தமிழ் வழியாகப் படித்தல் – பிறப்புரிமை : பேராசிரியர் சி.இலக்குவனார்
தமிழ் வழியாகப் படித்தலே தமிழர்
பிறப்புரிமையாகும். அதுவே அறிவைப் பெருக்கும் எளிய இனிய வழியாகும்.
ஆங்கிலேயரக்கு அடிமைப்பட்ட நம் நாட்டிலேயன்றி வேறு எங்கணும் வேற்று
மொழியாகப் படிக்கும் இயற்கைக்கு மாறுபட்ட நிலையைக் காண இயலாது.
தமிழர் தமிழ் மொழி வாயிலாகப்
படித்தலே தக்கது என்பதனை எல்லாரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆட்சியாளர்கள்,
பல்கலைக்கழகத்தினர், கல்லூரி நடத்துகின்றவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள்
ஆகிய அனைவரும் தமிழ்வழியாகப் படித்தலைக் கொள்கையளவில் ஏற்றுக்
கொண்டுள்ளனர். ஆனால் செயலில் காட்ட முன்வருவதற்கு அஞ்சுகின்றனர்.
தமிழ்வழியாகப் படிக்க வருவோர்க்கு
உதவித் தொகையும் பிற வசதிகளும் அளிப்போம் என்று கூறியும் மாணவர்கள்
முன்வந்திலரே என்கின்றனர் ஆட்சியாளர்கள். இப்போதுள்ள விதிமுறைகளின்படியே
விரும்புவோர் தமிழ் வழியாகப் படிக்கலாம் என்கின்றனர் பல்கலைக் கழகத்
துணைவேந்தர். எம் கல்லூரியில் மட்டும் தமிழ் வழியாகக் கற்பிக்க முன்வந்தால்
மாணவர்கள் தொகை குறைந்து விடுமே என்று அஞ்சுகின்றனர் கல்லூரி
நடத்துகின்றவர்கள். தமிழ் வழியாகக் கற்பித்தலே எளிது; ஆனால், அவ்வாறு
கற்பிக்க எங்கட்கு உரிமையில்லையே என்கின்றனர் பேராசிரியர்கள். தமிழ்
வழியாகப் பயின்று பட்டம் பெற்றால் எங்கட்கு அரசுப் பணிமனைகளில் இடம்
கிடைக்கும் என்ற உறுதியில்லையே என்று ஏங்குகின்றனர் மாணவர்கள்.
இன்று கல்வியின் உண்மைக் குறிக்கோளை
எல்லாரும் மறந்து விட்டனர். படித்துப் பட்டம் பெற்றுப் பணிமனைகளில்
அமர்ந்து ஊதியம் பெறுவதற்கு உதவுவதே கல்விப் பயிற்சி என எண்ணுகின்றனர்.
ஆகவே, இப் பொழுதுள்ள சூழ்நிலையில் ஆங்கிலத்தின் வழியாகப் படித்துப் பட்டம்
பெற்றால்தான் வேலை கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஆங்கிலத்தின் வழியாகப்
பயின்றோரே உயர்ந்தோர் எனவும் தமிழ் வழியாகப் பயின்றோர் தாழ்ந்தோர் எனவும்
அலுவலக வட்டாரங்களில் கருதுவோர் உளர். கல்வியின் குறிக்கோள் அலுவலகங்களில்
பணிபுரிவதே எனக் கருதுகின்ற நிலை நீடிக்கின்றபோது தமிழ் வழியாகப்
படித்தோர்க்குப் பணிமனைகளில் தவறாது இடம் கிடைக்கும் என்ற உறுதி ஏற்படச்
செய்தல் வேண்டும். தமிழை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்டுள்ள தமிழ் நாட்டரசு
தமிழ் வழியாகப் படித்தோர்க்கே அரசு அலுவலகங்களில் முதலிடம் தருவோம் என்று
அறிவித்தற்கு முன்வந்திலது. மாறாகத் தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பம்
செய்வோர்க்குத் தமிழறிவு கட்டாயமில்லை என்று விளம்பரப்படுத்தியுள்ளது.
ஆகவே, தமிழ் வழியாகப் படித்தல் வேலை பெறுவதற்கு உதவி செய்யாது என்று
மாணவர்கள் கருதுகின்றனர். தம் மக்கள் படித்துப் பட்டம் பெற்று ஏதேனும் ஒரு
வேலையிலமர்ந்து பொருளீட்ட வேண்டுமென்று கருதுகின்ற பெற்றோர்களும்
ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கவே தூண்டுகின்றனர்.
எனவே, இயற்கைக்கு மாறுபட்ட
வேற்றுமொழி வாயிலாகக் கற்றலைத் தடுக்க வேண்டுமென்றால் தமிழக அரசுப் பணிகள்
தமிழ் வாயிலாகப் படித்தோர்க்கே முதலில் கிடைக்கும் என்று தமிழக அரசு
அறிவித்தல் வேண்டும். தமிழர் தமிழ் வழியாகப் படித்தலே இயற்கையொடு பொருந்திய
எளிய இனிய நெறியாகும். ஆதலின் அதனை மாணவர் விருப்பத்திற்கு விடாது
கல்லூரிகள் அனைத்திலும் எல்லா வகுப்புகளிலும் இனித் தமிழே பாடமொழி என அரசு
ஆணை பிறப்பிக்க வேண்டும். உயர்நிலைக் கல்விக் கூடங்களில் அவ்வாறுதான் தமிழ்
பாடமொழி யாக்கப்பட்டது. அதே முறையைக் கல்லூரிகளில் பின்பற்ற
முன்வராமலிருப்பது ஏன்?
