Skip to main content

திருக்குறளும் பொது நோக்கமும் 2 – சரவண ஆறுமுக(முதலியா)ர்

திருக்குறளும் பொது நோக்கமும் 2 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்


thirukkural02
  ஒழுக்கமுடையோர் விழுப்பமடைவர் என்பதனைத் தம் வாழ்க்கையிலேயே நடத்திக்காட்டி, ‘கூடா வொழுக்க’த்திற் கண்டிக்கப்பட்ட போலித் துறவொழுக்கம் உலகத்தாரை ஏமாற்றுவதற்கே உரியது என்பதனையும் உலகத்துக்குப் போதித்து ‘மனத்துக்கண் மாசிலராகிக்’ குணமென்னும் குன்று ஏறி நின்ற திருவள்ளுவர், அனைவரும் ஏற்றுக் கொண்டு கையாளுதற்குரிய ஒழுக்கமுறை வகுத்தது ஒருவியப்பன்று, தம் வாழ்க்கைப் பட்டறிவையே யாம் பெற்ற பேறு பெறுக இவ்வகையம் என்று சுரந்தெழும் அருள் மிகுதியினால், திருவள்ளுவர் அனைவரும் உய்யுமாறு ஒப்பற்ற ஒழுக்க முறையாக திருக்குறள் மூலமாக நமக்கு அருளிச் செய்தார் என்பதிற்படும் இழுக்கொன்றுமில்லை. சிறந்த ஒழுக்கமுறை வகுத்த இக்காரணத்தால் இவரைத் ‘தமிழ்நாட்டு சாக்ரடிசு’ என்று கொள்வோருமுண்டு.
  தெய்வப் புலவர் அருளிய பொது முறை உலகத்தெழுந்த ஒழுக்க நூல்கள் பலவற்றிலும் தலை சிறந்து விளங்குகிறது. உயரிய கொள்கைகளையும், இவர்தான் கையாளுவதென்ற வரையறையின்றி, உலகத்து மக்கள் எல்லோருமே ஒருங்கே ஏற்றுக் கொண்டு ஒழுகும் முறையையும் கொண்டுள்ள ஒரு நூல் எம்மொழியில் எழுதப்படினும் அது அனைவராலும் போற்றிப் படிக்கப்பட்டுப் பல்வேறு மொழிகளிற் பெயர்த் தெழுதவும் படுகிறது. சாதி, சமய, கால தேசப் பிரிவுகளைப் பொருட்படுத்தாது சிறந்த ஒழுக்கமுறையை எல்லாருக்கும் பொதுவாக எடுத்துக் கூறிச் செல்வதே இதற்குரிய காரணமாகும். இக்காரணம் பற்றியே திருக்குறள் உலகோர் அனைவராலும் போற்றப்படுகிறது என்று கூறுவது மிகையாகாது. பரந்த நோக்கமும் விரிந்த பார்வையும் அமைந்த நம்மாசிரியர் – கைம்மாறு கருதாது தனக்கெனவும் வாழாது பிறர்க்கெனவே வாழ்ந்த திருவள்ளுவர், தம் வாழ்க்கைப்பட்டறிவுகளையும் நினைத்த எண்ணங்களையும் கருத்துகளையும் பேசிய ஞான உரையாடல்களையும் அறிவுரைகளையுமே பிறரும் அறிந்து கொள்வான் வேண்டித் திருக்குறளில் பெய்து வைத்துள்ளாராதலின் இந்நூல் முழுவதும் ஒருமை (சமரச) மணம் வீசிக் கொண்டிருக்கிறது. நூல் தொடக்கத் திலிருந்து முடிவு வரையிலும் இம்மணமே உள்ளது. இல்லறம் நடத்தும் முறையும் தூய துறவறமாகிய சமய நெறியும் சமுதாய ஒழுக்கமுறையும், இல்லறத்துக்கு முன்பு தலைவன் தலைவியர் மேற்கொண்டு ஒழுகிய களவு முறையும் அரசனும் அவனது அமைச்சர்களும் மேற்கொள்ள வேண்டிய அரசியல் முறைகளும், இன்னோரன்ன பிறவும், சுருங்கக் கூறின் மக்கள் வாழ்க்கையின் ஒப்பற்ற முழு இலட்சியமும் ஆசிரியரால் பொது நோக்கங்கொண்டே புகலப்படுகின்றன. தமது காலநிலையை ஒட்டியே, தாம் கூறவந்த செய்தியைத் திருவள்ளுவர் தமிழ்நாட்டார் மட்டுமன்றி உலகோர் அனைவரும் ஒப்புக் கொள்ளுமாறு சமரசம் ததும்பி ஊற்றெடுத்தோடி, அனைவரும் அள்ளிப் பருகி உய்யப் பொதுமறை எழுதியுள்ளார். அவர் வகுத்த ஒழுக்கமுறை தமிழ் நாட்டோடு மட்டும் தன் செல்வாக்கை நிறுத்திக் கொள்ளாமல் உலகு முழுவதும் ஒரு தனிச் செங்கோல் ஓச்சி வருவதும், நம் மொழிக்குள்ள ஒரு பெருங்சிறப்பாகும். தமிழ் உலகில் தோன்றிய எத்தனையோ நூல்கள் அழிந்து, உருத்தெரியாமல் மாறுபட்டுப் போக, தன்னகத்தே கொண்டுள்ள பொது நோக்கப் பெருமையால், திருக்குறள் மட்டும் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்பிறையே போன்று நாள்தோறும் பெருமை குறையாது மேன்மேலும் வளர்ந்து கொண்டே வந்து உலகத்தினர் அனைவருக்கும் பயனைச் செய்து வருகிறது. இலத்தின் போன்ற பண்டைக்கால ஐரோப்பிய உயர்தனிச் செம்மொழிகளிலும், செர்மன், பிரெஞ்சு போன்ற தற்கால ஐரோப்பிய மொழிகளிற் சிறந்தவற்றிலும், சிறப்பாக, ஆங்கில மொழியிலும் தென்னாட்டு மொழிகளிலும், இந்தியிலும் இந்நூல் பெயர்த்தெழுதப்படுமாயின் இதன் பெருமையை யாரே கணித்தறிய வல்லார்? வடமொழியிலும் இதன் மொழி பெயர்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள்.
