற்கும் மாணவர்களே
மிகுதியாக உள்ளனர். தமிழ் வழியாகக் கற்றலைப் பையப் பைய
மிகுதிப்படுத்துதலைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது.
ஆங்கிலேயர் ஆண்டபோது, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. ஆகவே ஆங்கிலம்
பயிற்று மொழியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்று, தமிழர் ஆட்சி
அமைந்தது. தமிழே ஆட்சி மொழி என்ற நிலை வந்துவிட்டது. ஆட்சித் துறையில்
பணிபுரிதலையேக் குறிக்கோளாகக் கொண்டு படிப்பவர்கள், தமிழ் வழியாகப் பயின்று
அறிவு பெறுதலே தக்கதாகும். ஆகவே, தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்களில் தமிழே
பயிற்று மொழியாக இருக்கும் தகுதியும் உரிமையும் உடையதாகும். ஆயினும்
ஆங்கிலப் பயிற்று மொழித் திட்டத்தை விரைவில் அகற்ற முடியாமல் ஆங்கிலம்,
தமிழ் இரண்டின் வழியாகவும் இன்று மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஆங்கிலமும் வாரத்திற்கு எட்டு மணிகட்குக் குறையாமல் எல்லா வகுப்புகளிலும்
கற்பிக்கப்பட்டு வருகின்றது. தாய்மொழியில் தகுந்த அறிவு பெறாத
நிலையிலேயே-மூன்றாம் வகுப்பிலிருந்தே அயல்மொழியாம் ஆங்கிலம் இங்குக்
கற்பிக்கப்பட்டு வருகின்ற புதுமை நிலையும் காணலாம். ஆங்கிலேயர் ஆட்சிக்
காலத்தில் கூட நடவாத ஒன்று. அங்ஙனமாகவும், கல்வியாண்டின் இடையில் எவ்வித
மாற்றமும் நிகழாதிருக்கின்ற நேரத்தில் ஆங்கிலம் வேண்டும் என்ற
கிளர்ச்சியைத் தொடங்கினர் சிலர். ஆங்கிலம் வேண்டும் என்று கூறி அமையாது
தமிழ் வேண்டா என்று கூறவும் தொடங்கி விட்டனர். தமிழ் ஒழிக என்ற முழக்கமும்
கிளம்பியது. என்ன கொடுமை! தமிழ்நாட்டில் தமிழ்த்தெருவில் தமிழர் என்று
சொல்லிக் கொண்டவர்கள் தமிழ் ஒழிக என்று கூறினார்கள் என்றால் அவர்களின்
தாய்மொழிப் பற்றை என்னென்று கூறுவது?
தழிழ் மாணவர்கள்-தமிழைத்
தாய்மொழியாகக் கொண்டவர்கள் -அவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள். தமிழைத்
தாய்மொழியாகக் கொள்ளாதவர்களும் சூழ்நிலை காரணமாகத் தமிழ் வழியாகப் பயிலக்
கடமைப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எங்கேயோ மறைந்து கிடந்த அவர்களுடைய
தாய்மொழிப் பற்று மேலோங்கத் தொடங்கி விட்டது. இருக்கும் நிலை மறந்து,
வாழும் நாட்டில், தம்மை வாழ்விக்கும் நாட்டில், அதற்கெதிராக அதன் மொழியை
ஒழிய வைக்க நினைத்து விட்டார்கள் போலும். பல நூற்றாண்டுகளாகத்
தமிழ்நாட்டைப் புகலிடமாகக் கொண்டு வாழ்பவர்கள் தமிழ் நாட்டவராக, தமிழராக வழ
வேண்டியதுதான் முறைமையாகும். அங்ஙனம் வாழ விரும்பாதவர்கள், அவர்களுடைய
முன்னோர் நாட்டுக்குச் சென்றுவிடலாம். அங்ஙனமின்றி இந்த நாட்டில் இருந்து
கொண்டே, இந்த நாட்டை, இந்த நாட்டு மொழியை, மக்களை எதிர்த்துக் கொண்டு,
அழித்துக் கொண்டு வாழ நினைத்தால், தம் அழிவுக்கே வழி தேடியவர்கள்
ஆவார்கள்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை,
அவர்கள் வாழும் நாட்டு மக்களுடன் ஒன்றி வாழுமாறு வேண்டுகிறோம். அவ்வாறே
இந்நாட்டில் வாழும் அயலவர்களை, இந்நாட்டு மக்களாகவே வாழுமாறு
வேண்டுகின்றோம். தமிழர்களைப் போல் பரந்த உளப்பாங்கும், வருவோர்களை எல்லாம்
வரவேற்றுப் புரக்கும் பெருந்தன்மையும் வேறெந்த இனத்திற்கும் இல்லையென
வரலாறு கூறும் உண்மையாகும். ஆகவே தமிழ் எதிர்ப்புக் கிளர்ச்சியில் தம்மை
ஈடுபடுத்திக் கொள்ளாது வாழ வேண்டுமென்று அன்புடன் கூறுகின்றோம்.
ஆங்கிலம் வேண்டும் என்று கூறுவதுடன்
தமிழ் திணிக்கப்படுகின்றது என்றும் கூசாது கூறுகின்றனர். தமிழ்நாட்டில்
தமிழ் வழியாகக் கற்பித்தலே இயற்கை நெறியாக இருக்க, தமிழ்
திணிக்கப்படுகின்றது என்றால் கேட்கும் வெளிநாட்டார் நகை புரிந்து எள்ளவே
செய்வர்.