இந்தியக் கூட்டரசின் அலுவல் மொழியே
பல்கலைக்கழகப் பாடமொழியாக இருத்தல் வேண்டும் என வடநாட்டுத் தலைவர்கள் பலர்
கருத்து அறிவித்துள்ளனர். அஃதாவது இந்தியே பல்கலைக்கழகப் பாடமொழியாக
ஆக்கப்படவேண்டும். ஆங்கிலத்தினிடத்தில் இந்தியே அமர்தல் வேண்டும்
என்பதுதான் அவர்கள் விருப்பம். அதற்குத் துணை செய்யவே நம் ஆட்சியாளர்கள்
தமிழைப் பாடமொழியாக்காது தட்டிக் கழித்து வருகின்றனர் என எண்ண
வேண்டியுள்ளது. உண்மையாக அவ்வெண்ணம் நம் ஆட்சியாளர்க்கு இல்லையானால் உடனே
தமிழைப் பாடமொழியாக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். புத்தகங்கள் இல்லையென்றோ
தரம் குறைந்து விடும் என்றோ கூறுவது சற்றும் பொருந்தாது. உயர்நிலைக்
கல்விக் கூடங்கட்கும் இவ்வாறுதான் கூறிவந்தனர். தமிழ்தான் பாடமொழி என்றதும்
புத்தகங்கள் குவிந்தன. தரமும் கெட்டுப் போகவில்லை. முன்பினும்
இப்பொழுதுதான் உயர்நிலைக் கல்விக் கூடத்தில் பயின்று வெளிவரும் மாணவர்கள்
சிறந்து விளங்குகின்றனர். ஆதலின் தமிழக அரசைத் தலைசாய்த்து வணங்கி வேண்டு
கின்றோம், உடனே தமிழைப் பாடமொழியாக்குக என்று.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இதனை
வற்புறுத்தல் வேண்டும். காங்கிரசுக் கட்சிகூட இதில் ஈடுபடுவது மிகவும்
பொருத்தமாகும். காந்தியடிகள் போற்றிய நெறிதான் அவரவர் மொழிவழியாகப் பாடங்
கற்க வேண்டும் என்பது. காந்தியடிகள் வழி நிற்கும் காங்கிரசுக் கட்சியினர்
தமிழ்ப் பாடமொழியை வற்புறுத்துதல் தவறாகாது.
வேற்று நாட்டார் ஆட்சியினால் உண்டான
பல தீமைகளுள் மிகக் கொடியது இந்திய இளைஞர்கள்மீது அழிவைக் கொடுக்கும்
அயல்மொழியைப் பாமொழியாகச் சுமத்தியதே என வரலாறு கூறும். அது நாட்டின்
ஆற்றலை உறிஞ்சி விட்டது. மாணவர்களின் வாணாளைக் குறைத்து விட்டது. அவர்களை
நாட்டு மக்களினின்றும் வேறுபடுத்தித் தனிமைப்படுத்தி விட்டது. அதனால் கல்வி
வீணான செலவு மிகுந்த ஒன்றாகிவிட்டது. இது தொடர்ந்து நீடிக்குமேயானால் நமது
நாட்டின் ஆன்மாவையே கொள்ளை கொண்டு போய்விடும். அயல் பாட மொழியின்
மயக்கத்திலிருந்து கல்வி கற்ற இந்தியர்கள் எவ்வளவு விரைவில்
விடுபடுகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கட்கும் மக்கட்கும் நல்லதாகும்
(Young India 5.7.1929)
காந்தியடிகள் வழியில் செல்லுகின்றோம்
என்று கூறும் காங்கிரசுக் கட்சி நாட்டை ஆளுகின்ற இந்நாளில் அடிகளின்
வழிநின்று தமிழைப் பாடமொழியாக்க வேண்டாமா?
காந்தியடிகள் வற்புறுத்திய கொள்கையை
மக்களிடையே பரப்பத் திட்டமிட்ட நம்மை இந்தியக் காவல் சட்டத்தின் கீழ்ச்
சிறைப்படுத்தியுள்ளது நம் அரசு. இக் கொள்கையை உளமார ஏற்றுக் கொண்டவரைப்
புரவலராகவும் தலைவராகவும் ஏற்றுக் கொண்டுள்ள கல்வி நிறுவனம் நம்மைக்
கல்லூரியிலிருந்து நீக்கியுள்ளது. தமிழ் உரிமைக்காக நாட்டு மக்களின்
நன்மைக்காக யாம் படும் துன்பங்களை இன்பங்களாகவே கருதுகின்றோம். தமிழைப் பாட
மொழியாக ஆக்கும் கொள்கையை மக்களிடையே பரப்ப முற்பட்ட நமக்கு ஏற்படும் இவ்
வின்னல்களைத் தாங்குவதைவிடப் பெரும் பேறுண்டோ?
மாணவமணிகளே! மீண்டும்
வேண்டுகின்றோம். தமிழ்ப் பாடமொழி வகுப்புகட்கே செல்லுங்கள். தமிழ் வழியாகவே
கற்பிக்க வேண்டுமென்று ஆசிரியர்களை வேண்டுங்கள். எளிதிற்புரியும் இனிய
தமிழ்மொழி வழியாகக் கற்று அறிவைப் பெருக்குவதை விடுத்து விளங்காத
வேற்றுமொழி வழியாக நெட்டுருப் போட்டு ஒப்புவிப்பது கனியிருக்கக் காய்
கவர்ந்ததை ஒக்கும் பேதைமையன்றோ? ஆகவே, தமிழ்வழியாகப் பயின்று தலைமை
மக்களாய் உலகப் புகழ்பெற முந்துங்கள்.
Comments
Post a Comment