தமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்

தமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்

thamizh_vazhka01
                எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
                எண்ணுவம் என்பது இழுக்கு.
  தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் இன்னும் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது மிக மிக வருந்ததக்கது; நாணத்தக்கது. உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை.
  நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளோம். ஆன்ற அறிவும் ஆள்வினையும் அற்றுள்ளோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய நாம், இரு நூறாண்டுகட்குக் குறைந்த வரலாற்றினுடைய நாடுகளின் நல்லன்பை நாடி உதவி பெற வேண்டிய நிலையில் உள்ளோம். ஆகவே உடனே கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என்று கூறுவதில் பொருந்தாத் தன்மையோ, புதுமையோ புரட்சியோ இருக்க இடமின்று.
  உயர்நிலைக் கல்விக் கூடங்களில் என்று தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வந்தோமோ அன்றே கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்று மொழியாக்கியிருக்க வேண்டும். உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழைப் பயிற்று மொழியாக்கிய பிறகு, கல்விக்கூட மாணவர்கள் பலவகையிலும் மேம்பட்டுக் கல்வியில் சிறந்து விளங்குவதைக் காண்கின்றோம். உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ் வழியாகப் படித்துவிட்டு வரும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதையறிந்து ஒன்றும் விளங்கிக் கொள்ள இயலாது, சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கித்  தேடிவந்த அறிவினைப் பெறாது அல்லல் உறுகின்றனர். ஆசிரியர்கள் கொடுத்த குறிப்புகளை மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெற முனைகின்றனர். இந்நாட்டுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் புகுமுக வகுப்புத் தேர்வில் 30 விழுக்காட்டுக்கும் குறைந்த எண்ணிக்கையினரே வெற்றி பெறக்காரணம் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி கற்பதேயாகும். பெரும் பொருட்செலவில் உயர்கல்வி அளிப்பதன் பேரால் ஆண்டுதோறும் அறிவுத்துறையில் ஒன்றும் அறியாதவர்களையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இவ் வவலநிலையை உடனே ஒழித்தாக வேண்டும்.
  தமிழில் பாடப் புத்தகங்கள் இல்லை என்பர். தமிழில் அறிவியல் பாடப் புத்தகங்களை இயற்றுவதற்கு, பல்கலைக் கழகங்களும் அரசும் தக்க திட்டங்களை வகுத்துக் கொள்ளாது வாளா இருந்துவிட்டன. இன்ன ஆண்டிற்குப் பிறகு தமிழில்தான் கற்பிக்கப்படும் என்று அறிவித்திருந்தால் கூட தனியார் துறையினர் தமிழில் பாட புத்தகங்கள் வெளியிட முன்வந்திருப்பர். அரசு அதுவும் செய்திலது. ஆயினும் அதற்காக நாம் தமிழ் வழியாகக் கற்பித்தலைத் தள்ளிப்போட இயலாது. ஆசிரியர்கள் ஆங்கில நூல்களைப் படித்து தமிழில் சொல்லிக் கொடுப்பார்கள். மாணவர்களும் ஆங்கில நூல்களைக் கற்று அறிவினைப் பெருக்கிக் கொள்வர். ஆகவே தமிழில் பாடப்புத்தகம் இல்லை என்பது பொருந்தாக் கூற்றாகும்.
  தமிழ் வழியாகப் படித்தால் வெளிநாடுகளில் வேலை கிடைக்கப்பெறாது வருந்துவரே என்பர். கல்வியின்Ilakkuvanar+04 நோக்கம் வேலை தேடிப் பிழைப்பதற்கு என்பதே தவறு. அன்றியும் எங்கும் அந்தந்த நாடுகளில் அந்தந்த நாட்டினர்க்கே வேலை என்ற உணர்ச்சி மேலோங்கி நிற்பதைப் புறக்கணிக்க முடியாது. அதனையும் கடந்து வேலை கிடைப்பதற்கு உதவியாக உலகப் பொதுமொழியாம் ஆங்கிலத்தைக்  கற்க நம் கல்லூரிகளில் வசதியுண்டு. ஆகவே தமிழைப் பாடமொழியாக ஆக்குவதற்கு வேலைவாய்ப்பினைத் தடையாகக் காட்டுவதும் பொருந்தாது.
  தமிழ் வழியாகப் படித்ததற்கு மாணவரே முன் வந்திலரே என்பர்.
 சில கல்லூரிகளில் சில பாடங்களை விரும்பினால் தமிழிற் படிக்கலாம் என்ற திட்டமொன்றைக் கொண்டு வந்து தோல்வியுற்றதைக் கூறுவர். தமிழின் வழியாக விளங்கிப் படிப்பதை எந்த மாணவரும் விரும்பாதிருக்கமாட்டார். இத்திட்டத்தை மாணவர் விரும்பிலர் எனில்  அத் திட்டத்தில் ஏதோ குறைபாடு இருக்கின்றது என்றுதான் கருதல் வேண்டும். அக் குறைபாட்டையறிந்து களைய முற்பட வேண்டும்.
  தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட பிறகு தமிழ்வழியாகப் படித்துப் பட்டம் பெற்றோர்க்கே ஆட்சித்துறையில் இடம் அளித்தல் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு அரசு இதற்கு மாறாகச் செயல்புரிந்து வருகின்றது. தமிழக அரசுத்துறையில் பணிபுரிய முன்வருவோர்க்குத் தமிழறிவு இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றது. தமிழ் வழியாகப் படித்து வருவோரை இவ்வாறு ஒதுக்கினால் எங்ஙனம் தமிழ் வழியாகப் படிக்க முன்வருவர்? ஆதலின் தமிழ் வழியாகப் படித்தோர்க்கே தமிழக அரசுத் துறையில் முதலிடம் என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும்.
  ஆங்கிலத்தின் வழியாகவும் படிக்கலாம் என்ற நிலையை வைத்துக் கொண்டு அதன் வழியாகப் படித்து வருவோர்க்கே மதிப்பும் தந்து கொண்டிருந்தால் தாழ்த்தப்படும் தமிழ்வழியாகப் படிக்க எவர் முன்வருவர்? எனவே உயர்நிலைக் கல்விக் கூடங்களில் செய்தது போல் கல்லூரிகளிலும் இனித்தமிழ் வழியாகவே கற்பிக்கப்படும் என்ற ஆணையை உடனே அரசு பிறப்பித்தல் வேண்டும்.
  தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு கல்லூரிகளில் பாடம் கற்பித்தாலன்றி நம்நாடு முன்னேறாது. பேரறிஞர்கள் தோன்றும் வாய்ப்பு ஒருநாளும் ஏற்படாது. நாடென்ப நாடா வளத்தன எனும் வள்ளுவர் மறைக்கு இலக்காக இலங்காது. ஆகவே கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுமொழியாக்கும் திட்டத்தை  உடனே கொண்டு வருமாறு அரசை அன்போடு வேண்டுகிறோம்.
kuralneri02
குறள்நெறி (மலர் 2 இதழ் 8): சித்திரை 19, 1996: 1.05.1965

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்