‘‘எல்லாப் பொருளும் இதன் பாலுள; இதன் பால்
இல்லாத எப்பொருளுமில்லையால்’’
என்னும் திருவள்ளுவ மாலையடிகள் இதன் பெருமையைத் தொகுத்துக் கூறுவன.
  இனி, இத்தமிழ் மறையின் பொதுத் தன்மையைப் பற்றிப் பிறபுலவர்கள் கூறுவதென்ன என்று சில புறச் சான்றுகள் காட்டுவோம். பண்டு தொட்டு இன்று காறும் இதன் சமரசத்தைத் தமிழ்ப் புலவர்களும் பிறரும் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். மேல்நாட்டு அறிஞர் ஆராய்ச்சியாளர் பலரிலும் M.Ariel என்பார் (Journal Asiatique 1848) இதைப்பற்றிக் கூறுவது போற்றிப் படித்தற்குறியது.
  ‘தமிழ் இலக்கியத்தின் தலைமை வாய்ந்த நூலாகும் திருக்குறள். மனிதனின் மிக உயர்ந்ததும் தூயதுமான கருத்து வெளிப்பாடுகளில் ஒன்றாகும் தனிப்பட்ட சாதிகள், இனங்கள், அல்லது கொள்கைகள் என்று வேறுபடுத்திப் பார்க்காமல் மனித குலம் முழுவதற்குமே திருவள்ளுவர் அறம் வகுக்கின்றனர் என்னும் உண்மையே எல்லாவற்றிலும் திருக்குறளில் வியக்கத்தக்கதாயிருக்கிறது.  எல்லாரும் ஒத்துக் கொள்ளக்கூடிய மிகவுயர்ந்த அறநெறியையும், அனுமானத்தையும் கொண்டிருக்கிறது. தூய்மையையும் வாய்மையையும் மிகவும் நுண்ணிய முறையிலும் ஆழ்ந்தும் எடுத்தியம்புகின்றது இல்வாழ்க்கை, சமுதாய வாழ்க்கைகளின் மிகவுயர்ந்த முறைகளை வகுக்கின்றது’’ என்பது அது.
  எனவே, இச்சீரிய நூல் எச்சாதியினர்க்கும், எச் சமயத்தாருக்கும் எக்காலத்தாருக்கும் பொதுவாகிய உண்மைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தனி நூலாக இருக்கிறது. சில நூல்கள் தாம் எழுந்த காலத்து வாழும் மக்களின் கருத்தைக் கவரும் பொருள் பற்றிக் கூறிச் செல்கின்றன. பிற்காலத்துத் தோன்றுவோரின் கருத்துக்களும் இலட்சியங்களும் மாறிவிடுகின்றன. ஆனால் எக்காலத்தும் பொருந்தக் கூடிய உறுதிப்பாடுகளைத் தெரிவிக்கும் நூல் முக்காலத்தும் நின்று நிலவும். பிறவுப் பேறுகளாகிய அறம் பொருளின்பங்களையும், அவற்றின் மூலமாக வீட்டின் திறத்தையும், தெரிந்த திருவள்ளுவர் செய்த நூல் ‘எக்காலத்திலும் மாறாப் பயன் தரும் மாண்புடை நூலாக விளங்குகிறது’. இதைக் ‘காலங்கடந்த நூல்’ என்றே கூறிவிடலாம்.
  இதைப் போன்றே திருக்குறள் சாதிப் பொது நூலாகவும் விளங்குகிறது. நான்கு வருணங்களாகிய சாதிப் பிரிவைப் பரிமேலழகர் தம் உரையில் புகுத்திப் பல விடங்களில் வலிந்து பொருள் கொள்ளினும், நான்கு வருணங்களைப் பற்றியும் அவை தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்ளத் தக்கவை என்றும் தம் நூலில் ஆசிரியர் யாண்டும் கூறினாரில்லை. ‘‘சமன் செய்து சீர் தூக்கும் கோல்’’ போலவே நீதிகளை வகுத்து அனைவரையும் ஒருமைக் கண் கொண்டு பார்க்கின்றார். இந்நூலுக்கு எல்லோரும் உரியர். இத்தன்மையைக் கீழ்க்காணும் திருவள்ளுவமாலை வெண்பாக்கள் இனி விளக்குகின்றன.
 ‘‘ செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே – செய்யா
வதற்குரியா ரந்தணரே யாராயினேனை
யிதற்குரிய ரல்லா தாரில்’’
-   வெள்ளிவீதியார்
(தொடரும்)
குறள்நெறி: ஆடி 17,1995 /ஆகசுட்டு 1, 1964 
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்