உலகின் அனைத்து நாடுகளிலும் அந்தந்த
நாட்டு மொழிகளே அந்தந்த நாட்டின் பயிற்று மொழிகளாய் இருக்க, இந்தியத்
துணைக் கண்டத்திலும் ஏனைய மாநிலங்கள் தத்தம் மொழிகளைப் பயிற்று மொழிகளாக
ஆக்கும் திட்டத்தை விரைந்து மேற்கொள்ள ஆவன செய்து கொண்டிருக்க,
தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் வேண்டாம் என்று கிளர்ச்சி செய்வது எங்ஙனம்
அறிவுடைமையாகும்.
தி.மு.க. ஆட்சியை அகற்றித், தான்
பதவிக் கட்டிலில் அமர ஒரு கட்சி தன்னாலியன்றதைச் செய்து வருகின்றது.
தி.மு.க. தமிழைப் போற்றுதலைத் தலையாய கடனாகக் கொண்டது. ஆகவே தி.மு.க.வை
எதிர்க்க நினைத்து அதுபோற்றும் தமிழையும் எதிர்க்கத் தொடங்கிவிட்டது. ஆகவே
பயிற்று மொழி உரிமை வேண்டும்; ஆங்கிலம் வேண்டும்; தமிழ் வேண்டா என்ற
கிளர்ச்சியைத் தொடங்கிவிட்டது. உளத்தில் தமிழ்ப் பற்றில்லாத அயல்மொழிக்
காதலர்களும் சேர்ந்துகொண்டனர். கிளர்ச்சியில் ஈடுபட்டோர் மிகச்
சிறுபான்மையினர் ஆனாலும், ஆங்காங்குள்ள தமிழ்ப் பற்றற்ற கல்லூரி
முதல்வர்களும், ஆசிரியர்களும் கிளர்ச்சி யைப் பெரிதுபடுத்தி விட்டனர்.
அரசும் அஞ்சி விட்டது.
தமிழ்ப் பயிற்று மொழியை விரும்பாத
ஒருவரைத் தலைவராகக் கொண்ட வல்லுநர்க் குழுவை நியமித்தது. அதன் பயனாய்
பயிற்று மொழி உரிமை கொடுத்து விட்டோம் என்று கூறி விட்டது.
எந்த நாட்டிலும் இந்த உரிமை
கிடையாது. அங்கெல்லாம் இவ்வாறு வேற்று மொழியில் பயில உரிமை கேட்டால்,
நாட்டுப் பற்றற்ற தன்மையாகக் கருதப்பட்டு, மிகவும் வெறுக்கப்படும். இங்கு
உரிமை கிடைத்து விட்டது. இன்று ஆங்கிலத்தில் பயில உரிமை கிடைத்ததைக் கருதி,
நாளைக்கு இந்தியில் பயில உரிமைக் கிளர்ச்சி செய்வோரும் தோன்றுவர்.
பின்னர், தெலுங்கர், மராத்தியர், குசராத்தியர் போன்றோரும் கிளர்ச்சி
தொடங்கக் கூடும்.
கல்லூரியில் இவ்வுரிமை கிடைத்தவுடன்
உயர்நிலைக் கல்விக் கூடங்களிலும் இவ் வுரிமை வேண்டும் என முழங்கத் தொடங்கி
விட்டனர். உயர்நிலைக்கல்விக் கூடங்களில் தமிழ் பயிற்றுமொழி நிலை பல ஆண்டுகள
ஆகிவிட்டன. மீண்டும் அதனை விடுத்து ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொள்ள
உரிமை யளித்தால், ஆங்கிலேயர் ஆட்சியையே மீண்டும் கொள்ளும் அடிமை நிலைக்கு
ஒப்பாகும். உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாவதற்கு ஒரு நாளும்
இசைதலே கூடாது. கல்லூரிகளிலும் ஆங்கிலம் பயிற்றுமொழித் திட்டத்தை அகற்ற
ஆவன செய்ய வேண்டும். எல்லாக் கல்லூரிகளிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி
இருக்குமேல் மாணவர்கள் இன்றுள்ள சூழ்நிலையில் அதனையே ஏற்பர்; ஏற்குமாறு
தள்ளப்படுவர். தமிழ்ப் பயிற்றுமொழி வெறுக்கப்படும். ஒதுக்கப்படும்.
மதுவிலக்குச் சட்டத்தைப்
புறக்கணித்து மது அருந்த உரிமை கேட்டால், மறுக்கப்படுவதுபோல், தமிழ்ப்
பயிற்றுமொழித் திட்டத்தை வெறுத்து அயல்மொழி வழியாகப் படித்தலுக்கு உரிமை
கேட்பதையும் மறுக்கும் துணிவு அரசுக்கு வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்தான்
எல்லா நிலைகளிலும் பயிற்றுமொழி என்பதனை ஏற்றுக் கொண்ட கொள்கையை
உறுதியாக்குவது தமிழக அரசின் தவிர்க்கலாகாக் கடமையாகும்.
அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக்
கொண்ட வேண்டாத கிளர்ச்சி வென்றதனால், தமிழ் உரிமை பறி போயிற்று; கல்வி
நிலையங்களில் இருந்து தமிழ் விலகும் நிலை வந்து விட்டது. தமிழ்ப்
பற்றாளர்களே விழிமின்! எழுமின்! தமிழைக் காக்க விரைந்து செயல்படுமின்!
ஊர்கள்தோறும் தமிழ்க்காப்புத் தொண்டர்படை அமையுமின்! உயிர் கொடுத்தேனும்
உயிரனைய தமிழைக் காக்க வம்மின்!
- குறள்நெறி (மலர்: 4 இதழ்: 3): தை 18, 2002: 31.1.71
Comments
Post a Comment